6. சமய இலக்கியம்

இயேசு பெருமான்

பாட அறிமுகம்
Introduction to Lesson


இயேசு பெருமான்

இயேசு காவியம் பாயிரத்துடன், பிறப்பு, தயாரிப்பு, பொது வாழ்வு, பாடுகள், மகிமை என்னும் ஐந்து பாகங்களையும், நூற்று நாற்பத்து ஒன்பது அதிகாரங்களையும் கொண்டதாகும். அறுசீர் விருத்தம், எண்சீர் விருத்தம், ஆசிரியப்பா, சிந்து, சந்தப் பாடல்கள் போன்ற பாடல் வகைகளால் உருவாக்கப்பட்டது ஆகும். இது கவியரசர் கண்ணதாசன் அவர்களால் இறுதியாக எழுதப்பட்ட காவியப் படைப்பாகும். கிறித்தவ சமயத்தைச் சார்ந்த அருளாளர்களின் வேண்டுகோளுக்கிணங்கக் கவிஞர் இக்காவியத்தை இயற்றியதாகக் கூறுவர். இயேசு காவியம் இயற்றியதன் மூலம் கவிஞர் எம்மதத்தையும் சம்மதமாக மதிக்கும் பண்பைப் பெற்றவர் என்பதை அனைவரும் அறிவர்.மடைதிறந்த வெள்ளமெனக் கவிபாடும் ஆற்றல்மிகு கவியரசரின் தமிழ்ப்புலமை இக்காவியம் எங்கிலும் பொங்கிப் பாய்ந்து பெருக்கெடுத்து ஒளிர்வதைத் தமிழாய்ந்த பெருமக்கள் அறிவர்.

இயேசு காவியத்தில் உவமைகளும், உவமானங்களும், எதுகை மோனைகளும் கவிஞரால் கையாளப்பட்ட விதம் இக்காவியத்தைப் படிக்கும் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் விதமாக அமைந்துள்ளன. இயேசு கிறித்துவைத் தாலாட்டும் பாடல்களில் கவிஞர் ஒரு தாயாக மாறித் தாலாட்டுப் பாடியுள்ளார். சமய இலக்கிய உலகில் இயேசு காவியம் ஈடுஇணையற்ற காவியமாகும்.

கவியரசர் கண்ணதாசன் அவர்களால் இயற்றப்பட்ட இயேசு காவியம் என்னும் நூலில், ஐந்தாம் பாகத்தில், மகிமை என்னும் பகுதியில் நூற்று நாற்பத்து ஒன்பதாம் செய்யுள் நம் பாடப்பகுதியாக அமைந்துள்ளது.