தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

திருஞானசம்பந்தரின் தனிச்சிறப்புப் பதிகங்கள்

 • ம.ப.பெரியசாமி தூரன்

  முனைவர் இரா.மாதவி
  உதவிப் பேராசிரியர்
  இசைத்துறை

  பெரியார் மாவட்டத்தில் ஈரோட்டை அடுத்துள்ள மஞ்சக்காட்டுவலசு என்ற சிற்றூரில் 1908 ஆம் ஆண்டு செம்டம்பர் திங்கள் 26 ஆம் நாள் பழனி வேலப்பக் கவுண்டர் பாவாத்தாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பெரியசாமி தூரன் பிறந்தார். தொடக்கக் கல்வியை மொடக்குறிச்சி என்ற சிறிய கிராமத்திலுள்ள திண்ணைப் பள்ளியில் பயிலத் தொடங்கினார். உயர் கல்வியை ஈரோட்டிலுள்ள மஹாஜன உயர்நிலைப் பள்ளியில் ஆறு முதல் பள்ளி இறுதி வரைப் பயின்று வந்தார். பின்பு 1926 ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை கணிதம் பட்டம் பெற்றவர். பள்ளி பருவத்திலேயே பாரதி பாடல்களையும், சுத்தானந்த யோகியார் பாடல்களையும் மனப்பாடம் செய்து வந்தார்.

  தமிழ்மொழியின் வளர்ச்சி, சாதி மத வேற்றுமைகளைக் களைதல் போன்ற பல நோக்கங்களை மாணவர்களிடையே பரப்புவதற்காகப் “பித்தன்” என்கிற மாத இதழ் ஒன்றைச் சென்னை “வனமலர்ச்சங்கம்” நடத்தி வந்தது. தூரன் திங்கள் தோறும் பல கட்டுரைகளும் கவிதைகளும் பித்தனில் எழுதில் வந்தார்.

  கோபியல் டயமண்ட் ஜீபிலி பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் கோவை “ஸ்ரீராமகிருஷ்ண வித்யாலயம்” என்ற பள்ளியில் பணியாற்றினார். பின்பு எல்.டி. பட்டம் பெற்று அப்பள்ளியின் தலைமை ஆசிரியரானார். 1933 முதல் 1947 வரை இராமகிருஷ்ணா வித்யாலயத்திற்குத் தூரன் அவர்கள் செய்த சேவை மகத்தானதாகும். ஸ்ரீஇராமகிருஷ்ணரைப் பற்றிய பாடல்களைத் தூரன் அவர்கள் இயற்றி அதை அனைவரும் பாடியும் வந்தனர்.

  மணவாழ்வு :

  பெரியசாமி தூரன் அவர்கள் அருட்செல்வர் பொள்ளாச்சி டாக்டர் நா.மகாலிங்கம் அவர்களின் சகோதரியான காளியம்மாள் என்பவரை மணந்தார். சாரதாம்பாள், வசந்தா, விஜயவல்லி ஆகிய மூன்று மகள்களும், சுதந்திரக்குமார் என்ற மகனுக்கு நற்தந்தையானார்.

  தூரன் அவர்கள் பத்திரிக்கைப்பணி, களஞ்சியப் பணிகளைச் சிறப்பாக ஆற்றி வந்தார். பாரத நாட்டிலேயே முதன் முறையாக பிராந்திய மொழியில் தமிழில் தான் கலைக்களஞ்சியம் உருவாயிற்று என்ற பெருமையை ஏற்படுத்தித் தந்தவர் திரு தூரன் அவர்கள் உண்மை, உழைப்பு, உயர்வு என்னும் சொற்களுக்கு உரிமையாளர், இறையருளால் பாவன்மையும், நாவன்மையும் பெற்றவர். வாழ்ந்திடும் போதே மணிமணியான தமிழ் இசைப் பாடல்களை இயற்றி இசை அரங்குகளிலும், இறை வழிபாட்டுக் கூடங்களிலும் அனைவராலும் இசைக்கப்பட்டு மகிழ்ச்சி ஊட்டியவர்.

  தூரனின் படைப்புகள் :

  கவிதைகள், சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் சிறுவர் நூல்கள், மரபியல் நூல்கள், உளவியல் நூல்கள், பாரதியார் நூல்கள், நாட்டுப்பாடல், தமிழிசைப் பாடல், மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகியவையாகும்.

