தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வெறியாட்டு்

  • வெறியாட்டு்

    முனைவர் சி.சுந்தரேசன்
    துறைத்தலைவர்
    நாட்டுப்புறவியல் துறை

    தெய்வம் மக்கள் மீது ஆடப்படும் ஆட்டத்தை ‘வெறியாட்டு’ என்பர். வெறி என்னும் பலபொருள் ஒரு சொல் இங்கு தெய்வத்தைக் குறிக்கின்றது. முருகக் கடவுளை வழிபடுவதற்காக நிகழ்த்தப்பட்ட ஆட்டக்கலை வேலன் வெறியாட்டு எனப்பட்டது. முருகனாகிய தெய்வம் ஆண்பாலாகிய வேலன் மேல் பெண்பாலாகிய தேவராட்டி மேல் அருளேறிவந்து வசித்து ஆடப்படும் ஆட்டம் ‘வெறியாட்டம்’ என்பர். பல தெய்வங்களின் அருள் கிடைக்கப் பெற்று பலவகையான வெறியாடல்களை ஆடி வருகின்றனர்.

    ஆடல் வழியானது இறைவனை வழிபடும் முறை மிகத் தொன்றுதொட்டு நிலவி வரும் ஒரு வழிப்பாட்டு முறையாகும். தொடக்கக் காலத்தில் வேட்டை இனம் மக்கள் இறை வழிபாட்டினை உகந்த முறையில் ஆடற்கலையினைக் கொண்டிருந்தார்கள். இந்த ஆடற்கலையானது இறைவனை உணரும் சமயக் கோட்பாடு மற்றும் வளர்ச்சி பெற்று விளங்குகிறது. இதனால் ஆட்டக் கலைஞர்கள் இறைவனோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டனர். இப்புனித நடனத்தின் அசைவுகள் அப்படியே துல்லியமாக மீண்டும் ஆடப்படும் பொழுது இவ்வசைவுகளுடன் தொடர்புடைய தொடக்கக் கால அனுபவங்கள் தூண்டி எழுப்பப்படுகின்றன. குறிப்பிட்ட தெய்வத்தின் அருளாவி வெறியாட்டக்காரரின் மேலேறித், தங்கள் முன்பு தோன்றியுள்ள மக்கள், வெறியாட்டக் கலைஞரை வணங்கி தங்களுக்கு அருள்வாக்கு நல்கும்படி வேண்டி விரும்பி நடனம் ஆடுகிறார்கள்.

    தமிழகத்தின் தொன்றுதொட்டு ஆடி வரும் வேலன் வெறியோடு, சொக்கக்கூத்து போன்றவைகளும், கேரளாவில் ‘தெய்யம்’ என்னும் ஆட்டமும், தென் கருநாடகத்தில் கோலா எனப்படும் பேய் நடனமும், ஆந்திராவில் அரங்கம் – எக்கேடம் என்னும் நடனமும் என்றெல்லாம் தென்னிந்தியாவில் பல மாநிலங்களில் வேறு வேறு பெயரை வைத்துக் கொண்டு நடனம் ஆடிக் கொண்டு வருகிறார்கள். இவைகள் எல்லாம் வெறியாட்டின் பலவகையான வடிவங்களாகும். மேலும் சிற்றூர்களில் அமைந்துள்ள மாரியம்மன், ஐயனார், முனியப்பன், திரௌபதி அம்மன், காளி, அங்காளம்மன், சுடலை மாடன், இசக்கி அம்மன் போன்ற பல ஆண் மற்றும் பெண் தெய்வ வழிபாட்டில் தெய்வங்களில் அடியவர்கள் மேல் நின்று ஏறி ஆடுவதைத் தான் வெறியாட்டு என்று சொல்லுவர். வெறியாடல் தமிழகம் எங்கும் நிறைந்து கொண்டு ஆடப்பட்டு வருகின்றனர். எனவே வேலன் வெறியாடலைத் தமிழகத்தில் சிறப்பாக வழங்கி ஆடிக் கொண்டு வருகிறார்கள்.

    வெறியாட்டு அகத்திணை, புறத்திணை என இருதிணைகளுக்குப் பொதுவானது என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன. ‘வெறியாட்டு’ பற்றிய செய்திகள் புறத்திணை பாடல்களைக் காட்டிலும், அகத்திணைப் பாடல்களில் மிகுதியாக இடம்பெற்றுள்ளன. ஆகவே வெறியாட்டைப் பற்றித் தொல்காப்பியத்தில் புறத்திணையியலில் மிகத் தெளிவான முறையில் விளக்கியுள்ளார்.

    “வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்

    வெறியாட்டயர்ந்த காந்தளும்”

    என்ற நூற்பா அடிகளால் வேலன் வெறியாடலைச் சிறப்பாகக் கருதப்பட்டமையும் வேலன் வெறியாடுதலே பெரும்பான்மையாக இருந்து வந்துள்ளமையும் பெறப்படுகின்றன. தெய்வத்திற்குச் செய்யும் கடன்களை அறியும் சிறப்பினையும் உயிர்க்கொலை கூறலின் செவ்வாயினையும் உடையவன் ஆகிய வேலன் தெய்வமேறி ஆடுதலைச் செய்த காந்தளும் எனத் தொல்காப்பிய நூற்பாவில் நச்சினார்க்கினியர் எளிமையாக விளக்கியுள்ளார்.

    வேலன், கணிகாரிகை, தேவராட்டி, குறத்தி என்னும் நான்கு பேரில் வேலன் வெறியாடுதல் மிகுதியாக இடம்பெற்றுள்ளன. திருமுருகாற்றுப்படையில் குறமகள் வெறியாடியதாகக் குறிக்கப்பட்டுள்ளது. எனவே பெண்கள் வெறியாடுதல் சிறுபான்மையே ஆகும்.

    குறத்தி போன்ற பெண்கள் வெறியாடுதல் புறத்திணையில் இடம்பெற்றுள்ளன. ‘அமரகத்துத் தன்னை மறந்தாடி ஆங்குத்’ தமரகத்துத் தன் மறந்தாடும் குமரன் முன், என்னும் பாடல் அடிகளில் காரிகையர் வெறியாடிக் கொண்டு பாடப்பட்டவையாகும். வேலன் ஆடுதல் என்பது அகத்திணைக்கு உரியது என்பர். “நம் உறு துயரம் நோக்கி அன்னை வேலன் தந்தார்” என்ற அகத்திணைப் பாடலில் வேலன் வெறியாட்டத்தைக் குறிப்பிடுகின்றது.

    ஆகவே, வெறியாடலின் முதன்மையான கூறாகிய அடவுகள் வரையறுக்கப்பட்டதாக அமையாது. மிகுபலம் பொருந்திய உடல் அசைவுகளைக் கொண்டதாக வெறியாட்டம் விளங்குகின்றது. ஆகவே, நன்கு வளர்ந்துள்ள பல ஆட்டக் கலைகள் வெறியாட்டங்களின் கொடையே என்றும் கூறலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 18:06:33(இந்திய நேரம்)