தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கழுதைப் பால்

  • கழுதைப் பால்

    முனைவர் வ.ஹசீனாபேகம்
    பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
    சித்த மருத்துவத் துறை

    கழுதைப் பால் சிசுக்களுக்கான போஷாக்குடைய சிறந்த உணவாகும். தாய்ப்பாலுக்கு இணையான அனைத்து மூலப்பொருட்களும் இதில் உள்ளன. சித்த மருத்துவ நூலில் கழுதைப்பால் மிகுமதுரம் உடையது என்றும், வாதநோய், கரப்பான் புண், ரோகம், சொறி சிரங்கு, பித்ததோஷம், கபநோய் போக்கும் என்றும் கூறப்படுகின்றது.

    கழுதைப் பால் குளிர்ச்சியைக் கொடுக்கக்கூடியது என்றும் ஈளை போன்ற நுரையீரல் நோய்களுக்குச் சிறந்ததாகவும் கூறப்படுகின்றது. தாய்ப்பால் கிடைக்காத நிலையில் குழந்தைக்குக் கழுதைப்பால் புகட்டுவது எளிதில் செரிக்கக்கூடியதாகவும் உடல் ஆரோக்கியம் அளிக்கக்கூடியதாகவும் உள்ளது எனவும், இதில் பசும்பாலில் காணப்படும் கேசின் என்ற புரத அளவைவிட மிகக் குறைவான கேசின் புரதம் உள்ளது என்றும், இதில் லேக்டோகுளோபின் 3.7 மிகி/மிலி மற்றும் லேக்டோஆல்புமின் 1.8 மிகி/மிலி அளவு உள்ளதாகவும் அறிவியல் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    கழுதைப்பாலில் நெல்லிட்டு வைத்தால் கெடாது என்றும் கூறப்பட்டுள்ளது. ‘அழுதபிள்ளை சிரித்ததாம், கழுதைப்பால் குடித்ததாம்’ என்ற பழமொழியின் வாயிலாகவும், தாய்ப்பாலின்றி அழும் குழந்தைக்குக் கழுதைப்பால் கொடுத்தால் பசி அமர்ந்து அழுகையை நிறுத்தும் என்ற கருத்தாகக் கொள்ளுவதற்கான அறிவியல் ஆதாரங்கள் உள்ளன. எனவே, நவீன உணவு முறைகளால் ஏற்படும் தீங்கிலிருந்து பாதுகாக்க இயற்கை உணவுகளைப் பயன்படுத்தி சிசுக்களின் ஆரோக்கியம் காக்கலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:10:44(இந்திய நேரம்)