நாலடியார்
பாடல் கருத்து
Theme of the Poem
பாடல் - 1
தலைமுடியின் அழகு அழகல்ல. ஆடையின் அழகு அழகல்ல. மஞ்சள் பூசுவதால் முகத்தில் ஏற்படும் அழகும் அழகல்ல. நல்ல வழியில் நாம் செல்லுகிறோம் என்ற எண்ணத்தை உள்ளத்தில் உண்டாக்கும் அழகே உண்மை அழகு. இதனை கல்வி மட்டுமே தரும். கல்வி உள்ளத்தை நடுநிலையோடு இருக்க உதவும். நம்மை நல்ல வழியில் நடக்கச் செய்யும்.
நாலடியார்
பாடல் - 1
குஞ்சிஅழகும் கொடும்தானைக் கோட்டு அழகும்
மஞ்சள் அழகும் அழகுஅல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.
பாடல் - 2
இந்தப் பிறவியில் எல்லா நன்மைகளையும் தருவது கல்வி. அது கொடுக்கக் கொடுக்கக் குறையாதது. அதனால் புகழ் உண்டாகும். ஒருவர் உயிரோடு வாழும் வரை அவர் கற்ற கல்வி அழியாது.
அறியாமை நோயைத் தீர்க்கும் மருந்து கல்வி போல் சிறந்தது வேறு எதுவும் இல்லை.
நாலடியார்
பாடல் - 2
இம்மை பயக்குமால்; ஈயக் குறைவுஇன்றால்
தம்மை விளக்குமால் தாம்உளராக் கேடுஇன்றால்
எம்மை உலகத்தும் யாம்காணேம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து.

பாடல் - 3
கல்விக்கு எல்லை இல்லை; கற்க வேண்டிய நூல்களின் எண்ணிக்கையும் அதிகம். ஆனால் கற்பவர்கள் வாழும் நாட்கள் சில காலம் மட்டுமே. அவ்வாறு வாழ்வதிலும் பாதி நாட்கள் நோயில் கழிந்து விடும். அதனால் கற்க வேண்டிய நூல்கள் எல்லாவற்றையும் கற்க முடியாது. எனவே நல்ல நூல்களை முடிந்த அளவு கற்க வேண்டும். பாலும் நீரும் கலந்து உள்ள பாத்திரத்தை அன்னப் பறவையிடம் வைத்தால் அன்னப்பறவை பாலை மட்டுமே அருந்தும். அதுபோல நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துக் கற்க வேண்டும்.
நாலடியார்
பாடல் - 3
கல்வி கரைஇல; கற்பவர் நாள்சில
மெல்ல நினைக்கின் பிணிபல; தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீர்ஒழியப்
பால்உண் குருகின் தெரிந்து.

பாடல் - 4
கடல் சார்ந்த நிலத்தவனே! இப்பாடல் கூறும் கருத்தைக் கேள்! கரும்பை நுனியிலிருந்து அடிவரை தின்று கொண்டே போனால் சுவை கூடிக் கொண்டே போகும். கற்றவர் நட்பும் கரும்பைப் போன்றது.
கரும்பை அடியிலிருந்து நுனிவரை தின்று கொண்டே போனால் சுவை குறைந்து கொண்டே போகும். கல்லாத தீயோரின் நட்பும் கரும்பைப் போன்றது.
நாலடியார்
பாடல் - 4
கனைகடல் தண்சேர்ப்ப கற்றுஅறிந்தார் கேண்மை
நுனியில் கரும்புதின்று அற்றே - நுனிநீக்கித்
தூரில் தின்றுஅன்ன தகைத்தரோ பண்பிலா
ஈரம் இலாளர் தொடர்பு.