தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • இராவணானுக்கிரக மூர்த்தி

    முனைவர் வே.லதா
    உதவிப்பேராசிரியர்
    சிற்பத்துறை

    புராணப் பின்னணி:

    இராவணன் இலங்கையின் வேந்தனாக இருந்தான். இவன் குபேரனை வென்று திரும்புகையில் சரவணப் பொய்கை வழியாக்க் கயிலையைக் கடக்க முயன்றான். அங்கே அழகான சோலையினைக் கண்டு மகிழ்ந்த நிலையில், இராவணனது புஷ்பக விமானம் கடந்து செல்ல மறுத்தது. அப்பகுதியிலிருந்து கடந்து செல்ல இயலவில்லை. இராவணன் சுற்றிப் பார்க்க குரங்கு முகமும் குள்ளமான வடிவம் கொண்ட நந்திகேசுவரர் தென்பட்டார். ஈசனின் மெய்காவலரான இராவணனிடம், இப்பகுதியில் (கயிலையின் மேல்பகுதி) மலையில் மீது மகாதேவனும், உமையும் மகிழ்ந்துரையாடுகின்றனர். எனவே இப்பகுதி வழியாகச் செல்ல முடியாது மாற்று வழியில் செல்லுமாறு அறிவுறுத்தினார். இராவணன் அதனை ஏற்க மறுத்து, அறிவுரை வழங்கிய நந்திகேசுவரரைக் “குரங்கு முகம் கொண்டவர்” என்று கடுஞ்சொற்களைக் கொண்டு கடிந்துரைத்தார். இதனைக் கேட்ட நந்தீசர் இராவணனுக்குச் சாபமளித்தார். அதாவது, குரங்கு வர்க்கத்தினால் இராவணனுக்கு அழிவு ஏற்படும் என்பதாகும். சாபத்தையும், அறிவுறுத்தலையும் ஏற்காத இராவணன் கயிலை மலையினைப் பெயர்த்தெடுக்க முயன்றான். கயிலையானது இலேசாக அசைந்ததினால் உமை சற்று கலக்கத்துடன் ஈசனை நோக்கினாள். ஈசன் தமது பெருவிரலினால் மலையினை லேசாக அழுத்தினார். மலையின் அழுத்தம் தாங்கமுடியாமல் வளைந்து இராவணனை நிலை குலையச் செய்தது. இதனால் இராவணன் கலக்கமுற்றான். தனது செயலுக்காக வருந்தினான்.

    கயிலையை அசைக்கும் இராவணன்

    ஈசனின் ஆற்றலை உணர்ந்த இராவணன் ஆயிரம் ஆண்டுகள் தவம் மேற்கொண்டு சிவனை மகிழ்வித்தான். ஈசன் இராவணனின் சிவபக்தியினை மெச்சி வாளினை அளித்து அனுக்கிரகம் செய்தார். இதனால் இப்படிமம் இராவணானுக்கிரக மூர்த்தி என்றழைக்கப்படுகிறது.


    படிமக்கலை:

    ஈசனும் பார்வதி தேவியும் மலையின் மீது அமர்ந்த நிலையில் ஒரே ஆசனத்தில் சுகாசனத்தில் அமர்ந்திருப்பார்கள். இருபுறமும் ஈசனின் மெய்காவலர் இருவரும், பார்வதி தேவியின் பெண் மெய்காவலர்கள் இருவரும் மற்றும் கணங்களும் நின்றிருப்பார்கள். பார்வதி தேவி அச்சத்துடன் ஈசனைத் தழுவியவாறு அமைக்கப்பட்டிருக்கிறாள். இராவணன் உருவம் பத்து தலைகளும், இருபது கைகளுடன் கயிலை மலையைத் தலையில் தாங்கியிருப்பது போல அமைந்திருக்கும். இராவணன் கயிலையின் கீழ் காலை மண்டியிட்டவாறு அமைக்கப்பட்டிருக்கும்.

    சிறப்பு:

    ஈசன் கயிலை மீது அமர்ந்துள்ளதால் “கயிலை நாதர்” என்றும், இலங்கை வேந்தன் இராவணன் ஈசனின் அனுக்கிரகம் பெற்றதால் “இலங்கேசுவரன்” என்ற பேறு பெறுகின்றார். ஈசனிடம் “வாள்” மற்றும் இறப்பில்லா வரமும் பெறுகிறார்.
    இப்படிமம் எல்லோராக் குடவரைகளில் 8ஆம் நூற்றாண்டு தொடங்கி விஜயநகர மன்னர்களின் தூண் சிற்பங்கள் வரை நிலைபெற்றுச் சிறப்புப் பெற்றதாகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:01:15(இந்திய நேரம்)