சிவன்
ஆசிரியர் அறிமுகம்
Introduction to author

திருஞானசம்பந்தர்
நமது இப்பாடப் பகுதியின் படைப்பு ஆசிரியர் திருஞானசம்பந்தர் ஆவார் இவருக்கு இறைவனின் திருமகன் என்ற இன்னொரு பெயரும் உண்டு. இவர் சீர்காழி என்னும் திருத்தலத்தில் வாழ்ந்து வந்த சிவபாத இருதயருக்கும், பகவதி என்னும் அம்மையாருக்கும் திருமகனாகப் பிறந்தவர். சிவபாத இருதயர் ஆலயம் செல்லும் போது ஞானசம்பந்தரையும் உடன் அழைத்துச் செல்வது வழக்கம். அன்றும் அதுபோல் அழைத்துச் சென்று ஆலயத்துத் திருக்குளத்தின் கரையில் சம்பந்தரை அமர வைத்து விட்டு நீரினுள் மூழ்கிக் குளித்தார். தந்தையாரைக் காணாத ஞானசம்பந்தர் அழத் தொடங்கி விட்டார். மூன்று வயது குழந்தையான ஞானசம்பந்தர் அழ ஆரம்பித்த உடன் ஆலயக் கோபுரத்தில் திருவுருவச் சிலை வடிவில் இருந்த சிவபெருமானும் அன்னை உமா தேவியாரும் இறங்கிச் சம்பந்தரின் அருகில் வந்தனர். இறைவன் உமை அன்னையிடம் சம்பந்தருக்குப் பால் கொடுக்குமாறு பணிக்க, அன்னை பொற்கிண்ணத்தில் பால் கொணர்ந்து சம்பந்தருக்கு ஊட்டினார். சம்பந்தர் அழுகை நிறுத்தியவுடன் இறைவனும் இறைவியும் மறைந்தனர். நீராடி முடித்த சிவபாத இருதயர் சம்பந்தரின் அருகில் வந்து பார்த்தபோது குழந்தையின் வாயில் பால் ஒட்டியிருப்பது கண்டு திகைப்புற்று, பால் கொடுத்தது யார்? எனச் சம்பந்தரைக் கேட்டார். சம்பந்தர் கோபுரத்தில் உள்ள தாயாரின் திருவுருவச் சிலையைக் காட்டினார்.
இதைக் கண்ட சிவபாத இருதயர் மேலும் பதற்றத்துடன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஆலயத்துள் நுழைந்து இறைவனின் சன்னதி முன் சென்று வணங்கினார். இறைவனும் அன்னையும் உடனடியாகக் காட்சி கொடுத்து, சிவபாத இருதயரின் அய்யத்தைப் போக்கினர், உடனே சம்பந்தர் இறைவன் மேல் தோடுடைய செவியன் எனத் தனது முதல் பாடலைப் பாடினார் என்று தலபுராணம் சொல்கிறது. ஞானசம்பந்தர் சைவ சமயம் எழுச்சியுறப் பல அரிய செயல்களைச் செய்தார். சமணர்களை வாதத் திறமையால் வெற்றி கொண்டார்.