தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • பூர்வீக சங்கீத உண்மை

    முனைவர் செ.கற்பகம்
    உதவிப் பேராசிரியர்
    இசைத்துறை

    நாகசுர வித்வான்களில் நூல் எழுதி, திறனாய்வு உலகில் ஒரு புதுப் பாதையை அறிமுகம் செய்தவராக மதுரை பொன்னுசாமி பிள்ளை விளங்குகிறார். இசை ஆய்வு உலகில் இவரின் பூர்வீக சங்கீத உண்மை என்கிற நூல் ஒரு புது ஆய்வு மரபை ஏற்படுத்தியுள்ளது.
    1924 ஆம் ஆண்டு மதுரை பொன்னுசாமி பிள்ளை இந்நூலினை வெளியிட்டார். இந்நூலின் இரண்டாம் பதிப்பு 1930 ஆம் ஆண்டு எம்.கே.எம்.பி. நடேச பிள்ளையால் பதிப்பிக்கப் பெற்றது. பிறகு 1997 ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இந்நூலின் மூன்றாவது பதிப்பை வெளியிட்டுள்ளது.

    எம்.கே.எம் பொன்னுசாமி பிள்ளை

    நூல் அமைப்பு:

    பூர்வீக சங்கீத உண்மை என்ற நூல் ஐந்து பாகங்களைக் கொண்டுள்ளது.
    1. நூன் மரபு
    2. கர்த்தா இராகத்தின் நிர்ணயம்
    3. மூர்ச்சைப் பிரஸ்தாரம்
    4. கர்த்தா இராகங்களும் அனுபவத்திலிருக்கின்ற ஜன்ய இராகங்களும்
    5. இசை நுணுக்கமெனும் கதி பேத இராக சூட்சமம்

    நூலின் நோக்கம்:

    பொன்னுசாமி பிள்ளை வெங்கடமகி கூறிய 72 மேளகர்த்தா இராகங்களில் விவாதி மேள இராகம் 40 நீங்கலாக மற்ற 32 இராகங்களே பூர்வீக சங்கீத இராகமாகும் என்று இந்நூலில் விளக்கியுள்ளார்.

    மேளகர்த்தா இராகம் 32 அல்லது 72:

    மேளகர்த்தா என்பது தாய் இராகம் என்று பொருள்படும். இசையில் மேளகர்த்தா இராகம் 72 ஆகும். ஆனால் மேளகர்த்தா இராகம் 32 அல்லது 72 என்பது அறிஞர் பெருமக்களுக்கிடையே எழும் சர்ச்சையாகும். 72 என்பது வெங்கடமகி மற்றும் கோவிந்தாச்சாரியார் கோட்பாடு. 32 என்பது மதுரை பொன்னுசாமி பிள்ளை அவர்களின் கோட்பாடு. இது பற்றி இவர் குறிப்பிடும் பொழுது, இப்போது தென்னாட்டில் இருக்கிற சங்கீத நூல்களெல்லாம் வெங்கடமகி முறைப்படியே 72 மேளகர்த்தாவின் பெயருடனே எழுதப்பட்டு வருகின்றன. ஆனால் இவைகளில் இன்றைக்கும் என்றைக்கும் இயற்கையாய் உள்ளதும், இவற்றில் சொல்லப்படுகின்ற இராக பிரஸ்தார கிரமப்படி ஏற்படுகிற 32 கர்த்தா இராகங்களைத் தவிர அவர் அதிகப்படுத்தியிருக்கும் 40 இராகங்களும் அனுபவத்திற்கும் இலட்சணத்திற்கும் இலட்சியத்திற்கும் பொருத்தமில்லாதிருக்கின்றன. இவ்வாறு அதிகப்படுத்தியுள்ள 40 மேளகர்த்தா இராகங்களும் 12 ஸ்தானங்களில் 16 சுரங்களென்ற முறையில் கற்பிதங்களாகின்றன. இவற்றைக் குறிப்பிட்டு 72 மேளகர்த்தாவை சக்கரங்களிலும் “வீணைச் சக்கரங்களிலும் பார்க்கப் புலனாகும்” என்கிறார்.

    நூலமைப்பு விளக்கம்:

    நூன் மரபு முதல் பாகத்தில் பன்னிரு சுர நிலைகளையும் இரண்டாம் பாகத்தில் பன்னிரு சுரங்காலும் மூர்ச்சனைக் கிரமமாய் அமையும். 32 கர்த்தா இராகங்கள் பற்றியும், மூன்றாம் பாகத்தில் சரிகமபதநிச் ச்நிதபமகரிச என்னும் சம்பூர்ண மூர்ச்சைக்குப் பிரஸ்தார கிரமப்படி ஷாடவ, ஔடவ, சுராந்திரம் என்பனவாய் 1-2-3 சுரங்கள் வர்ஜமாய் உருவாகிய நிலையும், நான்காம் பாகத்தில் 32 கர்த்தாக்களையும், பிரஸ்தாரத்தில் பிறக்கும் ஜன்னியங்கள் தற்போது அனுபவத்தில் இருக்கிறவைகளையும் கிரமப் பிரஸ்தாரமாகி 300 ஜன்னிய இராகங்களை மட்டும் திருத்தியமைத்து அவைகளின் ஆரோக அவரோகண முறைகளின் கீர்த்தனைகளின் தலைப்புப் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். ஐந்தாவது பாகத்தில் ஒரு கர்த்தா இராகத்தைத் தொழில் படுத்துமிடத்து ரிகமபதநி என்ற ஆறு சுரங்களில் ஏதாவது ஒன்றை சட்ஜமாகக் கொண்டு, ஆரம்பித்த இராகத்தைச் சஞ்சாரம் செய்யும் பொழுது 24 கர்த்தாக்கள் 86 பேதமாய் விளங்குவதனைச் சாதி பேத இராக சூட்சமம் என்றும் பெயரிட்டு விளக்கியுள்ளார்.

    நூற் பெயர்க்காரணம்:

    பண்டைத் தமிழர்கள் குழலிலும், யாழிலும், குரல் முதல் எழும் வழுவின்றி இசைத்து வழித்திறங்காட்டிய முறைகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. இவ்விதம் இயற்கையின் மூலமாய் உண்டாகும் இராக உற்பத்திகளைக் கூறியிருப்பதால் இதற்குப் பூர்வீக சங்கீத உண்மை என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

    மதிப்புரைகள்:

    இந்நூலிற்கு 18 ஆசிரியர்கள் மதிப்புரைகள் தந்துள்ளனர். இவர்களில் மூவர் இயற்றமிழ்ப் புலவர்கள். எஞ்சியவர் இசை மாமேதைகளாவர். நாவலர் சோம சுந்தர பாரதியார், மதுரைத் தமிழ்ப் புலவர் நாராயண ஐயங்கார், திருஞான சம்பந்த ஆதீன குரு முதல்வர் ஆகியோர் இயற்றமிழ்ப் புலவர்கள் ஆவர்.
    இவ்வாறு இசை ஆராய்ச்சி உலகில் மாபெரும் பணியைச் செய்துள்ள பொன்னுசாமி பிள்ளையின் கருத்தைப் பலர் மறுத்துரைத்தாலும் அவரின் இசைப்பணி உலகில் மறையாத ஒன்றாகும். மேலும் நாதசுவர உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்த அன்னாரின் இசைத் தொண்டினை இப்பூவுலகம் உள்ள வரை போற்றும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:09:05(இந்திய நேரம்)