  இசை பங்களிப்பு :

  பெரியசாமி தூரன் பாடல்கள் இயற்றுவதில் தனித்திறன் பெற்றதோடு, தென்னக இசைதனை அதற்கே உரிய சிறந்த பண்புகளைக் கொண்ட பாடல்களைப் படைத்துள்ளார். பல்லவி, அநுபல்லவி, சரணம் முதலிய பகுதிகளைச் சிறப்பாக அமைப்பதில் வல்லவர். இவருடைய பாடல் புதிது, சொல் புதிது, கவிதை புதிது, தத்துவம் புதிது, கருத்துக்கள் புதிது, வளம் புதிது இவற்றைக் கேட்டு மக்கள் கனிவது இவருடைய பாடலின் தனித்திறனாகும். கர்நாடக இசையில் முன்னணி வித்வான்கள் அனைவரும் தூரன் பாடல்களைக் கச்சேரிகள் பாடுவதற்கான காரணங்கள் பக்தி சுவையும், உணர்ச்சி மிக்க இராகங்களின் வெளிப்பாடும் ஆகும். இவருடைய கீர்த்தனைகள் சிவன், சக்தி, முருகன், கண்ணன் விநாயகப்பெருமான் போன்ற பல தெய்வங்களை நினைத்துருக பல பாடல்களை பாடியிருக்கிறார்.

  தூரன் தமது தமிழிசைப் பாடல்கள் சிறந்த முறையில் இசையமைப்பு பெறவேண்டும் என்ற காரணத்தால் இசைப் பயின்றார். முதலில் என்.சிவராமகிருஷ்ண பாகவதர் மற்றும் டி.கே.கோவிந்தராவ், டி.எம்.தியாகராஜன், எம்.எம்.தண்டபாணி தேசிகர், திரு.கே.வி.நாராயணசாமி, கும்பகோணம் விசுவநாதன், திரு.ஜி.என்.பாலசுப்ரமணியன் போன்ற இசைமேதைகளின் உதவியோடு பாடல்கள் யாவும் இசையமைத்து சுர தாளக்குறிப்புகளுடன் வெளியிடப் பெற்றன. இவருடைய பாடல்களின் எளிமையும், இசை அமைப்பின் சிறப்பினையும் செம்மங்குடி ஸ்ரீனிவாசய்யர், முசிறி சுப்ரமணிய அய்யர், பேராசிரியர் பி.சாம்பமூர்த்தி கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி போன்ற மாமேதைகள் வியந்து பாராட்டியிருக்கிறார்கள்.

  இயற்றிய பாடல் வகைகள் :

  இசை உறுப்பு வகைகள் நூற்றுக்கணக்கான கீர்த்தனங்களையும், கீதம், வர்ணம், பதவர்ணம், பதம், ஜாவனி, தில்லானா, விருத்தம், காவடிச் சிந்து, இராகமாலிகை போன்ற இசை வடிவங்களில் பாடல்கள் இயற்றியுள்ளார்.

  தூரன் பெற்ற விருதுகள் :

  1968 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று “பத்மபூஷன்” விருது, 1979 தமிழ்நாடு அரசு இயல் இசை நாடக மன்றம் “கலைமாமணி” விருது, தமிழக அரசு அதே கண்டு “செந்தமிழ் செல்வர்” என்ற பட்டம் 1979 ஆம் ஆண்டு சென்னை எழுத்தாளர் சங்கம் “பாரதி தமிழ்” என்னும் இவரது நூலுக்காகத் “தங்கப்பதக்கம்” மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 1979 இல் “தமிழ் பேரவைச் செம்மல்” சென்னைத் தமிழிசைச் சங்கம் “இசைப் பேரறிஞர்” பட்டம், 1971இல் தருமபுர ஆதினம் “செந்தமிழ்ச்செல்வர்” “தமிழ்ப் பேரறிஞர்” என்ற வழங்கி சிறப்பித்தது.

  பிரெஞ்சுக் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இசைமணிமாலை என்ற இசை நூலை எழுதியுள்ளார். இவர் எழுதி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப் பெற்ற இசைத்தமிழ் நூல் “தமிழிசைப் பாடல்கள்” என்ற தலைப்பில் பதினைந்தாம் தொகுதியாக அமைந்துள்ளது. இந்நூலில் 64 கீர்த்தனைகளும் 9 பதங்களும் ஒரு வாழ்த்தும் அமைந்துள்ளது. இப்பாடல்களுக்கு அமைக்கப்பட்டுள்ள புதிய இராகங்கள். சுவரணதீபகம், சீலாங்கி, விஜயநாகரி, கலிகா, விலாஸினி, அமிர்த தன்யாசி, நாதப்பிரமம், சாமந்த தீபரம், பாக்யசபரீ பூஷாவனி, ஜனரஞ்சனி ஆகியனவாகும். பெரியசாமி தூரன் இந்த நூற்றாண்டுக் கிடைத்த மிகச்சிறந்த தமிழிசை அறிஞர் எனப் போற்றத்தக்கவர்.

  மறைவு :

  ம.ப.பெரியசாமி தூரன் அவர்கள் 1987 ஜனவரி திங்கள் 20 ஆம் நாள் இறைவனடி சேர்ந்தார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:11:57(இந்திய நேரம்)