தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பெங்களூர் நாகரத்தினம்மாள்

 • அம்புஜம் கிருஷ்ணா


  முனைவர் செ.கற்பகம்
  உதவிப் பேராசிரியர்
  இசைத்துறை

  இசை மேம்பாட்டிற்காகப் பாடுபட்டவர்களில் பெண்களின் பங்களிப்பு நிறைவாக அன்று முதல் இன்று வரை நிலவி வருகிறது. இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய பெண் கலைஞர்களில் சிலர் சிறந்த இயலிசைப் புலவர்களாகவும், சிறந்த குரலிசை மற்றும் கருவி இசைக் கலைஞர்களாகவும் விளங்கினர். இவர்களில் சிறந்த இயலிசைப் புலவராக அம்புஜம் கிருஷ்ணா விளங்குகிறார். இவர் இசைப்பாக்கள் பலவற்றைப் படைத்து இசையுலகிற்கும், நாட்டிய உலகிற்கும் பெரும் பங்காற்றியுள்ளார்.

  அம்புஜம் கிருஷ்ணா

  பிறப்பும், கல்வியும் :

  அம்புஜம் கிருஷ்ணா அவர்கள் இரங்க அய்யங்காருக்கும் செல்லம்மாளுக்கும் மகளாக 1917ஆம் ஆண்டு மே 21 ஆம் நாளில் திருவனந்தபுரத்தில் பிறந்தார். இவருடன் உடன் பிறந்தவர்கள் இரு சகோதரர்கள், இரு சகோதரிகள் இருந்தனர். சிறுவயதிலேயே தம் தாயாரை இவர்கள் இழந்தனர். அம்புஜம் கிருஷ்ணா இசையின் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக இவரின் பெற்றோர்கள் தம் மகளுக்கு இசை கற்பிக்க நினைத்தனர். அதனால், இசை மேதைகள் அரியக்குடி இராமானுச அய்யங்காரின் சீடர் காரைக்குடி கணேசனிடமும், ஜி.என்.பாலசுப்பிரமணியத்தின் சீடர் கணேச பாகவதரிடமும் இசையைக் கற்றார். பின்பு இவர் மனையியல் (Home Science) பட்டத்தை டில்லியில் உள்ள இர்வின் கல்லூரி மூலம் பெற்றார். தமது 17 வது வயதில் தந்தையையும் இழந்தார். தமது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்தார்.

  திருமணம் :

  அம்புஜம் கிருஷ்ணா டி.வி.எஸ்.நிறுவனர் சுந்தரம் இலட்சுமி அம்மாளின் மகனான கிருஷ்ணாவை மணம் புரிந்தார். இவர்களுக்கு மூன்று புதல்வர்களும், ஒரு பெண்ணும் பிறந்தனர். மிகவும் மென்மைக்குணமுடையராகவும் விளங்கினார்.

  இவர் எண்ணை ஓவியம் (Oil Painting), தையல், தோட்டப் பராமரிப்பில் ஈடுபாடு கொண்டவர்.

  முதல் பாடல் :

  அம்புஜம் கிருஷ்ணா சிறுவயதிலேயே பாடல்கள் இயற்றும் திறம்படைத்தவராக விளங்கினார். இவரின் திறமை வெளியுலகத்தாருக்குத் தெரியாமல் இருந்தது. 1951 ஆம் ஆண்டு திருவையாற்றில் உள்ள தியாகராசர் சமாதிக்கு வருகை தந்தார். தியாகராசர் மீது பக்திக் கொண்டார். “பானம் செய்யவாரீர்” என்ற பாடலைத் தியாகராசர் மீது இயற்றினார். இதுவே இவரின் முதற் பாடலாகக் கூறப்படுகின்றது. அன்று முதல் பாடல்களைப் படைத்து வந்தார். இவர் மதுரை மீனாட்சி அம்மன் மீது இயற்றிய “உன்னையல்லால்” என்ற கீர்த்தனையும், உடுப்பி கிருஷ்ணன் மீது “கோலங்கொண்டு” போன்ற பாடலையும் படைத்தார்.

