தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

 • கிருஷ்ணாவதாரம்

  முனைவர் கி.கந்தன்,
  துறைத்தலைவர்,
  சிற்பத்துறை.

  வரலாறு:

  விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் இந்தியா முழுமையிலும் பாமர மக்கள் வரையிலும் சென்றடைந்து அவர்கள் வாழ்வின் ஒரு பகுதி என்ற அளவில் சிறப்புப் பெற்ற அவதாரம் கிருஷ்ண அவதாரமாகும். வடமொழிப் புராணங்களான அக்னி புராணம், ஸ்ரீமத்பாகவதம், விஷ்ணு புராணம் மற்றும் மகாபுராணம் உள்ளிட்ட புராணங்களில் கிருஷ்ண அவதாரத்தின் தோற்றம் தொடர்பான செய்திகள், கிருஷ்ணனின் லீலைகள் தொடர்பான செய்திகள், விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன. யாதவ குலத்தில் வாசுதேவர் மற்றும் தேவகி மகனாக கிருஷ்ணர் தோன்றினார். இவரின் சகோதரர் பலராமர் ஆவார். தேவகியின் சகோதரரான கம்சனை வதம் செய்வது தொடங்கி குருஷேத்திரப் போரில் பார்த்தன் எனப்படும் அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக செயல்பட்டு கீதா உபதேசம் வரையிலும் கிருஷ்ணனின் லீலைகள் என்பன பலவாகும்.

  கிருஷ்ணர்

  தமிழ் இலக்கியங்களில் சங்ககாலம் தொட்டு கிருஷ்ணரின் வழிபாடு தொடர்பான சான்றுகள் அதிக அளவில் காணப்படுகின்றன. சங்க இலக்கியங்களில் மாயோன் என்று குறிப்பிடப்படும் கிருஷ்ணன் ஐந்து வகை நிலங்களில் காடுறை நிலம் எனப்படும் முல்லை நிலத்திற்குரிய கடவுளாக மக்களால் வழிபடப்பட்டுள்ளார். சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவை எனப்படும் பகுதி கிருஷ்ண வழிபாட்டின் சான்று எனலாம். பிற அவதாரங்களைப் போல் கிருஷ்ணாவதாரம் தொடர்பான குறிப்புகள் 12 ஆழ்வார்களின் நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் இடம்பெற்றுள்ளது.

  கிருஷ்ணாவதாரப் படிமம் பல்லவர்களின் கலைப்படைப்பான கி.பி 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாமல்லபுரம் கிருஷ்ணா மண்டபத்தில் செதுக்கப் பட்டுள்ளது. கிருஷ்ணர் தமது லீலை நிகழ்வுகளில் பசுக்கூட்டத்தை மழையில் இருந்து காத்திட கோவர்த்தனமலையைக் குடைப்போல் தூக்கிப் பிடித்த நிகழ்வு இக்குடவரையில் படைப்புச் சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற மாமல்லபுரம் தர்மராஜர் ரதத்தில் காளியன் என்ற ஓர் பாம்பு அரக்கனை வதம் (அழித்த) செய்து நாட்டியம் ஆடிய கோலம் காளிய நர்த்தன கிருஷ்ணன் என்ற பெயரில் படிமமாக வெட்டப்பட்டுள்ளது. முற்காலச் சோழர்களின் கட்டுமானக் கோயில்களில் குறிப்பாக தஞ்சை, புள்ள மங்கை, கோயில்களில் கிருஷ்ண லீலை படிமங்கள் சிற்றுருவங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.

  கலை அமைப்பு:

  கிருஷ்ணரின் சிற்பம் இரண்டு கைகளுடன் அமைக்கப்பட வேண்டும். வலதுகை தொங்கவிடப்பட்ட நிலையில் சற்றே உயர்த்திய நிலையில் குச்சி காணப்படும். இடதுகை உயர்த்தப்பட்டு முழங்கைப்பகுதியில் லேசாக வளைந்து அக்கையின் உள்ளங்கைப் பகுதி மேல்நோக்கித் திருப்பிய வண்ணம் காணப்படும். இதில் சங்கு இடம் பெற்றிருக்கலாம். தலையில் கீரிடமகுடம் தரித்த கிருஷ்ணர் படிமம் தனித்துவத் தன்மை பெற்று காணப்படும். கொண்டை ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். இச்சிற்பம் பல்வேறு அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டு காணப்படும். கிருஷ்ணரின் தோற்றம் ஓவியமாக வரையப்பட்டு, அவ் ஓவியம் கருநீலத்தில் தீட்டப்பட வேண்டும் என்று சில்ப சாஸ்த்திர நூல்கள் பொதுவான நெறிமுறைகளை வகுத்துள்ளன.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:01:44(இந்திய நேரம்)