தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இஞ்சி

  • ஆவாரை

    மூலிகைச் செயற் பண்புக்கூறுகளும் மருத்துவப் பயன்களும்

    முனைவர் வீ.இளங்கோ,
    உதவிப்பேராசிரியர்,
    சித்த மருத்துவத்துறை

    சித்த மருத்துவத்தில் ஆவாரை முக்கிய இடத்தை வகிக்கும் ஒரு மருத்துவ மூலிகை ஆகும். இதன் இலை, பூ, பட்டை, விதை, வேர் மற்றும் பிசின் ஆகிய அனைத்தும் தமிழ் மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகின்றன. இதனை அகத்தியர் குணவாகடம் உரைக்கின்றது. இதன் வேறு பெயர்கள் ஆகுலி, தலைபோடம், ஆவிரை, ஆவரை ஆகியவை ஆகும்.

    வேதியியல் செயற்பண்புக் கூறுகள்

    ஆவாரம் பூவில் பாலி பீனாலிக் மூலக் கூறுகள், பிளவனாய்டுகள், காட்டச்சின் மற்றும் புரோ ஆந்தோ சையாஸின் ஆகிய மூலக் கூறுகள் உள்ளதென கண்டறியப்பட்டுள்ளன. இவை உடலில் வளியேற்றம் ஏற்படுதலைத் தடுக்கும் ஆற்றல் பெற்றவை. இம் மூலிகை வேதிமங்கள் கணைய செல்களில் இன்சுலின் சுரப்பை தூண்டுவது கண்டறியப்பட்டுள்ளது, மேலும், இதன் வடிச்சாற்றில் ஆரிக்குலின், ஆரிக்குலோசிடின் ஆகிய முக்கிய குறியீட்டு வேதிமக்கூறுகளும் உள்ளன.


    இதன் இலையில் கொழுப்பு அமில எஸ்டர், டிரைடெர்பின் மற்றும், டைடெர்பின் ஆல்ககாலும், விதையில் ஹெக்ஸா டெக்நாய்க் மற்றும் ஆக்டா டெக்நாய்க் அமிலங்களும் உள்ளதென ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஆவாரம் பூவில் இருதய கிளைகோசைடும், ஸ்டீராய்டுகளும், டெர்பினாய்டுகளும் மற்றும் டெனின்களும், சப்பானின்களும் உள்ளதெனக் கண்டறியப்பட்டுள்ளன.

    மருத்துவப் பயன்கள்

    ஆவாரை, உடற்சூடு, ஆண்குறி எரிச்சல், எலும்புச்சுரம் மற்றும் வெள்ளை நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இதன் வேர், பட்டை, இலை, பூ மற்றும் விதைகளின் பொடி பஞ்சாகச் சூரணம் என்றழைக்கப்படுகிறது. இது நீரிழிவு நோய் மற்றும் இதர மேக நோய்கள் போக்கப் பயன்படுகிறது. இதன் விதை ஆண்மை பெருக்கியாகவும் பயன்படுகிறது. ஆவாரம் பூ, அழகியல் பொருட்களில் கற்றாழையுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது. நீர் வேட்கையைப் போக்குகிறது. பூவை சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு நல்ல நிறத்தை உண்டாக்கும். பெண்களுக்கு உண்டாகும் இரத்தப்போக்கு, வௌ¢ளை நோய் ஆகியவற்றுக்குப் பயன்படுகிறது. ஆவார விதை எண்ணை கண் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இலைச்சாறும் பூவும் புண்களை ஆற்றவும் மேக நோய் தீரவும் பயன்படுகின்றன. ஆவாரம் பூ இலை ஆகியவை கண் சிவத்தல் மற்றும் மேக நோய்களில் உண்டாகும் தோல் புண்களைக் குணப்படுத்த உதவுகின்றன.

    அறிவியல் ஆய்வுகள்

    பல்வேறு உலகளாவிய ஆய்வுகளில் ஆவாரம் பூ நீரிழிவு நோய் தீர்ப்பதுடன் இன்சுலின் சுரப்பை அதிகரிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. வௌ¢ளை எலிகளில் உண்டாக்கப்பட்ட கல்லீ¦ரல் நோய், அதிசுரம், வயிற்றுப் புண், ஆகிய நோய்களைத் தீர்ப்பது கண்டறியப்பட்டுள்ளது. பல்வேறு நோய்க் காரணியாக விளங்கும் வளியேற்ற நிலையைக் குறைக்கும் தன்மை ஆவாரம் பூவுக்கு உள்ளதெனவும், பல்வேறு காரணிகளால் உடலில் உண்டாகும் நச்சுதன்மையை நீக்குவது, உயிர்வேதியில், இரத்தவியல் மற்றும் நோய்க்குறியியல் ஆகிய ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் இலை புழுகொல்லியாகவும், தோலில் உண்டாகும் புண்கள் மற்றும் பெருநோயில் ஏற்படும் புண்களை ஆற்றவும் பயன்படுகிறது.

    தமிழ்ப் பல்கலைக்கழகச் சித்த மருத்துவத்துறையில் மேற்கொள்ளப்பட்ட மருந்தியல் ஆய்வுகள், ஆவாரம் பூவின் வடிசாறு ஆய்வக விலங்குகளின் குறுகிய கால மற்றும் நாற்பட்ட நீரிழிவு நோயினைத் தீர்த்து இரத்த சர்க்கரை அளவினைக் குறைப்பதும், இன்சுலின் சுரப்பினை அதிகரித்து கல்லீரல், கிளைக்கோசன் சேமிப்பை அதிகரிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கல்லீரரல் வளர்சிதை மாற்றங்களை ஆக்க வினைபுரிந்து நீரிழிவு நோயினைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், ஆவாரம்பூ ஆய்வக விலங்குகளில் ஆங்கில மருந்துகளால் உண்டாகும் சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்தும் மருந்தியல் செயல்திறன் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:10:02(இந்திய நேரம்)