4. சிற்றிலக்கியம்

நந்திக் கலம்பகம்

பாட அறிமுகம்
Introduction to Lesson


பல பூக்களை இணைத்து மாலையாகத் தொடுப்பார்கள். இம்மாலைக்குக் கதம்ப மலர் மாலை என்று பெயர். அதைப் போலவே பல வகையான செய்யுள்களையும் உறுப்புகளையும், அகப்பொருள், புறப்பொருள்களையும் கலந்து இயற்றப்படும் இலக்கியம் கலம்பகம் எனப்பெறும்.

கலம் + பகம் எனப் பிரிக்கலாம். கலம்பக இலக்கியம் 18 உறுப்புகளைக் கொண்டது. அவை புயவகுப்பு, அம்மானை, கார், ஊசல், இரங்கல், மறம், தழை, தவம், சித்து, பண், கைக்கிளை, தூது, வண்டு, குறம், காலம், மாதங்கி, களி, சம்பிரதம் என்பன. (கலம் - 12, பகம் - 12-ல் பாதி 6 12+6 ஆக = 18 ஆகும்.)

காலத்தால் பழமையானது நந்திக் கலம்பகம். அரசன்மேல் பாடப்பட்டது.பொதுவாக ஒரு ஆண்மகனின் புகழ் ஆற்றல் கொடையைப் புகழ்ந்து பாடும் திணை பாடாண் திணை எனப்பெரும் பல்லவ மன்னர்களுள் ஒருவன் மூன்றாம் நந்திவர்மன். வீரம் மிக்கவன். பெரிய வள்ளல். இந்த நூல் நந்திவர்மன் மீது அறம் வைத்துப் பாடப்பட்டது என்பர். (அறம் வைத்துப் பாடுதல் என்பது நச்செழுத்தும், தீமையும் அமையப் பாடல் இயற்றுவதாகும்.) அதனால் இது நந்திக் கலம்பகம் எனப் பெயர் பெற்றது. நந்திவர்மன் எரிகின்ற பந்தலின் கீழ் இருந்து பாடலைக் கேட்டான் என்றும், 100-வது பாடல் பாடப்படுகின்ற பொழுது தன் உயிரைத் துறந்தான் என்றும் சிலர் கூறுவார்கள். எனினும் மூன்றாம் நந்திவர்மன் தமிழ்க் கவிதைகளில் அதிக ஈடுபாடு உள்ளவன் என்பதையும், தமிழுக்காக இவன் உயிர் துறந்தான் என்பதையும் இவனைப் பற்றிய தகவல்களிலிருந்து அறிய முடிகிறது.

நந்திக் கலம்பகம் என்னும் நூல் 100 பாக்களைக் கொண்டது. பாடமாக வந்துள்ள பாடல் இந்நூலின் ஐந்தாம் பாடல் ஆகும்..