4. சிற்றிலக்கியம்

முக்கூடற் பள்ளு

பாடல் கருத்து
Theme of the Poem


ஆற்றிலே நாளை உறுதியாக வெள்ளப் பெருக்கு ஏற்படும். அதற்குரிய அறிகுறிகள் தென்படுகின்றன.

அதாவது தென்மேற்குத் திசை(மலையாளம்)யிலும், தென் கிழக்குத் திசை (ஈழத்து)யிலும் மின்னல் மின்னுகிறது.

நேற்றும் இன்றும், மரக்கிளைகள் சுற்றிச் சுழலுமாறு பலமான காற்று வீசுகிறது.

கிணற்றிலே வாழ்கின்ற சொறித் தவளைகள் மகிழ்ச்சியால் ஒலி எழுப்புகின்றன.

நாளை பெய்ய இருக்கும் வெள்ள நீரானது, நண்டுகள் வசிக்கும் வளைகளுக்குள் புகுந்து தொல்லை தரும் என்பதனை நண்டுகள் நன்கு உணர்ந்தன. தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடிவு செய்தன. எனவே சேற்றில் வாழும் நண்டுகள் சேற்றைக் குழைத்து வளையின் வாயிலை உயர்த்தி மூடிவிடுகின்றன.

வானம்பாடி என்ற பறவையினங்கள் கூடிவாழும் தன்மை உடையனவாகும். மழைக் காலத்தில் வானில் கூட்டம் கூட்டமாகப் பறந்து திரியும். பறக்கின்ற போது இனிய ஓசை எழுப்பும். அவ்வோசை பாடுவது போலவும், பறவைகள் பறப்பது ஆடுவது போலவும் தோன்றும்.

அதாவது, நாளை மழை பெய்வது உறுதி என்பதை உணர்ந்த வானம்பாடிகள் தாங்கள் அடைந்த மகிழ்ச்சியின் விளைவால் ஆடிப்பாடுகின்றன எனக் கவிஞர் கூறுகிறார்.

உலகமெல்லாம் போற்றுகின்ற சிறப்புடையவர் திருமால் அழகர். இவர் முக்கூடலில் கோயில் கொண்டுள்ளார். பெரிய பண்ணைகளிலே உழவுத் தொழில் செய்கின்ற பள்ளர்காள் அனைவரும் ஒன்றாகக் கூடி, ஆடிப்பாடி அவரைத் தொழுவோம்! வாருங்கள்!