தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வழியாட்டம்

 • வழியாட்டம்

  முனைவர் சி.சுந்தரேசன்
  துறைத்தலைவர்
  நாட்டுப்புறவியல் துறை

  கரகாட்டம் முதலான நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்படும் போது புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, இராமநாதபுரம் பகுதிகளில் நடத்தப்படும் ஒருவகை ஆட்டம் வழியாட்டம்.

  இந்த ஆட்டம் கரகாட்டம் முடியப் போகும் நேரமான விடியற்காலையில் நான்கு அல்லது ஐந்து மணிக்குப் பெரும்பாலும் நிகழ்த்தப்படும். இந்த ஆட்டத்தில் இசைக்கலைஞர் ஆறு பேரும் (தவில் 2, நாதஸ்வரம் 2, பம்பை 1, தமுக்கு 1) நடனக் கலைஞர்கள் ஐந்து பேரும் (கரகம் 2, குறவன் குறத்தி 2, பபூன் 1) ஆக 11 பேர் கலந்துகொள்வார்கள்.

  இவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரித்துக் கொண்டு இசைக் கலைஞர்கள் மூன்று பேரும் ஆட்டக் கலைஞர்கள் இருவருமாக ஐந்து பேர் ஓரணியிலும் இருப்பர். இசைக் கலைஞர்களும் ஆட்டக் கலைஞர்களுமாக ஆறு பேர் மற்றோர் அணியிலும் இருப்பர்.

  இந்த இரண்டு அணிகளும் எதிர் எதிரே நிற்பர். அப்போது, “தேரோடும் எங்க சிங்கார மதுரையிலே” என்னும் பாடலோடு தெம்மாங்குப் பாடலையும் வாசிப்பர்.

  ஒரு குழுவினர் பாடல் வாசித்துக் கொண்டே ஆடி எதிர் அணியினரை நோக்கி வருவார்கள். அந்த இடத்தை அடைந்தவுடன் அந்தப் பக்கம் நின்ற அணியினர் வேறொரு பாடலை வாசித்து வேறுவிதமாக ஆடிக் கொண்டே முதல் அணியினர் முன்பிருந்த இடத்திற்கு செல்வர். ஒரு பாடலின் முழுபகுதியும் வாசிக்கப்படமாட்டாது.

  ஒரு குழு ஆடியதைப் போல் அடுத்த குழு ஆடமாட்டார்கள். ஆடவும் கூடாது. இது ஒரு வகைப் போட்டி ஆட்டம். மக்களால் விரும்பி ரசிக்கப்படும் ஆட்டம்.ஒருவருக்கொருவர் வழி தருவதால் இவ்வகை ஆட்டம் வழியாட்டம் என்று பெயர் பெற்றதாகக் கூறப்பட்டது. பாரம்பரியமாக நடந்து வருவதாகக் கூறும் இந்த ஆட்டத்தினை மக்கள் அறிவர் என்றும், ஆனால் வழியாட்டம் என்ற பெயரைப் பலரும் அறியமாட்டார்கள் என்றும் கூறப்பட்டது.

  இவ்வழியாட்டம் எவ்வளவு காலமாக ஆடப்பட்டு வருகிறது என்பது குறித்த சரியான தகவல் ஏதும் கிடைக்கவில்லை. ஆட்டக் கலைஞர்கள் பார்வையாளர்களைக் கவர்வதற்காக அவ்வப்போது ஏற்படுத்திக் கொள்ளும் புதிய படைப்பாக்கங்களாக இத்தகைய ஆட்டங்கள் நிகழ்த்தப்படுகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 18:05:51(இந்திய நேரம்)