தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • கோயில் தேர்கள்

    முனைவர் கி.கந்தன்,
    துறைத்தலைவர்,
    சிற்பத்துறை.

    வரலாறு:

    தேர்கள் என்பது பொதுவாகத் தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் திருக்கோயில்களில் வாகனம் என்ற பெயரில் பயன்படுத்தப்படுகிறது. தொடக்கக் காலத்தில் இவை ரதம் அல்லது கோரதம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. பிங்கல நிகண்டு இதனைப் பண்டில், சகடம், ஒழுகை, சகாடு என்றவாறு பல்வேறு பெயர்களால் குறிப்பிடுகிறது. இருப்பினும் தேர் தொடர்பான வரலாற்றுச் சான்றுகள் ரிக்வேதத்தில் இருந்து அறியப்படுகின்றன. தேரினைச் செய்பவர் ரதக்காரர்கள் என்றும் வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கௌடில்யரின் அர்த்தசாஸ்த்திரம், அசோகரின் பாறைக் கல்வெட்டு மற்றும் காரவேல மன்னரின் அதிகும்பா கல்வெட்டுகளில் தேர்கள் தொடர்பான செய்திகள் இடம்பெற்றுள்ளன. பொதுவாக, வேதத்தில் குறிப்பிடும்பொழுது தேரினை ஊர்ச் செயல்பாடு மற்றும் போக்குவரத்துச் செயல்பாட்டிற்கு பயன்படுத்திய செய்தி அதிக அளவு இடம் பெற்றுள்ளது. இருப்பினும், ஆரியர்கள் பல்வேறு இடங்களிலிருந்து புலம் பெயர்ந்து வந்த சூழலில் தாங்கள் வழிபட்ட இறையுருவங்களை இத்தகைய தேரில் வைத்துப் பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லும் நிலையில் தேர்கள் என்பது இறையுருவங்களுக்கு வாகனமாகப் பயன்படும் ஓர் மரபு ஏற்படத் தொடங்கியது.

    சான்றுகள்:

    தமிழ் இலக்கியங்கள் பலவற்றின் தேர் தொடர்பான சான்றுகள் பலவும் காணக் கூடியதாக உள்ளன. குறிப்பாக, சங்க இலக்கியங்களில் தேர்கள் தொடர்பான செய்திகள் இடம் பெற்றுள்ள போதிலும் அவை பெரும்பாலும் போர்களில் பயன்படுத்தப்பட்ட தேர்களைப் பற்றிய குறிப்புகளையே தந்துள்ளன. சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும், தேர் தொடர்பான செய்திகள் குறிப்பிடப் பெற்றுள்ளன. இதில் புத்தமதக் கடவுளுக்குத் தேர்த்திருவிழா நடைபெற்ற செய்தி இடம் பெற்றுள்ளது. மணிமேகலையில் பூம்புகாரில் இந்திரவிழா நடைபெற்றபோது ஆலமர் செல்வன் மகனுக்குத் தேர்த்திருவிழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். பத்தி இலக்கியங்களில் குறிப்பாக தேவாரப் பதிகங்களில் காணப்படும் தேரார் வீதி, தேர்கொள்வீதி, தேர்உலா நெடு வீதி என்ற வகையில் தேர்த்திருவிழா நடைபெற்றதற்கான சான்றுகள் காணப்படுகின்றன.

    கலைச்சிறப்பு:

    தேர்கள் என்பன கோயில் கருவறையின் மறுவுருவாகக் கருதப்படுகின்றன. இதனைப் பிற தேர்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டும் வகையில் வைரத் தேர்கள் என்று அழைக்கப்படுகின்றன. தேர்கள் உபானம், உபபீடம், அதிட்டானம் மற்றும் நாடகஸ்தானம் போன்ற உள்ளுறுப்புகளைப் பெற்று விளங்குகின்றன. இதில் விமானம் என்ற அமைப்பு விழாக்காலங்களில் மட்டுமே தற்காலிகமாகக் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டு அமைக்கப்பெறும். அதன் பின்னர் இவை பிரிக்கப்பட்டு வைரத்தேர் என்ற பெயருக்கேற்றவாறு பீடப்பகுதி மட்டுமே தேர் மண்டபத்திற்கு அருகில் நிறுத்தப் பெற்றிருக்கும். இத்தகைய தேர்கள் அதன் தளப்பகுதி அமைப்பின் அடிப்படையில் வட்டத்தேர், அறுகோணத்தேர், சதுர் அமைப்புத்தேர், எண்பட்டைத் தேர் என்று அழைக்கப்படுகின்றன. இது சாஸ்திரங்கள் கூறும் நாகரம், வேசரம், மற்றும் திராவிடக் கலைப்பாணியுடன் ஒப்புமைப் படுத்தப்படுகிறது, பீடப்பகுதி மூன்று தளங்களாகப் பிரிக்கப்படுகிறது. இத்தேர்களில் பொதுவாக 250 முதல் 300 சிற்பங்கள் அமைக்கப்படுவது மரபாகும். இவற்றில் காணப்படும் சிற்பங்களில் சிவனின் நாட்டிய கோலங்கள், அவதாரச் சிற்பங்கள், தலபுராணம் உள்ளிட்ட வாழ்வியல் சிற்பங்கள் மற்றும் தாந்திரீக வகைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. தேரின் உயரம் மற்றும் எடைக்கேற்ப அமைக்கப்பட்டு பொதுவாக ஒரு தேர் 12 முதல் 18 அடி நீளமும் 11 முதல் 16 அடி அகலமும் 11 முதல் 20 அடி உயரமும் 70 முதல் 100 டன் எடை கொண்டதாக அமைக்கப்படும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:01:54(இந்திய நேரம்)