தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இஞ்சி

  • சிலாசத்து

    - மருத்துவப் பயன்களும் வேதிமச் செயற்பண்புக் கூறுகளும்


    முனைவர் வீ.இளங்கோ,
    உதவிப்பேராசிரியர்,
    சித்த மருத்துவத்துறை


    சித்த மருத்துவ நூல்களின் கூற்றுப்படி சிலாசத்து எனும் தாதுக் கட்டுப்பொருள் விந்திய, இமயமலைப் பகுதிகளில் பாறைகளில் இடையே வடியும் இறுகிய தாதுக் கலவையாகும். இது தமிழ் மருத்துவத்தில் மருந்துகள் செய்ய தொன்றுதொட்டுப் பயன்பட்டு வருகிறது. இந்திய மருத்துவ இலக்கியங்களில் இனப் பெருக்க உறுப்புகளில் தோன்றும் நோய்கள், வயிற்றுக் கோளாறுகள், மூல நோய், நரம்புக் கோளாறுகள், மஞ்சட்காமாலை, நீரிழிவு மற்றும் மாதவிடாய்க் கோளாறுகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சித்த மருத்துவ நூல்களில் சிலாசத்து கிடைக்குமிடங்கள், வகைகள், மருந்து செய்முறைகள் மற்றும் உண்ணும் அளவுகள் ஆகியவை கூறப்படுகின்றன.

    சிலாசத்தின் வகைகள்

    1. கற்பூர சிலாசத்து, கற்பூர வாசனையுடன் வெள்ளை நிறமாக இருக்கும்
    2. கோமூத்திர சிலா சத்து - அல்லது உரங்கியம், பசுவின் சிறுநீர் வாசனையுடன் இருக்கும்
    3. தங்க சிலாசத்து
    4. வெள்ளை சிலாசத்து
    5. செம்பு சிலாசத்து
    6. இரும்பு சிலாசத்து
    மேற்கண்ட வகைகளில் கோமூத்திர சிலாசத்து அதிக அளவில் மருத்துவப் பயன் உடையது. இவற்றைக் கண்டறியும் விதங்கள், செய்கைகள், பற்ப செந்தூர மருந்துகளாகச் செய்யும் முறைகள் ஆகியவை சித்த மருத்துவ குண பாட நூலில் தெளிவாக உள்ளன.

    வேதியியல் செயற் பண்புக் கூறுகள்

    மலைப் பாறைகளின் இடுக்குகளில் வளர்ந்த பல்வேறு தாவரங்கள் நெடுங்காலம் அழுத்தப்பட்டுப் பாறையுடன் கலந்து படிந்து இறுகிக்கிடைக்கும் தாதுக் கலவைப்பொருளே பலவகைச் சிலாசத்து ஆகும்.
    சிலாசத்தில் கனிம கரிமக் கூட்டுப்பொருட்கள் இணைந்து, கூட்டுக் கலவையாகக் கிடைக்கின்றன.
    சிலாசத்தினை வேதிம ஆய்வுக்கு உட்படுத்தியபோது அதில் கீழ்க்கண்ட கரிம வேதியியல் பொருட்கள் அமைந்துள்ளதைக் கண்டறியப்பட்டுள்ளது.
    நீர்
    கரிமப்பொருட்கள்
    தாதுப்பொருட்கள்
    நைட்ரஜன்
    சுண்ணாம்பு
    பொட்டாசியம்
    பாஸ்போரிக் அமிலம்
    ஹிப்யூரிக் அமிலம்
    ரெசின்
    அல்புமின்

    மூலிகைப்பொருட்கள் சிலாசத்தில் தாதுப் பொருட்களும், மூலிகை வேதியல் பொருட்களும், உயிர்ப் பொருட் கூறுகளும் கலந்து காணப்படுகின்றன

    மருத்துவப் பயன்கள்

    கோமூத்திர சிலாசத்து வீக்கம் மற்றும் கிருமி நாசினியாக வெளி உபயோகத்தில் பயன்படுகிறது. சிறுநீரக நோய்களுக்கும் சிறுநீரக்க் கல் நீக்கவும் பயன்படுகிறது. சிலாசத்து நரம்பூக்கியாகச் செயல்பட்டு ஆண்மைப் பெருக்கியாகவும், கல்லீரல் நோய் தீர்க்கவும், மாதவிடாய்க் கோளாறுகளைப் போக்கவும், நாட்பட்ட கீல்வாத நோய் தீர்க்கவும் பயன்படுகிறது. நீரிழிவு நோய் தீர்க்க அப்பிரகப் பற்பத்துடன் சிலாசத்து சேர்த்து மருந்தாகப் பயன்படுகிறது.

    அறிவியல் ஆய்வுகள்

    சிலாசத்தின் மருத்துவப் பயன்கள் அறிய தற்கால அறிவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தி மருந்தியல் சோதனை நடத்தியபோது, தோல் நோய்கள், புராஸ்டேட் நோய்கள், வயிற்றுப்புண், மஞ்சட்காமாலை மற்றும் கல்லீரல் நோய்களைப் போக்குவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தசைச் சோர்வு கீல்வாதம், சிறுநீரக நோய்கள், நீரிழிவு ஆகிய நோய்கள் குணப்படுத்துவதும், யானைக்கால், நீண்ட நாள் சுரம் மற்றும் விடக்கடியின் போது நோய் எதிர்ப்புக் காரணியாக விளங்குவது கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும், நரம்பு நோய்கள், பித்தநீர்ப் பைகள் நோய்கள் ஆகியவற்றைப் போக்குவது அறிவியல் ஆய்வுகளில் நிருபிக்கப் பட்டுள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழகச் சித்த மருத்துவத்துறையில் மேற்கொண்ட மருந்தியல் ஆய்வுகளில் சிலாசத்து ஆய்வக விலங்குகளில் நீரிழிவு நோயில் இரத்த சர்க்கரையளவு, கொலஸ்டிரால் மற்றும் டிரைகிரிசரைடு ஆகியவற்றை சீர்படுத்தும் செயல்திறன் பெற்றிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:11:46(இந்திய நேரம்)