தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தனித்த அயனிகளும் / எதிர்ப்பான்களும்

  • தனித்த அயனிகளும் / எதிர்ப்பான்களும்

    முனைவர் வா.ஹஸீனாபேகம்
    பேராசிரியர் மற்றும துறைத்தலைவர்
    சித்த மருத்துவத்துறை

    மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் மூன்று வகைப்படும். ஒன்று தொற்றுக் கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்கள். இரண்டாவது உடலின் செல்களில் ஆக்கச் சிதை மாற்றங்களின் போது ஏற்படும் வேதிமப் பண்புகளில் ஏற்படும் மாறுதல்கள். மூன்றாவது மரபணுவில் ஏற்படும் மாற்றங்களினால் பாரம்பரியமாகத் தொடரும் நோய்.

    தற்போது நோய்க்கான காரணிகள், தனித்த அயனிகள் மிகுத்தலே என்றும் அவை செல்களின் பிரதான மூலப் பொருட்களுடன் பிணைத்துக்கொண்டு செயல்பாடுகளைத் தடுக்கின்றன என்றும் கண்டு அறிந்துள்ளனர்.

    தனித்த அயனிகள் என்பவை ஒற்றை ஆக்ஸிஜன் மூலக்கூறுகள், ஹைட்ரஜன் பெர் ஆக்சைடு, ஹைராக்சி மூலக்கூறுகள், புரத கார்போனில், நைட்ரிக் ஆக்சைடு போன்றவைகளாகும்.

    சாதாரண நிலையில் நமது உடலில் குளுக்கோஸ் ஆக்கச் சிதை மாற்ற நிலையில் உற்பத்தி செய்யப்படும் சக்தி நிறை ஹைட்ரஜன் மூலக்கூறுகள், ஒற்றை ஆக்சிஜன் மூலம் நீராக மாற்றமடைகின்றன. அந்நிலையில் ஆக்க சக்தி தனித்து வெளியிடப்படுகின்றது. இச்செயல் நமது செல்லணுவான மைட்டோக்காண்டீரீயாவில் சுவாசத்தொடர் அமைப்பில் நடைபெறுகின்றது. இதில் பொதுவாக 95% செயல் முழுமித்து நடைபெறுகின்றது. இந்நிலையில் மாற்றமடையும் போது ஒற்றை ஆக்சிஜன், ஹைட்ரஜன் மூலக்கூறுகள் நீர் ஆக மாறுவதில்லை. பதிலாக ஒற்றை ஆக்சிஜன் செல்களினுடே ஊடுருவிச் சென்று செல் அமைப்புச் செயல்வினை மூலக்கூறுகளுடன் சேர்ந்து அவற்றின் வேதிமப் பண்பில் மாறுதல் அடையச் செய்கின்றன.

    இவ்வாறு ஏற்படும் மாறுபட்ட வேதிமச் செயல் அமைப்பு மற்றும் மாறுபாடுகளே நோய்க்குக் காரணம் என்று தெளிவாக்கப்பட்டுள்ளது.

    நமது உடலமைப்பு என்பது தெளிவான வேதிம அமைப்பின் சாரமே ஆகும். இதில் ஒரு மூலக்கூறு மாறுபட்டாலும் செல்லின் செயல்வினை தடுக்கப்படும். இதுவே நோய்நிலை என்றும் உயர்வேதியியலார் கூறியுள்ளனர்.

    இதுவாறாகத் தனித்த அயனிகள் உடலில் ஏற்படுத்தும் வேதிமக் கூட்டமைப்பு மாறுபாடு இன்று நோய் அறியும் முதற்காரணியாகக் கண்டறியப்பட்டுள்ளது.

    பொதுவாக, நமது உடலில் ஏற்படும் சிறிய அளவிலான மாற்றங்களைச் சமன் செய்யும் சக்தி இயற்கையாகவே நமது உடலில் உள்ளது. இதுபோல் ஒற்றை ஆக்ஸிஜன் சிதைப்பான் நொதியான ௲ப்பர் ஆக்சைடு டிஸ்முட்டேஸ் என்ற நொதி நமது உடலில் மிகும் ஒற்றை ஆக்ஸிஜன் அளவில் 5% மட்டும் நீர்க்கச் செய்யும் செயல் புரிகின்றது.

