தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • மத்சய அவதாரம்

    முனைவர் கி.கந்தன்,
    துறைத்தலைவர்,
    சிற்பத்துறை.

    தொன்மம்:

    மச்ய அவதரம்

    விஷ்ணுவின் தசாவதாரங்களில் முதல் அவதாரமாக இது அமைகிறது. இவ் அவதாரம் தொடர்பான செய்திகள் சடபாத பிராமணம், தைத்தர்ய ஆரண்யகா, இராமாயணம், மகாபாரதம், பாகவதர் புராணம் மற்றும் விஷ்ணு புராணம் உள்ளிட்ட பல்வேறு வடமொழிச் சான்றுகளில் இடம் பெற்றுள்ளன. தமிழ் இலக்கியங்களில் குறிப்பாக, சங்க இலக்கியங்களில், மகாபாரதத்தில் வனபருவம், அக்னிபுராணம் போன்றவை இவ்வவதாரத்தின் புராணப் பின்னணியைச் சிற்சில மாறுபாடுகளுடன் விளக்கியுள்ளது. அடிப்படையில் மத்சய அவதாரம் என்பது பிரபஞ்சத்தின் அதிபதியான பிரம்மனால் எடுக்கப்பட்டதாகும். பாகவதபுராணம் இதனைக் கடந்த யுகத்தின் முடிவு காலத்தில் பேர்ஊழி ஒன்று ஏற்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாகப் பூமியின் ஏனைய உலகங்கள் பெருங்கடலில் மூழ்கியதாகவும் அந்நிலையில் ஹயக்கீரிவன் என்ற அரக்கன் படைப்புக் கடவுளால் உருவாக்கப்பட்ட வேதங்களைப் பறித்துச் சென்றான். அந்நிலையில் ஹரி என்று அழைக்கப்படும் விஷ்ணு சபரி என்ற மீனின் வடிவெடுத்து ஹயக்கிரீவனால் திருடிச் செல்லப்பட்ட வேதங்களை மீட்டு வந்தார். இதனடிப்படையில் வேதங்களை மீட்க விஷ்ணு எடுத்த அவதாரமே மத்சய அவதாரம் எனப்படுகிறது.

    படிமக்கலை:

    மத்சய அவதாரச் சிற்பம் என்பது பாதிமீன், பாதி மனிதன் என்ற வகையில் அமைந்துள்ளது. நான்கு கைகளுடன் அமைக்கப்படும் இச்சிற்பத்தில் முன் வலதுகையில் அபய முத்திரையும், முன் இடது கையில் வரத முத்திரையும் பின் வலது மற்றும் இடது கைகள் முறையே சங்கு மற்றும் சக்கரத்தை ஏந்தியவாறு காட்டப் பெற்றிருக்கும். விஷ்ணுவின் தலைப்பகுதி கீரிடத்தால் அலங்கரிக்கப் பெற்றிருக்கும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:02:24(இந்திய நேரம்)