தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இஞ்சி

  • முதியார் கூந்தல்

    மூலிகை வேதிமக் கூறுகளும் மருத்துவப்பயன்களும்


    முனைவர் வீ.இளங்கோ,
    உதவிப்பேராசிரியர்,
    சித்த மருத்துவத்துறை


    இம்மூலிகை தமிழகம் எங்கும் தரிசு நிலங்களில் தானே வளர்கிறது. இதன் வேறு பெயர்கள், சவுரிகொடி, அம்மையர் கூந்தல், அவ்வையர் கூந்தல், முறுவிழி ஆகியவை. இம் மூலிகையின் வேர் இதர மருந்துகளுடன் சேர்த்து பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. சித்த மருத்துவத்தில் நாவறட்சி, பசியின்மை வெள்ளைப்படுதல் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. தேரையன் குடிநீர் நூறு என்னும் சித்த மருத்துவ நூலில் அம்மையார் கூந்தல் இதர மருந்துகளுடன் சேர்த்துக் குடிநீராகச் செய்து பருகும்போது கடுமையான விஷக்காய்ச்சல் மற்றும் வீக்கம் நீங்குமெனக் கூறப்பட்டுள்ளது.

    மூலிகை வேதிமச் செயற்பண்புக் கூறுகள்

    இம்மூலிகையின் ஈதர் மற்றும் பியூட்டனோன் வடிசாறுகளிலிருந்து பிளவனாய்டுகள், டானின், டிரைடெர்பீளைய்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆன்த்ரோ குவினோன் மற்றும் அல்கலாய்டுகளின் புகுதி வடிசாறுகள் ஆய்வு செய்யப்பட்டு மருந்தியல் ஆய்வுக்குட்படுத்தப் பட்டுள்ளன.

    மருத்துவப் பயன்கள்

    முதியார் கூந்தல் இலவம் பிசின் சூரணத்துடன் சேர்த்துக் கொடுக்கும்போது வயிற்றுப்போக்கு மற்றும் தீராத காய்ச்சல் குணமாகும். தொழுநோய், கரப்பான், கழலை, கழுத்து வீக்கம் ஆகிய நோய்கள் தோன்றும்போது ஏற்படும் தோல் மாற்றங்களுக்கு முதியார் கூந்தல் தைலம் மருந்தாகப் பயன்படுகிறது. வாத பித்த கப மாற்றங்களினால் தோன்றும் அனைத்து வித நோய்களுக்கும் கீழா நெல்லியுடன் சேர்த்து மருந்தாக்க் குடிநீர் செய்து பருகுதல் குறித்து தேரையர் அந்தாதி போன்ற சித்த மருத்துவ நூல்களில் பரிந்துரைக்கப்படுகிறது.

    அறிவியல் ஆய்வுகள்

    முதியார் கூந்தலின் மெத்தனால் வடிசாறு ஆய்வக மருந்தியல் சோதனைகளில் வாதஅழற்சி, உடல் சுரம் மற்றும் வலி, நீரிழிவு ஆகிய நோய்களைக் குணமாக்கும் செயல்திறன் மிக்கதெனக் கண்டறியப்பட்டுள்ளது.
    தமிழ்ப் பல்கலைக்கழகச் சித்த மருத்துவ ஆய்வுக் கூடத்தில் நாட்பட்ட மூட்டுவாத நோயில் தோன்றும் உயிர் வேதிம மருந்தியல் மாற்றங்களைச் சீர்செய்து, கல்லீரல் மற்றும் இரத்த நொதிகளில் தொடர்புடைய மாற்றங்கள் ஏற்படுத்தி, கீல்வாத அழற்சி நோயைக் குணப்படுத்தும் செயல்திறன் ஆய்வக விளக்கங்கள் மூலம் கண்டறியப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:11:57(இந்திய நேரம்)