தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிரம்மன் அல்லது நான்முகன்

 • பிரம்மன் அல்லது நான்முகன்

  முனைவர் வே.லதா,
  உதவிப்பேராசிரியர்,
  சிற்பத்துறை.

  புராண பின்னணி :

  பிரம்மன் ஹிரணிய கர்ப்பத்திலிருந்து தோன்றினார் என்று புராணங்கள் கூறுகின்றன. ஹிரண்யம் என்பது பொன்னையும் கர்ப்பம் என்பது கருவையும் குறிப்பதாகும். பிரம்மன் விஷ்ணுவின் நாபிக்கமலத்திலிருந்து வந்த தாமரை மலரின் மீது தோன்றியதாகவும் கூறப்படுகிறது. இவர் இந்துக் கடவுளர்களில் முதன்மையானவர். பிரபஞ்சத்தின் படைப்புக்குக் காரணமானவர். படைப்புத் தொழிலினை மேற்கொண்டவர். இவர் தானாகத் தோன்றியவர் எனவே இவர் பிரபஞ்சத்தின் முதல்வர் என்றும் பிதாமகன் என்றும் அழைக்கப்படுவார். இவரைப் பற்றி வேதங்களிலும் புராணங்களிலும் குறிப்புகள் காணப்படுகின்றன.

  நின்ற நிலையில் பிரமன்


  பிரம்மனுக்கும் விஷ்ணுவிற்கும் இடையே யார் பெரியவர் என்ற கருத்து தோன்றியது. இந்த வேளையில் ஒளிப்பிழம்பு வடிவத்தில் இருவரின் முன் ருத்திரன் தோன்றினார். பிரம்மன் சிவனின் சிரசைக் காண (தலை) ஹம்சவடிவில் (அன்னப்பறவை) உச்சியைக் காண மேல்நோக்கிப் பறந்தார். வழியில் கேடகியைச் (தாழம்பூ) கண்டார். சிவனின் உச்சியைத் தாம் கண்டதாகப் பொய்யுரைக்குமாறு பிரம்மன் கேட்டுக்கொண்டார். கேடகியும் அவ்வாறே சிவனிடம் கூறினார். சிவனிடம் பொய்யுரைத்ததால் சிவபூஜையில் கேடகி பூ இடம்பெறக் கூடாது என்ற சாபத்திற்கு ஆளாகினார். விஷ்ணு, வராக வடிவில் புமியைத் துளைத்துக் கொண்டு ருத்ரனின் அடியைக்காண முனைந்தார். இறுதியில் திரும்பி வந்து ருத்ரன் தான் பெரியவர் என்று இருவரும் உணர்ந்தனர்.

  பிரம்மனுக்கு ஐந்து தலைகள் இருந்ததாகவும் ருத்ரனைக் கபாலி என்று கேலி செய்ததால் பிரம்மனின் ஐந்தாவது தலை கொய்யப்பட்டதாகப் புராணங்கள் குறிப்பிடுகின்றன. ரூபமந்தனம் பிரம்மனுக்கு நான்கு சாந்தமான முகங்கள் உள்ளன என்று கூறுகின்றது. இது நான்கு யுகங்களையும், நான்கு வேதங்களையும், நான்கு வர்ணங்களையும் குறிப்பதாக அமைந்துள்ளது.

  படிமக்கலை:

  பிரம்மனின் நான்கு தலைகள் நான்கு திசையை நோக்கியவாறு அமைந்திருக்கும். இவர் நான்கு கரங்களுடன் பத்மாசனம் (தாமரை மலர்) அல்லது ஹம்சத்தின் (அன்னம்) மீது நின்றவாறு அல்லது அமர்ந்தவாறு இருப்பார். சில்பரத்தினம் பிரம்மன் கூர்ச்சாசனத்தில் (கோரைப்பாய்) அமர்ந்திருப்பதாகக் குறிப்பிடுகிறது. பிரம்மன் மஞ்சள் நிற மேனியுடையவர் மஞ்சள் கலந்த சிவப்பு நிறக் கண்களை உடையவர். தலையில் ஜடா முடியுடன் பலவித அணிகலன்கள் மற்றும் வெள்ளை யக்ஞோபவீதம் அணிந்திருப்பார். கழுத்தில் வெள்ளை மலர் மாலை அணிந்திருப்பார். உடலில் திருநீறு பூசி இருப்பார். இடையில் கடிசூத்திரம் (இடைப்பட்டை) கீழ் ஆடையின் மேல் அணிந்திருப்பார். மான் தோலினாலான உபவீத ஆடை அணிந்திருப்பார். (ஒருபக்க தோளினை மறைத்தவாறு) காதில் பொன் மற்றும் ரத்தினக் குண்டலங்கள் அணிந்திருப்பார்.

  சுப்ரபேதகாமம், பிரம்மனின் ஜடை முடி செம்பட்டை நிறமுடையதாகக் குறிப்பிடுகிறது. இவரின் கரங்களில் அக்க மாலை மற்றும் தர்ப்பை இடது கரங்களிலும், வலது கரங்களில் கூசாபுல் மற்றும் கமண்டலம் பிடித்திருப்பார் அல்லது வலது கரங்களில் சுருக் மற்றும் சுருவமும் இடது கரங்களில் ஆஜயதாழியும் (நெய்பாத்திரம்) மற்றும் தர்ப்பையும் பிடித்திருப்பார் அல்லது முன் இரு கரங்களில் அபயமும் வரதமும்ம், பின் இரு கரங்களில் அக்க மாலையும் கமண்டலமும் பிடித்திருப்பார் அல்லது முன் வலது கரம் வரதமும் முன் இடது கரம் கமண்டலமும் பின் வலது கரம் சுருவமும் பின் இடது கரம் ருக்கும் பிடித்திருப்பார்.

  குறிப்பு:

  பிரம்மனுக்கு என்று தனிக்கோயில்கள் தமிழகத்தில் அதிக அளவில் இல்லை ஒரே ஒரு இடத்தில் மட்டுமே தஞ்சை மாவட்டத்தில் கண்டியூர் என்னும் இடத்தில் கோயில் அமைந்துள்ளது. சைவம் மற்றும் வைணவ சமயங்கள் உருவானது போல் பிரம்மனுக்கு என்று தனிச் சமயமோ தனிப் பிரிவோ (sect) தோன்றவில்லை. சிவ ஆலயங்களில் கருவறையின் வடக்குபுறம் உள்ள தோவகோஷ்டத்தில் அமர்ந்தவாறு அல்லது நின்றவாறு பிரம்மனின் சிற்பம் அமைக்கப்பட்டிருக்கும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:03:33(இந்திய நேரம்)