6. சமய இலக்கியம்

இயேசு பெருமான்

ஆசிரியர் அறிமுகம்
Introduction to author


கவியரசர் கண்ணதாசன்

இயேசு காவியம் என்னும் இந்நூலின் ஆசிரியர் கவியரசர் கண்ணதாசன், இருபதாம் நூற்றாண்டின் திரைப்படத் தமிழ்க் கவிஞர்களில் ஒப்பற்ற கவிஞர் ஆவார். கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா ஆகும். தமிழ்நாட்டில் சிவகங்கைக்கு அருகில் உள்ள சிறுகூடற்பட்டி என்னும் சிற்றூரில் பிறந்தார். தந்தையார் சாத்தப்பன், தாயார் விசாலாட்சி அம்மையார். இவர் பல புனைபெயர்களில் எழுதினாலும் கண்ணனிடம் உள்ள பக்தியால் தன்னைக் கண்ணதாசன் என அறிவித்துக் கொண்டார். திரையுலகில் நூற்றுக் கணக்கான பாடல்களை இயற்றித் திரைப்படப் பாடல்களுக்கு இலக்கியப் பெருமையை வழங்கியது கண்ணதாசனின் பாடல்களாகும். திரையிசைப் பாடல்களில் காதல் பாடல்களும், தத்துவப் பாடல்களும் மிகவும் சிறப்புடன் விளங்கின. அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் இவரது நூல் பல தொகுதிகளாக வெளிவந்துள்ளது.

மாங்கனி, ஆட்டனத்தி ஆதிமந்தி ஆகிய குறுங்காவியங்களையும் எழுதியுள்ளார். சேரமான் காதலி, வேலங்குடித் திருவிழா முதலான புதினங்களையும் படைத்துள்ளார். கண்ணதாசன் தனிக் கவிதைத் தொகுப்புகளையும் இயற்றியுள்ளார். இவர் தமிழ்நாடு அரசவைக் கவிஞராக இருந்தார். மைய, மாநில அரசுகளின் விருதுகளையும், சாகித்திய அகாதமியின் பரிசினையும், அண்ணாமலை அரசர் நினைவுப் பரிசினையும் பெற்றவர். கண்ணதாசன் தமிழில் தென்றல், முல்லை, கண்ணதாசன் முதலான பல இதழ்களை நடத்தியவர். கவிஞர் கண்ணதாசன், அவர் உயிரோடு இருக்கும் போது அவருக்காக அவரே ஒர் இரங்கற்பா எழுதிக் கொண்டார். தன்வாழ்க்கை வரலாற்றை வனவாசம், மனவாசம் என்னும் இரு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்.

அவர் சோவியத்து நாட்டுக்குச் சுற்றுப் பயணம் செய்து திரும்பிய பின், தனது கவிதைகளில் பொதுவுடமைக் கருத்துகளையும் வெளியிட்டார். அமெரிக்க நாட்டில் நடைபெற்ற தமிழ்விழா ஒன்றில் பங்கு பெறச் சென்ற கண்ணதாசன் உடல் நலக்குறைவால் அமெரிக்காவிலேயே இயற்கை எய்தினார். சென்னையில், கவிஞரின் இறுதி ஊர்வலத்தில் அவர் எழுதிய இரங்கற்பாவைச் சீர்காழி கோவிந்தராசன் பாடிட இறுதி ஊர்வலம் நடைபெற்றது.