தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இஞ்சி

 • தழுதாழை

  - மூலிகைச் செயற்பண்புக் கூறுகளும் மருத்துவப் பயன்களும்


  முனைவர் வீ.இளங்கோ,
  உதவிப்பேராசிரியர்,
  சித்த மருத்துவத்துறை


  சித்த மருத்துவம் குறிப்பிடும் பக்கவாதம், கீல்வாதம் உள்ளிட்ட எண்பது வகை வளி நோய்களைப் போக்கும் சிறப்பு மூலிகையாகத் தழுதாழை விளங்குகிறது. இதன் வேறு பெயர்கள் தக்காரி, வாதமடக்கி மற்றும் நந்தக்காரி, ஆகியவையாகும். துவர்ப்பு சுவையுடைய இதன் வேர், இலை, மருந்தாகப் பயன்படுகின்றன. மூக்கடைப்பு நோய்கள், அனைத்து வகை வாத நோய்கள், வாத சுரம் ஆகியவற்றை நீக்க வல்ல மூலிகையாக அகத்தியர் குண பாடம் எனும் சித்த மருத்துவ நூல் கூறுகின்றது.

  மூலிகைச் செயற்பண்புக் கூறுகள்

  தழுதாழை இலையில் முக்கிய பண்புக் கூறுகளாக சப்பானின், பிளவனாய்டுகள், டெர்பினாய்டுகள் மற்றும் பாலி பீனால்கள் முக்கிய மூலிகை மூலப் பொருளாக உள்ளன. இவையே மருந்தியல் செயல்திறன் உள்ள தழுதாழை இலைச்சாற்றின் மூட்டு வாத நோய் தீர்க்கும் மருந்துப் பொருள்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.


  தழுதாழை இலையில் பெக்டோலி, நாரிஞ்சனின், ஹிஸ்பிடுலின், அபிஜெனின், லூட்டியோலின், நாரிஞ்சின் கிளைக்கோ சைடுகளும் உள்ளன. இம்மூலிகையில் குறியிட்டு வேதிமச் செயற்பண்புக் கூறுகளாக, கிளிரோடின், கிளிரோஸ்டிரால் மற்றும் கிளிரோ டென்ட்ரின்-A ஆகிய மூலிகை வேதிமங்கள் உள்ளதெனக் கண்டு அறியப்பட்டுள்ளன.

  மருத்துவப் பயன்கள்

  இதன் இலை மற்றும் வேர்ச்சாறு அனைத்துவகை மேக நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இலைச்சாறு காலை, மாலை உட்கொள்ளும்போது வாத சுரத்தைப் போக்கும். இதன் ரசத்தை மூக்கில் உறிஞ்ச மூக்கடைப்பு நீங்கும். இலையை நீரில் சேர்த்துக் காய்ச்சி வலியைப் போக்கப் பயன்படுத்தலாம்.

  இதன் இலை கட்டிகளைக் கரைக்க உதவுகிறது. விளக்கெண்ணையுடன் சேர்த்து ஒத்தடமாகக் கொடுக்கும்போது சுளுக்கு, கீல்வாத மூட்டு வலிகள் தீர உதவுகிறது. ஆண்களுக்கு உண்டாகும் விரைவாத நோய் மற்றும் வீக்கம் ஆகியவற்றைப் போக்க உதவுகிறது.

  அறிவியல் ஆய்வுகள்

  பல்வேறு ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட மருந்தியல் ஆய்வுகளில் தழுதாழை இலைச்சாறு கீல்வாத நோயைக் குணப்படுத்த வல்லது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வடிச்சாறு குறுகிய சுழற்சி நோயில் உண்டாகும் ஹிஸ்டமைன், செரடானின் மற்றும் புரேஸ்டோ களான்டின் ஆகிய இரத்த உயிர் வேதிமங்கள் கட்டுப்படுத்தி நோய் தீர்க்கிறது கண்டறியப்பட்டுள்ளன. மேலும் நாட்பட்ட கீல்வாத நோயில் கொலாஜன் மற்றும் மியுகோபாலிசாக்கரைடு உற்பத்தியை அதிகரித்து குணப்படுத்துமெனக் கண்டறியப் பட்டுள்ளது. மேலும் உடலில் உண்டாகும் காயத்தை ஆற்றுவதில் செயல் திறன் மிக்க வளியேற்றத் தடை செய்கையைய அறியப்பட்டுள்ளது.


  தமிழ்ப் பல்கலைக்கழகச் சித்த மருத்துவத்துறை ஆய்வகத்தில் மேற்கொண்ட மருந்தியல் ஆய்வுகளில் தழுதாழை இலைகளின் வடிச்சாறு குறுகிய கால மற்றும் நாட்பட்ட கீல்வாத நோயைக் குணப்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அலகிஸ்சான் மூலம் ஆய்வுக்கூட எலிகளில் தூண்டப்பட்ட நீரிழிவு நோயில் இரத்த அதிசர்க்கரை நிலையை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவது கண்டறியப்பட்டுள்ளது.

   

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:14:33(இந்திய நேரம்)