6. சமய இலக்கியம்

சிவன்

பாட அறிமுகம்
Introduction to Lesson


சிவன்

சைவ சமயத்தார் தெய்வமாய்ப் போற்றும் சிவபெருமானைப் பற்றித் திருநாவுக்கரசர் பாடியத் தேவாரப்பாடல் இங்குப் பாடமாக இடம்பெற்றுள்ளது. தேவாரம் என்பதை தே+ வாரம் எனவும், தே +ஆரம் எனவும் பிரித்து இருபொருள் கூறுவர். தே - தெய்வம், வாரம் - இன்னிசைப் பாடல். தெய்வத்தைப் பற்றிய இன்னிசைப் பாடல் எனப் பொருள் பெறும். தே - தெய்வம், ஆரம் - மாலை. தெய்வத்திற்கு அணிவிக்கும் பூமாலை போன்ற பாமாலை எனவும் பொருள்பெறும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என்னும் சைவ சமயக் குரவர்களாகிய நாயன்மார்கள் மூவரும் இறைவனைத் துதித்துப் பாடியப் பாடல்கள் தேவாரம் எனப்பெறும். சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் இவை முதல் ஏழு திருமுறைகளாக அமைந்துள்ளன. ஏழாம் திருமுறையைப் பாடியவர் சுந்தரமூர்த்தி நாயனார் ஆவார்.