நீதிப் பாடல்கள்

பழமொழி

பாடல் கருத்து
Theme of the Poem


பாடல் - 1

  ஒருவருக்குத் துன்பம் ஏற்படுவது இயல்பு. அப்போது உறவினர்கள் ஓடிச் சென்று அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்க வேண்டும். அவருக்கு நன்மை செய்ய வேண்டும். ஒருவர் துன்பப்படும்போது உறவினர்கள் மேலும் தீமை செய்யக் கூடாது. நன்மை செய்பவரே நல்ல உறவினர். வீட்டில் வளர்க்கும் மருந்து மரம் அனைத்து நோய்களுக்கும் உடனே பயன்படும். அதுபோல உறவினர்கள் துன்பத்தில் பயன்பட வேண்டும்.

பழமொழி

பாடல் - 1

அல்லல் ஒருவர்க்கு அடைந்தக்கால் மற்றவர்க்கு

நல்ல கிளைகள் எனப்படுவார் - நல்ல

வினைமரபின் மற்றுஅதனை நீக்கல் அதுவே

மனைமரம் ஆய மருந்து.

பாடல் - 2

  தாய்ப் பறவை மிதித்துக் குஞ்சியின் கால் உடையாது; அதுபோல உறவினர் அறிவுரை கூறினால் நாம் குறைந்து விட மாட்டோம். நல்ல அறிவுரைகளை உறவினரிடம் கேட்க வேண்டும். அதைப் பின்பற்றி வாழ வேண்டும்.

பழமொழி

பாடல் - 2

உளைய உரைத்து விடினும் உறுதி

கிளைகள் வாய்க் கேட்பதே நன்றே - விளைவயலுள்

பூமிதித்துப் புள்கலாம் பொய்கைப் புனல்ஊர

தாய்மிதித்த ஆகா முடம்.

பாடல் - 3

  கருங்கூந்தலையும், வளையலையும் அணிந்த பெண்ணே! உண்மையைச் சொல்லப் போனால் நமக்கு முன்பின் தெரியாதவர்கள் நமக்கு உதவி செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் உறவினர்கள் நமக்கு நன்மை செய்ய மாட்டார்கள் என எண்ணினாலும் நமக்குத் தேவையான நேரத்தில் உதவி செய்பவர்கள் அவர்களே! மழை தேவையான நேரத்தில் பெய்யாது என எண்ணினாலும் அது தானே பெய்து நமக்கு நன்மையைத் தரும். உறவினர்கள் மழையை போன்றவர்கள்.

பழமொழி

பாடல் - 3

மெய்யா உணரின் பிறர்பிறர்க்குச் செய்வது என்

மையார் இருங்கூந்தல் பைந்தொடி - எக்காலும்

செய்யார் எனினும் தமர்செய்வர் பெய்யுமாம்

பெய்யாது எனினும் மழை.

பாடல் - 4

 இனிய ஓசைகள் கேட்கும் மலையில் இருப்பவனே! உறவினர்கள் நமக்கு உறவாக அமைந்து நன்மையைச் செய்வார்கள். அவர்களைப் போலவே நாமும் அந்த உறவை மதிக்க வேண்டும்.அவர்களுக்கு நல்ல உறவினராக நாமும் அமைந்து நன்மை செய்ய வேண்டும். துணியைத் தைக்கும் போது ஊசி செல்லும் வழியே நூலும் செல்லும். இது போலவே உறவினர்க்கு ஒத்த, நல்ல உறவினராக நாம் வாழ வேண்டும்.

பழமொழி

பாடல் - 4

தன்னை மதித்துத் தமர்என்று கொண்டக்கால்

என்ன படினும் அவர்செய்வ -செய்வதே

இன்ஒலி வெற்ப இடர்என்னை துன்ஊசி

போம்வழி போகும் இழை.