தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆரோக்கியம் அளிக்கும் அமுத பானம் மோர்

  • ஆரோக்கியம் அளிக்கும் அமுத பானம் மோர்

    முனைவர் வா.ஹஸீனாபேகம்
    பேராசிரியர் மற்றும துறைத்தலைவர்
    சித்த மருத்துவத்துறை

    பசும்பாலை காய்ச்சி ஆற வைத்து, உறை ஊற்றி, புளிக்க வைத்த தயிரைக் கடைந்து வெண்ணெய் நீக்கப்பட்ட பானம் தான் மோர் ஆகும்.

    இந்த மோர் வெயில் காலத்தில் குளிர்ச்சியூட்டும் பானமாகும். இதில் பொட்டாசியம், வைட்டமின் பி 12, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் லேக்டிக் அமிலம் உள்ளன.

    பாலைப் புளிக்க வைக்கும் நுண்ணுயிரிகளில் பிரதானமானது லேக்டோபேசிலஸ் அசிடோபிலஸ் என்பதாகும். இந்த நுண்ணுயிரிகள், பயனுள்ள நுண்ணுயிரிகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பால், சர்க்கரை பொருட்கள் எளிதில் சீரணிக்கச் செய்யும் எளிய மூலப் பொருளாக மாற்றுகின்றன. லேக்டிக் அமிலத்தைப் பால் நொதிக்க வைத்து உற்பத்தி செய்வதால் இவை லேக்டிக் அமில பாக்டீரிக்கள் என்றழைக்கப்படுகின்றன.

    நாம் மோரைப் பானமாக அருந்தும் போது, இந்த நுண்ணுயிரிகளும் குடற்பகுதிக்குச் செல்கின்றன. வயதான நிலையில் ஏற்படும் கால்சியம் சத்து உறிஞ்சுவதில் ஏற்படும் குறைபாட்டை நிவர்த்தி செய்து எலும்புச் சிதைவு நோயிலிருந்து குறிப்பாகப் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கின்றன.

    குடற்பகுதியில் செரிமானமடையாத பால் சர்க்கரையைச் செரிக்க வைத்து வயிற்று நோயைத் தடுக்கின்றன. மேலும், நோய் எதிர்ப்பாற்றல் புரதமான ‘இன்ட்டர்பெரான்’ என்ற வேதிமப் பண்புகளை பி இரத்த வெள்ளை அணுக்களிலிருந்து உற்பத்தி செய்யத் தூண்டுகின்றன. இவை தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கின்றன.

    மேலும், குடற்பகுதியில் செரிமானமின்மையால் ஏற்படும் வயிற்றுப்போக்கைத் தடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. அதாவது குடற்பகுதியிலிருந்து நீர் வெளியேற்றம் அடைவதைத் தடுக்கின்றது. மேலும், தொற்றுநோய்க் கிருமியான கிளஸ்டிரிடியம் குடற்பகுதியில் இருப்பதை முழுவதும் அழித்து வயிற்றுப்போக்கினைத் தடுக்கின்றது என்பதனை அறிவியல் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர். குடற்புற்றுநோய் ஏற்படுத்தும் நொதிகளின் செயலைத் தடுத்து நோயின் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கின்றது. இரத்தத்தில் கொலஸ்டரால் மிகுதலையும் தடுக்கும் செயல்புரிவது ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    வயதாகும் நிலையில் தசைநார்களில் ஏற்படும் புரதச் சிதைவைத் தடுத்து வலுவிழத்தலைப் போக்குகின்றது. இதனால் வயதான நிலையில் உண்டாகும் தசை மெலிதல் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.

    நீர் வேட்கை ஏற்படுவது வயதான நிலையில் அதிகமாக உணரப்படுவதில்லை என்றும், அந்நிலையில் அதிகமான மோர் அருந்துதல் வறட்சியால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும் என்றும், இந்நிலையில் ஏற்படும் மலச்சிக்கலைத் தவிர்க்க உதவுவது மோர் என்றும் கூறப்படுகின்றது. இதில் சித்தர்கள் வாக்கான நீர் சுருக்கி மோர் பெருக்கி என்பதற்கேற்ப, அதிக மோர் பானம் பருகி அதிலுள்ள நுண்ணுயிரிகளால் உடற்கு ஏற்படும் நன்மைகளையும், மேலும் அதிலுள்ள தாதுக்கள் நிறைந்த ஊட்டச்சத்தைப் பெற்று முதுமையிலும் ஆரோக்கியமாக வாழ உதவும் அமுத பானம் மோர் என்பதை அறிவியலாய் அறிதல் விந்தை அளிக்கின்றது.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:15:56(இந்திய நேரம்)