தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இஞ்சி

 • கற்ப மூலிகைகள்

  முனைவர் மரு.பெ.பாரதஜோதி
  இணைப்பேராசிரியர்
  சித்த மருத்துவத்துறை

  நோயின்றி வாழவும், உடலைப் பாதுகாக்கவும் சித்தர்கள் கூறிச் சென்ற நெறிமுறைகளுள் காய கற்பமும் ஒன்றாகும். காய கற்பம் என்பது நம் உடலை நோயின்றிக் காக்கவும், நோய் வராமல் தடுக்கவும், நரை, திரை, மூப்பு, சாக்காடு இன்றி பாதுகாக்கவும் பயன்படும் பொருளாகும்.

  காய கற்பம் உண்ண விதிமுறைகள்:

  - கற்பம் உண்ண காலை வேளை சிறந்தது

  - அதிகப் பேச்சு, அதிகத் தூக்கம், அதிக நடை இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

  - கற்பம் உண்ண ஆரம்பிக்கும் போது கற்ப மருந்தை மிகக் குறைந்த அளவு உண்ண வேண்டும். பின் சிறிது சிறிதாக அதிகரித்து குறிப்பிட்ட நாள் வரை உண்ட பின் சிறிது சிறிதாகக் குறைத்து நிறுத்த வேண்டும்.

  - அபின், கஞ்சா, மாமிசம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

  - உப்பை வறுத்துப் பயன்படுத்த வேண்டும். புளிக்குப் பதிலாக நெல்லிக்காய், புளியாரை, புளியங்கொழுந்து போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

  மூலிகைக் கற்பங்கள்

  அறுகம் வேர்

  ஆறா அழலெல்லா மாறுமுத் தோடமது

  வீறா திருக்குநல்ல மேனிதரும் – மாறாக்

  கடியமர லங்கலணி காரளக மின்னே

  கொடியறுகம் புற்கிழங்கைக் கூறு

  அறுகம் வேரினைப் பொடித்து மூவிரல் அளவு ஒரு மண்டலம் வரை உட்கொண்டு வர வெப்ப நோய்களும், முக்குற்றப் பிணிகளும் நீங்கும்.

  இஞ்சி

  “இருந்தே னலங்கார மெய்தயின்று மீறி

  யிருந்தே னலங்கார மெய்தி – இருந்தேன்

  நீவி ரகசியமா நென்மா வுடன் கலந்து

  நீவி ரகசியமா நெய்”

  இஞ்சியைச் சுத்தம் செய்து, கீற்றாக வெட்டி தேனில் நன்கு ஊறவைக்கவும். காய கற்ப முறைப்படி மனத்திடத்துடன் உண்டு வர நரை, திரை, மூப்புகள் இன்றி வாழலாம். கண்களின் பார்வையை அதிகப்படுத்தும். கபத்தால் தோன்றிய நோய்களைப் போக்கும். பெருவயிறு எனும் நோய்க்கு இஞ்சிச் சாறை நாள் ஒன்றுக்கு 40 மி.லிட்டராக உயர்த்தி, 240 மி.லிட்டர் வந்த உடன் நோய் நீங்கும் வரை 240 மி.லி கொடுத்து வர பெருவயிறு தீரும்.

  - பத்திய உணவு

  நெற்பொரி மாவுடன், பசுவின் நெய் கலந்து உணவிற்குப் பதிலாக உண்ணவேண்டும்.

  அமுக்கரா :

  ………………………….

  ………………………… கோல

  நகுட வெருண்டுதிர நாட்டுவையேன் மேலை

  நகுட வெருண்டுறு வாழ் நாள் .
  அமுக்கிராக் கிழங்குப் பொடி, நெய் முதலியவற்றை உண்டு வர உறுதி, நீண்ட ஆயுள், அழகு முதலியவை உண்டாகும்.

  ஆலம்விழுதுக் கற்பம் :

  -ஆலம்விழுதுச் சாறுடன் கற்கண்டு கூட்டி 48 நாட்கள் கற்ப முறைப்படி உண்டு வர விந்து கட்டுப்படும். உடல் காயசித்தி அடையும்.
  ஆலம் பாலினைத் தேவையான அளவு எடுத்துக்கொண்டு அத்துடன் அறுகம்புல் சூரணத்தைச் சேர்த்துக் குழைத்து மூவிரல் அளவு 48 நாட்கள் உண்டு வர வெண்குட்டம் தீரும். சரீர ஒளி உண்டாகும். இதே போன்று ஆல மரத்தின் வேர், பழம் இவற்றையும் கற்ப முறைப்படி உண்டு வந்தால் உடல் பலமாகும்.