  பாடற்பொருள் :

  அம்புஜம் கிருஷ்ணாவின் பாடல்களில் புராணக் கருத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவரது பாடல்களில் இராமாயணம், மகாபாரதம், கிருஷ்ணன், சிவனின் கதைகள், கஜேந்திர கோட்சக் கதைகளும், புராண இதிகாசங்களில் காணப்படும் செய்திகளும் நிறைந்து காணப்படுகின்றன.

  இவரது பாடல்கள் எளிமையாகவும், மனத்தை நெகிழவைக்கும் திறம் படைத்ததாகவும், கருத்துச் செறிவு மிக்கதாகவும் காணப்படுகின்றன. இயல் வளமும், இசைத் திறனும் பெற்றப் பாடல்களாக இவை உள்ளன.

  இசை நாட்டிய உருக்கள் :

  அம்புஜம் கிருஷ்ணா இசை நாட்டிய உருக்கள் பலவற்றை இயற்றியுள்ளார். வர்ணம், பதவர்ணம், கிருதி, இராகமாலிகை, பதம் ஆகிய வடிவங்களில் உருக்கள் பலவற்றை இயற்றியுள்ளார். இவற்றில் பதவர்ணம், பதம் ஆகியவை நாட்டிய அரங்குகளில் இன்றும் ஆடப்பட்டு வருகின்றன. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், சமசுகிருதம், இந்தி, மணிப்பிரவாள மொழிகளில் பாடல்களைப் படைத்துள்ளார். மணிப்பிரவாளம் என்பது ஒரே பாடலில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட மொழிகள் இணைந்து காணப்படுவதாகும். இவர் “அம்புஜாக்ஷா” என்ற தம் பெயரையே (சுவநாம முத்திரை) முத்திரையாகப் பயன்படுத்தியுள்ளார்.

  இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளதாகவும், அறுநூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளதாகவும் இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. இதில் தமிழ் மொழியில் 172 பாடல்களையும், தெலுங்கில் 20 பாடல்களையும், இந்தியில் 60 பாடல்களையும், கன்னடத்தில் 1 பாடல்களையும், மணிப்பிரவாளத்தில் 2 பாடல்களையும் படைத்துள்ளார்.

  மேலும், இவர் கண்ணன் மீது 14 இராகமாலிகைகளையும், சிவன் முருகன் மீது ஒரு இராகமாலிகையும், நாட்டியத்திற்குரிய 6 பதங்களையும் இயற்றியுள்ளார்.

  இவர் இசை நாடகம், கும்மி, ஊஞ்சல், கிளிக்கண்ணி, தாலாட்டு போன்ற வகைகளையும் திருமாலின் பத்து அவதாரங்களைக் கூறும் மங்கலத்தையும் இயற்றியுள்ளார். இந்தப் பாடல்களின் ஒவ்வொரு அடியின் இறுதியும் மங்கலம் என்ற சொல் இடம்பெறும்.

  நாட்டியத்திற்காக கிருஷ்ணலீலா மாதுர்யம், இராதாமாதவம் என்ற இரு நாட்டிய நாடகங்களையும் இயற்றியுள்ளார்.

  இசையமைப்பு :

  அம்புஜம் கிருஷ்ணா பாடலை மட்டும் இயற்றியுள்ளார். இசையமைப்புப் பணியைச் செய்யவிலை. இப்பாடல்கள் இவரது காலத்திலேயே இசைக் கலைஞர்களால் இசையமைக்கப்பட்டன. நூல் வடிவில் வெளியிடப் பெற்றுள்ளன. இவை குறுந்தகடுகளிலும் வெளிவந்துள்ளன. இவரது பாடல்களுக்குச் செம்மங்குடி சீனிவாச ஐயர், வி.வி.சடகோபன், எஸ்.இராமநாதன், கே.சி.தியாகராசன், சாத்தூர் ஏ.ஜி.சுப்பிரமணியம், கே.ஆர்.கேதாரநாதன், மதுரை டி.என்.சேஷகோபாலன், மதுரை கிருஷ்ணன், அனந்தலட்சுமி சடகோபன், ஆர்.வேதவல்லி, சாருமதி இராமச்சந்திரன், முரளி கிருஷ்ணன் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

  கீதமாலா தொகுதிகள் :

  அம்புஜம் கிருஷ்ணா இயற்றிய பாடல்கள் “கீதமாலா” என்ற பெயரில் நூல் வடிவில் வெளிவந்துள்ளன. இவர் இயற்றிய பாடல்களில் 231 பாடல்கள் ஐந்து தொகுதிகளாக வெளியிடப்பெற்றுள்ளன.

