தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இலட்சுமி

 • இலட்சுமி

  முனைவர் வே.லதா,
  உதவிப்பேராசிரியர்,
  சிற்பத்துறை.

  புராணப் பின்னணி :

  லெட்சுமி

  இந்து சமயத்தில் முப்பெருங்கடவுளர்களில் விஷ்ணுவின் தேவியாக கருதப்படுகிறது. கடவுளர்கள் மற்றும் தேவர்கள் சேர்ந்து உலக நன்மைக்காகப் பாற்கடலை கடைய முனைகின்றனர். விஷ்ணு கூர்ம அவதாரமெடுத்தபோது அதன் முதுகின் மீது மந்தார மலையினை மத்தாக நிறுத்தி வாசுகி எனும் பாம்பினைக் கயிறாகக் கொண்டு தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் இன்னொரு புறமும் பிடித்து இழுத்து பாற்கடல் கடையப்பட்டது. அதிலிருந்து விலை மதிப்பற்ற பொருட்களும், உயிர்களும் வெளிவந்தன. கற்பக விருட்சம், ஐராவதம் (யானை) உச்சைசிரவஸ் (குதிரை), தன்வந்திரி (மருத்துவர்), அமிர்தம் ஆகியவைகள் ஒவ்வொன்றாக வெளிவருகின்ற போது மகாலெட்சுமியும் வெளிவந்தார். விஷ்ணு, மகாலெட்சுமியைத் தமது தேவியாக மார்பில் (ஸ்ரீ வத்சம்) அனைத்துக் கொண்டார். இவருக்கு ஸ்ரீ, பத்மா, கமலம், திருமகள் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுவர்.

  மேலும் திவிபுஜ லெட்சுமி, கஜலெட்சுமி, வீரலெட்சுமி, ஸ்ரீதேவி, அஷ்டபுஜ லெட்சுமி, பிரசன்ன லெட்சுமி என்று எட்டு வகையான பெயர்களில் சிற்ப சாஸ்திரங்களில் இடம் பெறுகிறார்.

  சாஸ்திர சான்றுகள் :

  விஷ்ணு தர்மோத்திர புராணம், அம்சுமத் பேதாகமம், சில்பரத்னம், விஸ்வகர்ம சாஸ்திரம் ஆகியவற்றில் இதன் குறிப்புகள் காணப்படுகின்றன.

  படிமக்கலை :

  பொன்னிற மேனியையுடையவர் இரத்தினங்கள் பதிக்கப்பட்ட பொன் ஆபரணங்கள் அணிந்திருப்பார். காதில் மகர குண்டலங்கள் அணிந்திருப்பார். தாமரையின் இதழினைப் போன்ற அழகான கண்களைப் பெற்றிருப்பார். இவரின் வலது கரத்தில் தாமரை மலரினையும், இடது கரத்தில் வில்வம் பழத்தினையும் பிடித்திருப்பார். அழகான மெலிந்த இடையினையும் கலையழகுடைய உடல்வாகினைப் பெற்றிருப்பார். மெலிதான ஆடை அணிந்திருப்பார்.

  சிற்பரத்தினம் குறிப்பிடுகையில் இலட்சுமி வெள்ளை நிற மேனியுடையவர் என்றும், இடது கரத்தில் தாமரையும், வலது கரத்தில் வில்வப் பழமும் பிடித்திருக்கும். கழுத்தில் முத்துக்களால் ஆன ஆபரணங்கள் அணிந்திருப்பார். இவரின் இருபுறமும் இரண்டு மங்கையர்கள் சாமரம் வீசிக் கொண்டிருப்பது போல் நின்று கொண்டிருப்பார்கள். இவர்களின் கரங்களில் நீர்க்குடம் ஏந்தியிருப்பர். இலட்சுமி இரண்டு கரங்கள் மட்டும் பெற்றிருப்பாரேயானால் விஷ்ணுவின் அருகில் நிற்பது போல அமைந்திருக்கும்.

  மகாலெட்சுமிக்குத் தனிக்கோயில் அமையப் பெற்றிருந்தால் சதுர்புஜங்களை (நான்கு கரங்கள்) பெற்றிருப்பார். எட்டு இதழ்கள் பெற்ற தாமரை மலரின் மீது சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார். இவரது வலது கரங்களில் அமிர்தகடம் (அமிர்தகலயம்) சங்கு ஆகியவைகளைப் பெற்றிருப்பார். இவரின் பின்புறம் அல்லது பக்கவாட்டில் இரண்டு யானைகள் நின்று கொண்டு தமது தும்பிக்கையில் கலசங்களைத் தாங்கி அபிசேக நீரைச் சொரிந்து கொண்டிருக்கும். இவரின் தலையில் தாமரை மலர் சூடியிருப்பார். கைகளில் கேயூரம், கங்கனம் அணிந்திருப்பார்.

  வரலாற்றுச் சிறப்பு :

  மாமல்லபுரத்தில் மகாலெட்சுமியின் சிற்பம் அமைந்துள்ளது. இது பழைமையானது. பல்லவர்கள் காலங்களிலிருந்து தமிழகத்தில் சிற்ப வடிவம் பெற்று, தொடர்ந்து வழிபாட்டிலிருந்து வருகின்றன. சிவாலயங்களிலும் இடம் பெறுகின்றன. தனிக்கருவறையில் மற்றும் பரிவாராலயங்களிலும் இடம்பெற்றுள்ளன. கருவறையின் தேவகோட்டங்கள், வாயில்கள், கோபுரங்களின் நுழைவாயில், கோபுரங்கள் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:06:16(இந்திய நேரம்)