தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பார்வதி

  • பார்வதி

    முனைவர் கி.கந்தன்,
    துறைத்தலைவர்,
    சிற்பத்துறை.

    கி.பி 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 5ஆம் நூற்றாண்டு வரையிலான கால இடைவெளியில் காளிதாசரின் படைப்புகள் வெளிவரும் காலத்திற்கு முன்னரும் புராணங்கள் முழுமையாக வெளிவருவதற்கு முன்னரும் சதி–பார்வதி தோற்றம் தொடர்பான செய்திகள் விரிவாக அறியப்படவில்லை. இவ்விரு கடவுளர்களும் பிற்காலத்தில் புராணங்களின் வாயிலாக இணைக்கப்பட்டுள்ளனர்.

    பார்வதி

    தொன்ம பின்புலம் :

    தட்சனின் மகளான சதி என்பவள் சிவனின் முதல் மனைவியாகவும், ஹீமவான் என்பவனின் மகளாகக் கருதப்படுகிறார். இருப்பினும் பார்வதியும் சதியும் மறுபிறப்பு என்று பிற்காலப் புராணங்கள் கூறுகின்றன. ‘பர்வதா’ என்ற வடமொழி சொல்லுக்கு மலை என்பது பொருள் ஆகும். ஹீமவான் என்ற மலையரசனின் மகளாகத் தோன்றியதால் இவள் பார்வதி என்ற பெயரைப் பெற்றார். தமிழில் மலைமகள் என்று அழைக்கப்பட்ட இவளின் பெயர் வடமொழியில் ‘ஷைலஜா’ என்றும், ‘ஷைலபுத்ரி’ என்றும், ‘ஹைமாவதி’ என்றும் அழைக்கப்படுகிறது. சதி மற்றும் பார்வதி என்ற பெயர்கள் வேத இலக்கியங்களில் காணப்படவில்லை. வேத இலக்கியங்களில் பார்வதியானவள், ‘ருத்ரானி’ என்றும், கேனா உபநிஷத், ‘உமாஹைமாவதி’ என்று குறிப்பிட்டுள்ளது. இமயவானனின் மகளாகப் பார்வதி பிறந்து சிவனை மணந்த நிகழ்வு சிவபுராணத்தில் விளக்கப்பட்டுள்ளது.

    படிமக்கலை :

    பார்வதியின் படிமக்கலை அமைதி என்பது ஓர் தெளிவான வரையறைக்குள் குறிக்கப்படவில்லை. இருப்பினும் சிவனுடன் இணைந்த நிலையில் காணப்படும் தேவியின் கலைக்கூறுகளின் அடிப்படையில் ஒரு கையில் நீல அல்லி மலரும். மற்றொரு கையில் அபய முத்திரையும் காணப்படுகிறது. வெண் நிற மேனியுடன் பார்வதி படிமம் முற்றிலும் அலங்கரிக்கப்பட்டதாகக் காணப்பட வேண்டும். பார்வதியின் படிமம் தனிப்படிமமாக அமைக்கப்படும் நிலையில் சிம்மவாகனம் காட்டப்படலாம் என்று சில்ப நூல்கள் குறிப்பிடுகின்றன. மதுரை தல புராணத்தின் அடிப்படையில் பார்வதி, மீனாட்சியுடன் இணைப்படுத்தப்படுகிறாள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:07:26(இந்திய நேரம்)