    இந்நொதி செல்கூழ் மற்றும் மைட்டோகான்டீரியாவில் உள்ளது.

    வயது முதிர்வடையும் நிலை, நீரிழிவு, புற்றுநோய் போன்ற நிலைகளில் இந்நொதியின் அளவு வெகுவாகக் குறைகின்றது. மேலும், செல்களில் தேங்கும் ஒற்றை ஆக்ஸிஜனை அழிக்கும் சக்தியை இழக்கின்றது.

    இந்நிலையில் ஏற்படும் நோயின் தாக்கத்தை, உணவு மற்றும் மூலிகைகள் கொண்டு சீர் செய்ய முடியும் என்று அறிந்துள்ளனர். இதுவே தனித்த அயனிகள் எதிர்ப்பான் என்றழைக்கப்படுகின்றது.

    இவை ஒற்றை ஆக்ஸிஜன் நீர்க்கச் செய்யும் ஹைட்ரஜன் மூலக்கூறுவை அளித்து, அவற்றின் தாக்கத்தினை நீக்குகின்றது. எனவே, தற்போது நோய் நிவாரணம் பெறும் மருந்துகளில் தனித்த அயனிகள் எதிர்ப்பான் அதிகமாகப் பரிந்துரைக்கப்படுகின்றன. இவற்றுள் பிளேவோனாய்டுகள், கரோட்டீனாய்டுகள், துத்தநாகச்சத்து கொண்ட மூலப்பொருட்கள் இத்தகு அயனிகள் எதிர்ப்பான் செயல்புரிந்து நன்மை பயக்கின்றன.

    நமது உடலில் தனித்த அயனிகள், நொதிகளின் மிகுதியாலும் அயன் சத்து (செம்புச்சத்து) மிகுதியாலும் ஏற்படுகின்றது. சேந்தின் ஆக்சிடஸ், என்ஏடிபிஎச் ஆக்ஸிடஸ், மையலோபெர் ஆக்சிடேஸ் போன்ற நொதிகள் செல்களின் தனித்த அயனிகள் மிகச் செய்கின்றன. எடுத்துக்காட்டாக, அழற்சி / வீக்கம் ஏற்பட்ட நிலையில் அங்கு மிகும் வெள்ளையணுக்கள் மேற்படி நொதி மிகுத்தல் ஏற்படுத்தி தனித்த அயனிகள் மிகச் செய்கின்றன.

    குடற்பகுதியில், அயச்சத்து மிகுத்தலால் ஹைட்ராக்சி மூலக்கூறுகள் உற்பத்தியாகி குடற்புண் ஏற்படுத்துகின்றன.

    தனித்த அயனிகள் மிகுத்தல் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுத்துகின்றது. அதாவது விந்து பெருக்கத்தை வெகுவாகக் குறைத்து பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

    இன்றைய நவீன உலகில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவது தனித்த அயனிகள் எதிர்ப்பான் ஆகும்.

    இவை நாம் உட்கொள்ளும் பச்சைக் காய்கறிகளில் அதிகம் உள்ளன. நாம் அளவான உணவைப் பக்குவமாகச் சமைத்துப் புசித்து வந்தால் தனித்த அயனிகள் உடலில் தோன்றாவண்ணம் தடுக்கலாம். அதன் தாக்கத்கையும் வெகுவாகப் போக்கமுடியும்.

    நாம் உண்ணும் உணவில் இயற்கையாக 4கிராம் பிளேவோனாய்டுகள் உள்ளன. இவை தனித்த அயனிகள் எதிர்ப்பான் மூலம் நோய் எதிர்க்கும் ஆற்றல் கொண்டுள்ளன.

    எனவே, இயற்கையான நம் தமிழர் ஆரோக்கிய உணவுகள் உண்டு உடல் ஆரோக்கியம் காப்போமாக.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:15:46(இந்திய நேரம்)