தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மிகு பசியும் ஓவாப் பிணியும்

  • மிகு பசியும் ஓவாப் பிணியும்

    முனைவர் வா.ஹஸீனாபேகம்
    பேராசிரியர் மற்றும துறைத்தலைவர்
    சித்த மருத்துவத்துறை

    மனிதன் அளவின்றி மிகுந்துண்பது உடற்பருமனை ஏற்படுத்தும். இரத்தத்தில் மிகுந்த குளுக்கோஸ், கொழுப்பு வகைகள் அதிகரித்துக் காணப்படும். சோம்பல், தூக்கத்தையும் கொடுக்கும். மேலும் ஆண்களுக்கு, எஸ்ட்ரோஜன் என்ற பெண் இன ஹார்மோன் அளவை மிகச் செய்து, பெண்களுக்கான குணாதிசயங்களை ஏற்படுத்துகின்றது. கல்லீரலும் கொழுப்புத் தேக்கத்தால் ஏற்படும் நச்சுக் காரணிகளை வெளியேற்ற முடிவதில்லை.

    பசி மிகுதல் ஒரு கொடிய நோயாகக் கருதப்படுகின்றது. உணவைப் பார்த்தவுடன் சாப்பிடுதல், காலம் தவறி அளவின்றி சாப்பிடுதல், மேற்கூறப்பட்ட பாதிப்பை உடலில் ஏற்படுத்துகின்றது. இத்துடன் தைராய்டு சுரப்பும் பாதிக்கப்படுகின்றது.

    இதற்கான எளிய வழிமுறைகளை அறிவியலார் கூறியுள்ளனர். நடைப் பயிற்சி செய்தல். அதாவது மெதுவாக நடக்க ஆரம்பித்து பின் வேகமாகச் செல்லுதல். உடல் எடையைக் குறைக்கும். இரண்டாவது காய்கறிகள், பழங்கள் அதிகமாக உட்கொள்ளுதல் . மெக்னீசியம், குரோமியம், வைட்டமின் ஏ சத்துக்கள் கொண்ட போஷாக்கு உணவு இரத்த சர்க்கரையைச் சீராக்கும் என்றும் கூறியுள்ளனர். மேலும், லிப்போயிக் அமிலம், கோஎன்சைம் போன்றவற்றைப் போஷாக்கும் செறிவு செய்வது இருதயத்தைப் பலப்படுத்தும் என்றும், தனித்த அயனிகள் மிகுதலைத் தடுக்கும் என்றும் பரிந்துரைத்துள்ளனர். கல்லீரலில் உள்ள கொழுப்புத் தேக்கத்தைப் போக்க நார்ச்சத்து உணவுகள், மீன் எண்ணெய் மாத்திரைகள் நலம் பயக்கும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் சுவாசப் பயிற்சியும் கூறப்பட்டுள்ளது.

    மேலும், எளிய உணவு முறையும் கூறப்பட்டுள்ளது. கருணைக்கிழங்கை உணவாகப் பயன்படுத்தும்போது கொழுப்பு உயர்வைக் குறைக்கின்றது என்றும், குடற்பகுதியில் பயனுள்ள நுண்ணுயிரிகளைப் பெருக்கமடையச் செய்து அவற்றிலிருந்து பெறப்படும் சிறிய கொழுப்பு அமிலங்கள் இரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரித்தலைத் தடுக்கின்றது. காரணம் இதில் உள்ள நார்ச்சத்து ஆகும்.

    இத்துடன் ‘ரை’வகை தானிய உணவினைப் பயன்படுத்தினால் நார்ச்சத்து மிகுந்து இருப்பதுடன் லிக்னன் என்ற வேதிமப்பொருள் மனிதனின் ஹார்மோனுக்கு இணையான செயல் புரிகின்றது என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் முழு தானிய உணவாகப் பயன்படுத்தும் போது உடல் எடை குறைதல், கொழுப்பு உயர்வால் ஏற்படும் இருதய நோய் மற்றும் இரத்த சர்க்கரை மிகுதலைத் தடுத்தல் போன்ற செயல்புரிந்து உடல் பருமனைத் தடுத்து ஆரோக்கியம் காக்கின்றது என்று அறிவியலாளர் கூறியுள்ளனர்.

    ‘தீயளவு அன்றித் தெரியான் பெரிதுண்ணின்

    நோயளவு இன்றிப் படும்’. (குறள் : 947 )

    ‘அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல

    துய்க்கத் துவரப் பசித்து’. (குறள் : 944 )

    முதல் குறள் அளவின்றி உண்டால் நோய் உண்டாவதைப் பற்றிக் கூறுகின்றது.

    இரண்டாவது குறள்; உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான உணவுகளை உண்ணுதல் அவசியம் என்று கூறுகின்றது.

    பசி என்பது உணவுப் பாதை, மூளை மற்றும் கொழுப்புச் செல்கள் மூன்றும் இணைந்த செயலால் ஏற்படும். எனவே பசி என்னும் நோயைக் கட்டுப்படுத்த, கருணைக்கிழங்கு மற்றும் தானிய வகை உணவுகள் உட்கொள்ளுதல் அவசியம் என்றும், உடற்பருமன் மிகுதலையும் வெகுவாகக் குறைக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

    உடற்பருமன் உடையவர்கள் நடைப்பயிற்சி செய்வதுடன் பசியைக் கட்டுப்படுத்தும் ஆகாரங்கள் உட்கொள்ளுதல் அவசியமாகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:16:06(இந்திய நேரம்)