தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இஞ்சி

 • அழகியலில் பயன்படும் மூலிகைகள்

  முனைவர் மரு.பெ.பாரதஜோதி
  இணைப்பேராசிரியர்
  சித்த மருத்துவத்துறை

  செம்பருத்தி :

  செம்பருத்தி அழகுக்காக எல்லா வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது. இதன் அனைத்துப் பாகங்களும் மருத்துவ குணம் வாய்ந்தது. இதன் இலை, பூ போன்ற பகுதிகள் அழகியலில் பயன்படுகின்றன.

  செம்பருத்தி இலை:

  செம்பருத்தி இலையை நன்கு அரைத்து தலையில் தடவி, பத்து நிமிடங்கள் கழித்து குளித்து வர தலையில் உண்டாகும் பொடுகு நீங்கும். தலைமுடியும் பளபளப்புடன் காணும்.

  செம்பருத்திப் பூ :

  செம்பருத்தியின் பூவைக் குடிநீரிட்டுக் கொண்டு அல்லது சாறு எடுத்துக் கொண்டு அத்துடன் தேங்காய் எண்ணெய் கலந்து, நீர் வற்றும் வரை எரித்து தைல பாகத்தில் எடுத்து வைத்துக் கொண்டு தலையில் தடவி வந்தால் முடி நீண்டு கறுத்து வளரும்.

  செம்பருத்திப் பூவுடன், கரிசாலை, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து காய்ச்சி, தைலத்தைத் தலையில் தடவி வந்தால் முடி உதிராது. முடி அடர்த்தியாக வளரும்.

  எலுமிச்சை:

  - எலுமிச்சையின் பழம் ஒரு காய கற்ப மருந்தாகும். பழத்தைக் காய கற்ப முறைப்படி உண்டு வர உடலில் ஏற்படும் நரை, திரை, மூப்பு இவைகள் ஏற்படாது. உடல் என்றும் இளமையுடன் இருக்கும்.
  - எலுமிச்சைச் சாறை முகத்தில் தடவி காயவைத்து சிறிது நேரம் கழித்து கழுவி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளபளப்பாகும்.
  - எலுமிச்சைச் சாறுடன், பன்னீர், பாலேடு இவற்றைக் கலந்து முகத்தில் தடவி வர முகம் பளிச்சென்று அழகாகக் காணப்படும். முகச்சுருக்கம் நீங்கும்.
  - எலுமிச்சைப் பழச்சாறில் சரக்கொன்றைப் பூவைச் சேர்த்து நன்கு அரைத்து உடலில் தேய்த்துக் குளித்து வர தோல் சுருக்கம் மறையும். தோல் நோய்கள் நீங்கும்.
  - எலுமிச்சைச் சாறுடன் இஞ்சிச் சாறு சேர்த்துக் குடித்து வர உடல் எடை குறையும்.
  - எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து விரல் நகங்களில் கலந்து தடவி வர நகம் பளபளப்புடன் காணும்.

  கற்றாழை :

  - கற்றாழை மடலில் உள்ள சோற்றுப் பகுதி அழகியலில் பயன்படுகிறது.
  - கற்றாழை மடலின் உள்ளே வெந்தயத்தை வைத்து நூலால் கட்டி வைத்தால் வெந்தயம் முளைத்து வரும். பின் முளைத்த வெந்தயத்தை எடுத்து எண்ணெயில் போட்டுக் காய்ச்சி தைலத்தைத் தலைக்குத் தடவி வர முடி நன்கு வளரும். செம்பட்டை மாறும்.
  - கற்றாழை மடலின் ஒரு பக்கத் தோலை நீக்கி விட்டு, சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். பின் சுத்தமான அகலில் விளக்கெண்ணெய் விட்டுப் திரியிட்டு அதிக அளவு புகை வருமாறு எரிக்கவும். சுத்தம் செய்து வைத்துள்ள மடலினைப் புகையின் மேல் படும்படி காட்டினால் புகை மடலின் மேல் நன்கு படியும். இதனை காற்றுப்புகாத குடுவைகளில் பத்திரப்படுத்தவும் . இதனைக் கண்களில் மையாகத் தீட்டி வர கண்கள் குளிர்ச்சி அடையும். கண்கள் அழகாகத் தோன்றும். கண் நோய்களும் அகலும்.
  - கற்றாழைச் சோற்றின் சிறு துண்டை நன்கு கழுவி விட்டு உள்ளுக்குச் சாப்பிட உடல் வெப்பம் குறைந்து உடல் குளிர்ச்சியாகும். வறண்ட சருமம் மாறும்.
  - கற்றாழைச் சோறுடன் சந்தனம் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகம் பொலிவுடன் காணும்.

  மஞ்சள் :

  - மஞ்சளை நீர் விட்டு அரைத்துப் பூசிக் குளித்து வர உடலில் காணப்படும் புலால் நாற்றம் நீங்கும்.
  - மஞ்சளைப் பன்னீரில் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிவிட முகம் பொலிவுடன் காணப்படும். முகத்தில் வளரும் தேவையற்ற முடி வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:13:30(இந்திய நேரம்)