தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இஞ்சி

  • முந்திரி

    மருத்துவச் செயற்பண்புக் கூறுகளும் மருத்துவப் பயன்களும்


    முனைவர் வீ.இளங்கோ,
    உதவிப்பேராசிரியர்,
    சித்த மருத்துவத்துறை


    சித்த மருத்துவத்தில் முந்திரியின் பழம், விதை, மற்றும் பட்டை ஆகிய பகுதிகள் மருந்தாகப் பயன்படுகின்றன. முந்திரிப் பருப்புடன் வாதுமைப் பருப்பையும் சேர்த்து உண்ணும் போது விந்து பெருக்கும் மற்றும் ஐம்புலன்களுக்கும் நன்மையை உண்டாக்கும். கொட்டையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், தோல் நோய்களைப் போக்கவும், பித்த வெடிப்புகளைப் போக்கவும் பயன்படுகிறது. முந்திரியின் வேறுபெயர் கொல்லம்.

    மூலிகை வேதிமச் செயற்பண்புக் கூறுகள்

    முந்திரியின் முதன்மையான உயிரியல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய செயற்பண்புக் கூறுகளாக இதன் இலை மற்றும் பட்டைகளில் உள்ள பாலிபீனாலிக் மூலக்கூறுகள் விளங்குகின்றன. முந்திரியின் இலை மற்றும் பட்டையிலிருந்து எடுக்கப்படும் வடிச்சாற்றில் அதிக அளவில் பாலிபினால்களும் அதற்கடுத்து ஆல்கலைடு, பிலேனாய்டு, ஸ்டீராய்டு டிரைடெர்மினாய்டுகளும் உள்ளன. மேலும், முந்திரிப் பட்டையில் சாந்தோ பூரோட்டீன்களும் உள்ளன. இவற்றுடன் தையமின், ஆவியாகக் கூடிய எண்ணெய்களும் உள்ளன. முந்திரியின் இலை, பட்டை விதையின் மேலோட்டில் அனக்கார்டியால் மற்றும் அனக்கார்டின் என்னும் இரு முதன்மை வேதிமங்கள் உள்ளன. இவையே முந்திரியின் குறியீட்டு வேதியம் ஆகும்.

    மருத்துவப் பயன்கள்

    முந்திரியின் பருப்பு ஆண்மை பெருக்கும் செய்கை உடையதாக விளங்குகிறது. முந்திரி எண்ணெய் பூச்சிக்கொல்லியாகவும் பித்த வெடிப்பை நீக்கவும் பயன்படுகிறது. பலவகை மருக்கள், பாலுண்ணிகள், படைகள் ஆகியவற்றைப் போக்க உதவுகிறது. வேர், பட்டை இவற்றின் குடிநீர் நீரிழிவு நோயைப் போக்க உதவுகிறது. மேலும், புண்களை ஆற்றவும் உடலில் ஏற்படும் நச்சத் தன்மையைப் போக்கவும் உதவுகிறது.

    அறிவியல் ஆய்வுகள்

    பல்வேறு ஆய்வகங்களில் மேற்கொண்ட அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் முந்திரியின் விதை மற்றும் பட்டை ஆகியவற்றில் பூஞ்சைக் காளானை அழிக்கும் தன்மை உள்ளதெனக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சில தோல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. முந்திரியின் அசிட்டோன் வடிசாறு பல வகை நோய்களின்போது உண்டாகும் பாக்டீரியா தொற்றுகளைப் போக்கவல்லதென கண்டறியப்பட்டுள்ளது.
    தமிழ்ப் பல்கலைக்கழகச் சித்த மருத்துவத்துறையில் மேற்கொண்ட உயிர் வேதிம மருந்தியல் ஆய்வுகளில் எலிகளுக்கு உண்டாக்கப்பட்ட அலாக்ஸான் நீரிழிவு நோயை முந்திரியின் பட்டை வடிசாறு போக்கவல்லது எனக் கண்டறியப்பட்டுள்ளது. முந்திரியின் கொட்டைச் சாற்றிலுள்ள பாலி பீனால்கள் இரத்தத்தில் உள்ள அதிசர்க்கரையின் நிலையைக் குறைப்பதுடன் கல்லீரல் கிளைக் கோஸன் சேமிப்பை அதிகரித்து உடலின் குளுக்கோஸ் பயன்பாட்டை அதிகரித்து நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், குறுகிய கால மற்றும் நாட்பட்ட வாத அழற்சி நோய் நிலையில் தோன்றும் ஹிஸ்டமைன், கைனின் மற்றும் புரோஸ்டோகிளான்டின் ஆகிய உயிர் வேதிமக் கூறுகளை கட்டுப்படுத்தி நோயைக் குறைக்க வல்லது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:10:33(இந்திய நேரம்)