  விஷ்ணு கிரந்தி :

  விஷ்ணு கிரந்தியைப் பாலில் அரைத்து 48 நாட்கள் உண்டு வர என்பு சுரம் தீரும். கண் ஒளி அதிகமாகும். உடலில் ஏற்படும் வலிகள் அனைத்தும் தீரும்.

  தூதுவேளை:

  “திருக் குளத்தை நன்றாக்கித் தின்றுவையே னல்ல திருக் குளத்தை போலே திருந்துந் – திருக்குளத்தை யெல்லா மிரவுவினை யென்ன வருந் தூதுவளை யெல்லா மிரவுமினி யென்”

  தூதுவேளைக் கீரை, வேர், வற்றல், காய், ஊறுகாய் இவற்றை 40 நாட்கள் புசித்து வந்தால் கண்ணில் தோன்றும் தீக்குற்ற மிகுதி, மற்றக் கண்நோய்கள் அனைத்தும் தீரும்.

  தூதுவேளைப் பூவுடன் முருங்கைப் பூவைச் சேர்த்து சூரணம் செய்து, பசும் பாலுடன் கலந்து உண்டு வர தாது விருத்தி உண்டாகும்

  நன்னாரி::

  “அங்கா ரிகைமூலி யாச்சியத்தோ டுண்ணநித்தி
  யங்கா ரிகைமூலி யாளுமே – யங்காரி
  பற்றாது”

  நன்னாரியின் வேர், இலை, கொடி, காய், பூ இவைகளை நெய்விட்டு வதக்கி வறுத்துக் கொண்டு, புளி, உப்பு, மிளகு சேர்த்து துவையல், வடகம் போன்ற பொருட்களாக பாகம் செய்து 48 நாட்கள் உண்டு வர வெள்ளை, அக்குள் நாற்றம், வியர்வை நாற்றம் போன்றவை தீரும்.

  எலுமிச்சை:

  “கோணத் துளையுங் குறியுளையுங் கொக்காகிக்
  கோணத் துளையுங் குருளைபோற் – கோணச்
  சடமதியுண் மாறாமற் சம்பீரக் கற்பஞ்
  சடமதியுண் மாறாமற் கண்”

  எலுமிச்சம் பழத்தை ரசமும் ஊறுகாயுமாகக் கற்ப முறையாய்ப் பத்தியத்துடன் ஆறு மாதம் உண்டு வர நரை, திரை, மூப்பு மாறும். பெருவயிறு, பக்க சூலை, முடம், வெறி, மயக்கம், மனச் சோர்வு போன்ற நோய்களும் அடியோடு நீங்கும்.

  கடுக்காய்:

  ஏழு வகையான கடுக்காய்கள் உள்ளன. ஒவ்வொரு கடுக்காயும் ஒவ்வொரு நோயைத் தீர்க்கவல்லது. எடுத்துக்காட்டாக,

  விசயன் -வாத நோய்கள்

  ரோகிணி -சீதம் அகலும், வயிற்றில் உள்ள புழு நீங்கும்

  பிருதிவி -மலக்கட்டு

  அமிர்தகி -சதை ரோகம்

  சிவந்தி -மூலநோய்கள்

  திருவிதை -தேகம் வலுப்பெறும்

  அபயன் -மும்மலம் சுத்தம் அடையும்

  கடுக்காய் மேல் தோலைச் சூரணம் செய்து தேனுடன் உண்டு வர உடல் உரமாகும். கடுக்காய்த் தோலைப் பொடித்துக் கொண்டு ஒரு நிலக்கடலை அளவு நீருடன் கற்ப முறைப்படி புசித்து வந்தால் காமாலை நோய் அணுகாது.

  நெல்லிக்காய்:

  “மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள மாப்பிளை போலேயழகு வாய்க்குமே”

  மூப்படைந்தவரும், இளம் மாப்பிள்ளை போல் அழகுடன் இருக்க நெல்லிக்கனியைப் பாகஞ் செய்து உண்ணலாம்.
  நெல்லி மரப்பட்டை, வேர், விதை, காய், கனி இவற்றைச் சூரணம் செய்தோ, குடிநீரிட்டோ கற்ப முறைப்படி உண்டு வர நோயின்றி வாழலாம்.

  பலாப்பூ

  பலா மரத்தின் பூக்களைக் கொண்டு வந்து நன்கு காய வைத்துப் பொடித்து வைத்துக் கொண்டு, மூவிரல் கொள்ளும் அளவு தேனில் உண்டு வர நரைத்த மயிர் கருத்து விடும். உடல் வலுக்கும்.

  வல்லாரை

  வல்லாரையைக் காடியில் ஊறவைத்துச் சூரணம் செய்து உண்டு வந்தால் உடல் இளமையுடன் காணப்படும். நோய் வராது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:12:18(இந்திய நேரம்)