  கீதமாலாவின் முதற்தொகுதியை வி.வி.சடகோபனும், இரண்டாம் தொகுதியை எஸ்.இராமநாதனும், மூன்றாம் தொகுதியை என்.இராமநாதனும், மதுரை டி.என்.சேஷகோபாலனும், நான்காம் தொகுதியை கே.என்.கேதாரநாதனும், ஐந்தாம் தொகுதியை அனந்தலட்சுமி சடகோபனும் இசையமைத்துள்ளனர்.

  இவரது “இராதமாதவம்” என்னும் நாட்டிய நாடகம் ஆறாவது தொகுதியாக வெளிவந்துள்ளது. இவர் பாடல்கள் நூல் வடிவில் வெளிவர இவரது மாமியார் இலட்சுமி சுந்தரம் காரணமாக இருந்தார். இப்பாடல்களை அம்புஜம் கிருஷ்ணாவின் நெருங்கிய தோழி அனந்தலட்சுமி சடகோபன் அவர்கள் 48 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்தார்.

  இவரது பாடல்களை இசைக் கலைஞர்கள் குறுந்தகடு வடிவில் பாடி வெளியிட்டுள்ளனர். ஆர்.வேதவல்லி அவர்கள் அம்புஜம் கிருஷ்ணாவின் நினைவு நாளில் இவரது பாடல்களைக் கொண்ட இசை நிகழ்ச்சியை வழங்கினர். இதனை இராஜலட்சுமி பைன் ஆர்ட்ஸ் “அம்புஜ கீதம்” என்ற தலைப்பில் குறுந்தகடு வடிவில் வெளியிட்டுள்ளது.

  சத்குரு சங்கீத சமாஜம் :

  அம்புஜம் கிருஷ்ணா அவர்கள் மதுரையில் சத்குரு சங்கீத சமாஜம் என்ற இசைக் கல்லூரியை நிறுவினர். இக்கல்லூரியில் முதலில் மாலை நேர இசை வகுப்புகளே நடைபெற்றன. பின்னர் இசையில் இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர்பட்ட வகுப்புகள் தொடங்கப்பட்டன. இசை நாட்டியக் கலைகளை வளர்க்கும் சிறந்த நிறுவனமாகச் செயல்பட்டு வருகின்றது. மேலும், தன்னை இசையுலகிற்கு அறிமுகப்படுத்திய தம் மாமியாரின் பெயரில் “லட்சுமி சுந்தரம் கலையரங்கை” இங்கு அமைத்துள்ளார். இவ்வரங்கில் சிறந்த இசை நிகழ்ச்சிகளை வழங்கிட ஏற்பாடு செய்தார். இன்றும் இவ்வரங்கில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

  சிறந்த இசைப்பாக்களைத் தந்து இசை, நாட்டிய உலகிற்கு அளித்த அம்புஜம் கிருஷ்ணா அவர்கள் 1989 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் நாள் இறைவனடி சேர்ந்தார்.

  அம்புஜம் கிருஷ்ணாவின் சில புகழ்பெற்ற பாடல்கள் :

  1. அழகா அழகா
  -சுத்த தன்யாசி
  -கண்டசாபு
  2. கண்ணாவா
  -இராகமாலிகை
  -ஆதி
  3. ஓம்நமோ நாராயணா
  -கருணாரஞ்சனி
  -கண்டசாபு
  4. ஓடோடி வந்தேன் கண்ணா
  -தர்மவதி
  -ஆதி
  5. குருவாயூரப்பனே
  -ரீதிகௌளை
  -ஆதி

  இசை உலகம் பெற்ற அரிய மங்கையராக அம்புஜம் கிருஷ்ணா விளங்கினார். இசைப்பாக்கள் இயற்றி இசை உலகிற்குத் தொண்டாற்றியுள்ளார். மிகச்சிறந்த இசை விற்பனர்களால் இசையமைக்கப் பெற்ற இப்பாடல்கள் பலரால் பயிலப்பட்டும் பலரால் பாடப்பட்டும் வருகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:11:37(இந்திய நேரம்)