தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

துவாரபாலகர்

 • துவாரபாலகர்

  முனைவர் கி.கந்தன்,
  துறைத்தலைவர்,
  சிற்பத்துறை.

  துவாரபாலகர் படிமம் திருக்கோயில்களில் கோபுர நுழைவாயிலிலும், கருவறை நுழைவாயிலிலும் அமைக்கப்பட்டிருக்கக்கூடிய காவல் தெய்வம் ஆகும். ‘துவாரா’ என்ற சொல் வாயிலைக் குறித்திடும் வடமொழிச் சொல்லாகும். இவ்வுருவம் கோபுரத்தின் மையப்பகுதியில் உள்ள சால சிகரங்களின் (கட்ட்டக்கலைக்கூறு) இருபுறங்களிலும் காணப்படும். துவாரபாலகர்கள் படிமங்களின் கலை அமைதி என்பது மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும். இதன் அச்சம் தரும் உருவத்தோற்றம், அச்சம் தரும் வட்ட விழிகள், தந்த பற்கள், கைகளில் ஏந்திய ஆயுதங்கள் போன்றவை இதன் பொதுவான கலை அமைதி ஆகும். இப்படிமம் அமைந்துள்ள கோயில்களுக்கு ஏற்ப இதன் தோற்றங்கள் மாறுதல்களுடன் காணக்கூடிய ஒன்றாகும்.

  துவாரபாலகர்

  தொன்மைப்பின்னணி :

  புராண அடிப்படையில் நோக்கிடும் போது துவாரபாலகர் தொடர்பான செய்திகள் மகாபாரதத்திலிருந்து காணக்கிடைக்கின்றன. துவாரபாலகர்களில் குறிப்பாக வைணவ கோயில்களில் காணப்படும் துவாரபாலகர்கள், ஜெயா மற்றும் விஜயா என அழைக்கப்படுகிறார்கள். ஸ்ரீ வைகுண்டத்தின் வாயிற் காப்பாளர்களாக இவர்கள் கருதப்படுகிறார்கள். பிரம்மாவின் குமாரர்கள் விஷ்ணுவைச் சந்திக்க வந்த பொழுது இவர்கள் தடுத்ததால் சாபத்தினைப் பெற்றனர். அதன் விளைவாக மானுடராக மண்ணில் தோன்றிட நேர்ந்தது. இருப்பினும் விஷ்ணுவின் கருணையால் ஒவ்வொர் யுகத்திலும் நரசிம்மன், ராவணன் போன்று அரக்கராகத் தோன்றி விஷ்ணுவை எதிர்த்து சண்டையிட்டு அதன் வாயிலாக முக்தி பெற்று தமது அருகிலேயே இருக்கலாம் என சாபவிமோசனம் அளித்தார். இவர்களே விஷ்ணு கோயில்களில் துவாரபாலகர்களாக இன்றளவும் திகழ்கிறார்கள் என்று புராணங்களில் விளக்கப்பட்டுள்ளது.

  துவாரபாலகர்களின் தொன்மைப் பின்னணி என்பது யக் ஷர்களிடமிருந்து வந்ததாகவும் ஓர் கருத்து நிலவுகிறது. யக் ஷகர்கள் என்பவர்கள் புத்தம் மற்றும் சமண மதத்தின் பாதுகாப்புத் தெய்வங்கள் ஆவார். இருப்பினும் பிரம்மா இவர்களை உருவாக்கி ‘யக் ஷம்’ என்று அழைத்தார். ‘யக் ஷமம்’ என்பது ‘நீ எங்களைக் காப்பாய்’ என்று பொருளாகும். இதன் அடிப்படையில் புத்த மதத்தின் மகாயான பிரிவில் காவல் தெய்வமாக உருவெடுத்த இவர்கள் இந்து மதத்தில் துவாரபாலகர்கள் என்று வளர்ச்சி பெற்றனர்.

  கலையில் துவார பாலகர்கிளின் படிமம் :

  வரலாற்றுப் பின்னணியில் துவாரபாலகர்கள் படிமம் என்பது புத்தமத குடைவரைகளிலிருந்து தோற்றம் பெற்றது. குறிப்பாக கி.மு இரண்டு அல்லது கி.மு முதலாம் நூற்றாண்டில் ‘பித்தல் கோரா’ என்ற புத்தமதக் குடைவரையில் அலங்கரிக்கப்பட்ட தோற்ற அமைதியுடன் துவாரபாலகர் படிமம் காணப்படுகிறது. தொன்மப் பின்னணிகள், துவாரபாலகர் தோற்றத்திற்கு வேறு சில காரணங்களைக் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக சில துவாரபாலகர்களின் படிமங்களில் காணப்படும். கொம்புகளின் அமைப்பு ‘கோண்டா’ மற்றும் ‘நாகர்கள்’ என்ற தொன்ம குடிகளிடமிருந்து பெறப்பட்டதாகக் கருதப்படுகிறது. பல்லவர்களின் தொடக்கக்காலக் குடைவரையான மண்டகப்பட்டில் அமைந்துள்ள துவாரபாலகர்களின் படிமம் பல்லவப் போர்ப் படையிலிருந்த மல்லர்கள் என்போரின் வடிவங்கள் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது போன்று தொன்மம் மற்றும் பண்பாட்டு பின்னணியில் காணப்படும் துவாரபாலகர் படிமங்கள் தல புராணத்தின் பின்னணியில் வைக்கப்பட்டன. தேவாலய வாஸ்து விதிமுறைகள், துவாரபாலகர் படிமங்கள் தொடர்பான செய்திகளை விளக்கியுள்ளது. திருக்கோயில்களில் காவல் தெய்வமாகத் திகழும் இப்படிமங்கள் பல்வேறு புராணக் கதைகள், பண்பாட்டுப் பின்புலங்களைப் பெற்று கி.மு 3 ஆம் நூற்றாண்டு முதல் இன்று வரையிலும் குடவறை மற்றும் கோயில்களின் நுழைவாயில்களில் அனைவரையும் வியப்படையச் செய்யும் வினோத உருவங்களாகக் காட்சி அளிக்கின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:07:56(இந்திய நேரம்)