தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இஞ்சி

 • மண்ணும் மருந்தே


  முனைவர் வா. ஹஸீனாபேகம்
  பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
  சித்த மருத்துவத்துறை

  நவீன உலகில் நாம் வாழும் இடத்தில் மண் தரை பார்ப்பது அரிதாகி உள்ளது. மருத்துவ நோக்கில் மண் மரபுவழியாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மண் சாதம் சாப்பிடுதல், மண் உருண்டை பிரசாதம், உடலில் மண் பூசுதல் போன்ற நடைமுறை பழக்கங்கள் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. சித்த மருத்துவத்தில் சித்ரா பௌர்ணமி அன்று சேகரிக்கப்படும் பூ நீறு சிறந்த மருத்துவப் பயன் கொண்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இன்றும் இயற்கை வைத்தியத்தில் உடம்பில் மண் பூசுதல் ஒரு வகை மருத்துவ முறையாக உள்ளது.


  இவ்வாறு பயன்படுத்தப்படும் மண்ணில் மருத்துவ பயனுள்ள நுண் தனிமத் தாதுக்கள் இருப்பதுடன், நன்மையளிக்கும் நுண்ணுயிரிகளும் உள்ளன என்றும், மனிதனுக்கும் இந்நுண்ணுயிரிகளுக்கும் தொன்மையான தொடர்பு உண்டு என்றும் கூறப்படுகின்றது.


  இந்நுண்ணுயிரிகள் ‘பேசிலஸ் சப்டிலிஸ்’ ஆகும். தற்போது இவை லேக்டிக் அமிலம் உற்பத்தி செய்யும் பயனுள்ள நுண்ணுயிரிகளான லேக்டோபோசிலஸ் மற்றும் பைஃபிடோபேக்டீரியா போன்றவற்றின் செயல்பாடுகளுடன் ஒத்த பண்பு கண்டறியப்பட்டு ‘புரோபயாடிக்’ பயனுள்ள நுண்ணுயிரிகள் என்றழைக்கப்படுகின்றன.


  இந்த நுண்ணுயிரிகள் மண்ணின் மேற்பரப்பில் பெரும்பாலும் காணப்படுவதில்லை. சுமார் 6 இஞ்ச் அளவு கீழேதான் இந்நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன.


  மண்ணில் இருக்கும் போது பயனுள்ள நுண்ணுயிரிகள் ‘செயலற்ற’ நிலையில் உள்ளன. குடற்பகுதியை அடைந்தவுடன் உரிய ஆகாரம் அதற்குக் கிடைக்கப் பெற்றவுடன் பலநூறு ஆயிரங்களாகப் பெருக்கமடைந்து மனிதனுக்கு நன்மைகள் பல அளிக்கின்றன.


  குறிப்பாக, புரத எதிர்ப்பான் (antibodies) உற்பத்தியை மிகச் செய்து, தீய நுண்ணுயிரிகள் அழிக்க உதவுகின்றன. மேலும், செல்களின் ஆக்கச் சிதைமாற்றத்தினால் வெளிப்படும் நச்சுக் காரணிகள் உடலிலிருந்து வெளியேற்றமடையச் செய்கின்றன.


  உணவுப்பொருட்களைச் சிறு துகள்களாகச் சிதைத்து எளிதில் உறிஞ்சுதலுக்கு உதவி. உடலின் செல் வளர்ச்சிக்கும் பெரிதும் துணை புரிகின்றன.


  இந்நுண்ணுயிரிகளில் ‘சூப்பர் ஆக்சைடு டிஸ்முடேஸ்’ என்ற நொதி உற்பத்தி செய்யப்படுவதால், தனித்த ஆக்சிஜன் அயனிகளை நீர்க்கச் செய்து அதனால் ஏற்படும் பின்விளைவுகளைத் தடுக்கின்றன.


  நோய் உண்டாக்கும் தீய நுண்ணுயிரிகள் அழிக்கும் திறன் கொண்டுள்ளதால், நவீன மருத்துவ நுண்ணுயிரி அழிப்பானுக்கு மாற்றாக இப்பயனுள்ள நுண்ணுயிரிகள் உதவுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. இரத்தத்தில் மிகும் கொழுப்புயர்வைக் குறைக்கும் லிட்பேஸ் நொதி கொண்டுள்ளதால், இருதயக் கோளாறு நோய் ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளது.


  அன்றைய நாளில், அழுக்குத்துணிகள் துவைப்பதற்கு உவர்மண் ஊறல் செய்து, தூய்மைப்படுத்தி வந்தனர். இதற்கான அறிவியல் காரணம், பயனுள்ள நுண்ணுயிரியான ‘பேசிலஸ் சப்டிலிஸ்’, லிப்பேஸ் என்ற நொதியைச் சுரக்கும் தன்மையது. உவர்மண்ணில் இக்கிருமிகள் மிகுத்து இருக்கும் நிலையில் அவற்றின் நொதியின் செயல்களால், துணிகளில் உள்ள எண்ணெய்ப் பசை சிதைவடையச் செய்து துணியிலிருந்து எண்ணெய் கக்கு வெளியேறி, துணிகள் தூய்மை அடைந்த காரணங்கள், அறிவியலாய் அறியுமிடத்து விந்தையளிக்கின்றது.


  பெண்கள் விரதமிருந்து, கோயில்களில் பிள்ளை வரம் வேண்டி மண்சோறு சாப்பிடும் பழக்கம் அன்றைய நாளின் ஒரு சமுதாய நடைமுறையாக இருந்து வந்தது. அவ்வாறு செய்து குழந்தைப்பேறும் பெற்றுள்ளனர். மண்ணின் பயனுள்ள நுண்ணுயிரிகள், குடற்பகுதியில் அதிகமாக்க் காணப்படும் ‘எஸ்ட்ரோஜன் சல்பேட்’ ஆக இருந்து ‘எஸ்ட்ரோஜன்’ ஹார்மோனை இரத்தத்தில் மிகச் செய்து பெண்களுக்குக் கரு வளர்ச்சிக்கு உதவும் என்ற அறிவியல் காரணங்களால் மண்ணின் மகத்துவத்தை விளக்குதல், பயனுள்ள நுண்ணுயிரிகளின் நன்மைகளை அறிய உதவுகின்றது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:14:23(இந்திய நேரம்)