தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இஞ்சி

  • அகத்தி

    மூலிகை வேதிமச் செயற்பண்புக் கூறுகளும் மருத்துவப் பயன்களும்


    முனைவர் வீ.இளங்கோ,
    உதவிப்பேராசிரியர்,
    சித்த மருத்துவத்துறை


    அகத்தியின் வேறுபெயர்கள் அச்சம், முனி மற்றும் கரீரம். அகத்தியில் சாழை அகத்தி, சித்த அகத்தி, சீமை அகத்தி மற்றும் பல வகைகள் உள்ளன. சாதாரண அகத்தியில் செவ்வகத்தியென்ற சிவப்புப் பூவுடைய அகத்தியும், வெள்ளை பூவுடைய அகத்தியும் உள்ளன. அகத்தியின் இலை, பூ, பட்டை, வேர் ஆகியவை தமிழ் மருத்துவத்தில் மருந்தாகப் பயன்படுவதை அகத்தியர் குணபாடம், தேரையர் கரிசல் ஆகிய சித்த மருத்துவ நூல்களில் பல பாடல்களில் உரைக்கப்பட்டுள்ளது.

    மூலிகை வேதிமச் செயற்பண்புக் கூறுகள்

    அகத்தியின் மூலிகை வடிச்சாறில் ஆல்காலாய்டுகள் ஆவியாக்க் கூடிய எண்ணெய்கள், சப்பானியன்கள் மற்றும் பிளேவனாய்டுகள் ஆகிய மூலிகை வேதிமக் கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன. அகத்தியின் அசிட்டோன் வடிசாற்றில் அதிக அளவு பாலிபீனால்கள் மற்றும் பிளேவனாய்டுகள் உள்ளதெனக் கண்டறியப்பட்டுள்ளது. இம் மூலிகையின் பூ மற்றும் இலையிலிருந்து எடுக்கப்படும் பிளேவனாய்டு அதிகம் கொண்ட பகுதி வடிசாறு பாக்டீரியாக்களில் ஏற்படும் தோல் தொற்று நோய்களைக் குணப்படுத்துவதாக உள்ளது.

    அகத்தியின் மருத்துவப் பயன்கள்

    இக்கீரை பல்வேறு வீரியமான மருந்துகளின் நச்சுத் தன்மையை நீக்கவும் அதே நிலையில் மற்ற மருந்துகளின் செயல்திறனைக் குறைக்க வல்லது என்பதால் நோய்க்கு மருந்து உண்ணும் காலங்களில் இது விலக்கப்படுகிறது. தோல் நோய்கள் மற்றும் தலையில் உண்டாகும் நோய்கள், நீர்க்கோவை, தலைவலி ஆகியவற்றுக்கு வெளி உபயோகமாக இதன் சாறு பயன்படுகிறது. கண் நோய்களுக்கு அகத்திப் பூச்சாறு பயன்படுகிறது. இதன் பூவைச் சமைத்துண்ண பித்தம், புகையிலையினால் தோன்றும் நச்சுத் தன்மை தீரும். செவ்வகத்தி இலைச்சாறு பல்வேறு உலோகத் தாதுக்களில் செய்யப்படும் பற்ப செந்தூரங்களைச் சுத்தி செய்யப் பயன்படுகிறது. குறிப்பாகத் தாளகத்தைச் சுத்தி செய்து செந்தூரமாக்கும்போது பயன்படுகிறது. மூக்கின்வழி பெருகும் இரத்தப்பெருக்கை நிறுத்தல் செவ்வகத்திச்சாறு பயன்படுகிறது. இதன் வேர்ப்பட்டை மேக நோய்கள், ஆண்குறிப்புண்கள், வயிற்றுப்புண் மற்றும் கீல்வாத நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. அகத்தியின் இலையை உணவுப்பொருளாகப் பயன்படுத்தும்போது வயிற்றுப்புண், நீர்க்கடுப்பு தலைவலி ஆகியவற்றைக் குணமாக்கும். அகத்தி தைலம் தலையில் தேய்த்துவர கண்நோய்கள் குணமாகும்.

    அறிவியல் ஆய்வுகள்

    அகத்தியின் வடிச்சாறு பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை கொண்டுள்ளதை நுண்ணுயிரியல் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. பென்சிலின் மருந்துக்குத் தாங்கு திறனுடைய சில பாக்டீரியாக்களைக் கூட அகத்தியின் வடிச்சாறு கட்டுப்படுத்த வல்லதென கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ட்ரெப் காக்கஸ், இ கோலை ஆகிய பாக்டீரியாக்கள் பெருக்கமடையாமல் ஆபிசிலின் போன்று செயல்புரிவதாக அகத்தியின் பூ மற்றும் இலைச்சாறுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாகக் கண்ணில் தோன்றும் பாக்டீரியா தொற்றுக்கு அகத்திப்பூச் சாற்றிலிருந்து பெறப்படும் மூலிகை வேதிமங்களின் செயற்பண்புகொண்ட பகுதி வடிச்சாறு பயன்படுத்தப்படுவது அறிவியல் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழகச் சித்த மருத்துவத் துறையின் மருந்தியல் ஆய்வுகளில், வெள்ளை எலிகளுக்கு உண்டாக்கப்படும் குறுகியகால வாத சுழற்சி நோயைக் கட்டுப்படுத்தும் செயல்திறன் உள்ளதெனக் கண்டறியப்பட்டுள்ளது.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:12:49(இந்திய நேரம்)