தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இஞ்சி

  • மருந்தாகப் பயன்படும் விலங்கினப் பொருட்கள்

    முனைவர் மரு.பெ.பாரதஜோதி
    இணைப்பேராசிரியர்
    சித்த மருத்துவத்துறை

    மயில்:

    - மயிலிறகுச் சாம்பல் விக்கல் நோய் தீர்க்கும்.

    - மயிலிறகால் செய்யப்படும் பற்பத்தால் முதுகு வலி, மூச்சடைப்பு, வியர்வை போன்ற நோய்கள் நீங்கும்.

    - மயில் கறியைச் சமைத்து உண்டு வந்தால் கீல்வாயு, வாத சுரோணிதம் போன்ற நோய்களைத் தீர்க்கும். நல்ல பசியை உண்டாக்கும்.

    - மயில் கறியுடன் சதாப்பூத் தழை சேர்த்து குடிநீரிட்டுக் குடித்து வர மேக சூலை, வயிற்றுப் பொருமல், வலி தீரும்.

    - மயில் என்பு வெண்குட்ட நோயைத் தீர்க்கப் பயன்படுகிறது.

    மண்புழு:

    - மண்புழுவைச் சுத்தி செய்து காயவைத்துச் சூரணம் செய்து, முந்திரிப் பழச் சாறில் அளவுப்படி கொடுத்து வர கல்லடைப்பு தீரும்.

    - மண்புழுவைப் பச்சையாக அரைத்துப் பூசி வந்தால் அறுந்த நரம்புகள் கூடும்.

    - மண்புழுவில் சிறிதளவு செம்புச் சத்து இருப்பதால் இது சுவாச நோய்களுக்கு சிறப்பாகக் கொடுக்கப்படுகிறது.

    - மண்புழுவை மாமிச இரசங்களில் கலந்து குடிக்க தாது விருத்தி உண்டாகும்.

    ஆமை:

    - ஆமை ஓட்டைச் சிறு துண்டுகளாக்கிச் சுத்தம் செய்து கொள்ளவும், ஆமை ஓட்டை சுட்டுத் தூளாக்கிக் கொண்டு, அத்துடன் வசம்பு சுட்டகரி, பூண்டு, ஓமம், நுணா இலை, உத்தாமணி இலை, பொடுதலை, கிராம்பு, வெற்றிலைக் காம்பு இவற்றை எல்லாம் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கிக் குடிநீரிட்டு காலை, மாலை கொடுத்து வர குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம் தீரும்.

    - ஆமை ஓட்டுப் பற்பத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம், கண மாந்தம், மாந்த பேதி முதலியவை தீரும்.

    - ஆமைக் கறியுடன் சீந்தில் உப்புக் கூட்டிச் சமைத்து உண்டு வந்தால் உடலில் ஏற்பட்ட காயங்கள் தீரும்.

    - ஆமைக் கறிக்குக் கழிச்சல் நோய்களைப் போக்கும் தன்மை உண்டு. - ஆமை நெய்யை உள்ளுக்குக் கொடுக்க மூலநோய் தீரும்.

    - ஆமைக் கறியில் செய்யப்படும் லேகியம், மூலநோய் அகற்றும். தாதுவை விருத்தி செய்யும்.

    - ஆமை முட்டையைக் கக்குவான் நோய்க்குக் கொடுக்கலாம்.

    கோழி

    -முட்டை மஞ்சள் கருவிலிருந்து தயாரிக்கப்படும் அண்டத் தைலத்தை நாவில் தடவி வந்தால் நாவைப் பற்றிய வாதம் தீரும்.

    - அண்டத் தைலத்தைக் குங்குமப் பூ கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து வர வலிப்பு, நீர்க்கோவை நீங்கும்.

    - வில்வ வேருடன் சேர்த்துச் செய்யப்படும் அண்ட மெழுகு வாத சூலையைத் தீர்க்கும்.

    - முட்டை ஓடுகளால் (அண்ட பற்பம்) செய்யப்படும் பற்பம் அஸ்தி சுரத்தை நீக்கும்.

    மான்

    - மான் கறியால் ஈளை தீரும். கண் புகைச்சலும், பித்தமும் உண்டாகும்.

    - மான் கொம்பினால் செய்யப்படும் பற்பத்தால் கல்லடைப்பு, மார்பு நோய், இருமல் போன்ற நோய்கள் தீரும்.

    - மான் கொம்பைத் தேனில் இழைத்துக் கண்ணிலிட்டு வர படலங்கள் தீரும்.

    - சந்தனக் கல்லில் வெந்நீர் விட்டு மான் கொம்பை மைபோல் இழைத்து மார்பின் மேல் பூசி வர காயங்கள், மார்பு நோய், நெறிக்கட்டு தீரும்.

    நண்டு:

    - கடல் நண்டுக் கறியால் வயிற்றுவலி, கரப்பான், சொறி, இரத்தக் கழிச்சல் போன்ற நோய்கள் ஏற்படும்.
    - வயல் நண்டுக் கறியால் வாத நோய்கள், கப நோய்கள், கரப்பான், குடல் இரைச்சல் போன்ற நோய்கள் தீரும்.
    - நண்டுச் சாறால் சுரம், நீர்க்கோவை நீங்கும்.
    - வயல்களில் காணும் நண்டுக் குழி நீரை வடிகட்டி கொடுத்து வர உடல் வெப்பம், விக்கல், வாந்தி, தீராத தாகம், கக்குவான் போன்றவை விலகும்.

    சுறா மீன்:

    - சுறா மீன் பால் பெருக்கி, வாதமடக்கி, பிரசவ அழுக்கு அகற்றி போன்ற செய்கைகளை உடையது.
    - சுறாக் கருவாடு பத்தியப் பொருட்களில் ஒன்று.
    - சுறா மீனைக் குழம்பாகச் செய்து சாப்பிட்டாலும் முட்களை நீக்கிப் புட்டாகச் செய்து சாப்பிட்டாலும் பிரசவ அழுக்கை நீக்கி, பால் சுரப்பைத் தூண்டும்.
    - சுறா மீன் கல்லீரல் எண்ணெய் 4 மி.லி கொடுத்து வர உடலுக்கு வன்மை தரும். கண் பார்வை தெளிவடையும். மாத்திரை வடிவில் கடைகளில் கிடைக்கிறது.
    - சுறா மீன் கல்லீரல் நெய்யைத் தீச்சுட்ட புண், நாட்பட்ட புண், எண்ணெய்க் கொப்புளங்கள் போன்றவற்றின் மேல் தடவி வர விரைவில் குணமாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:09:41(இந்திய நேரம்)