தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

 • சப்தமாதர்கள் (ஏழு தாய்மார்கள்)

  முனைவர் வே.லதா
  உதவிப்பேராசிரியர்
  சிற்பத்துறை

  புராணப் பின்னணி:

  காசியப்ப முனிவருக்கும், திதிக்கும் ஹிரண்யாட்சன், ஹிரண்யகசிபு என்ற இரு மகன்கள் இருந்தனர். இவர்களை விஷ்ணு, வராக மற்றும் நரசிம்ம அவதாரமெடுத்து அழித்தார். ஹிரண்யாக்சனின் மகன் விஷ்ணுபக்தன். இவனுக்குப் பின் வந்த அந்தகாசுரன் பிரம்மனிடம் வரங்கள் பெற்று தேவர்களையும் கடவுளர்களையும் துன்புறுத்தினான். சிவன் அவர்களின் குறைகளை அறியும் நேரத்தில் பார்வதி தேவியைத் தூக்கிச் செல்ல கயிலையை அடைந்த அந்தகாசுரனை அழிப்பதற்கு சிவன் முனைகிறார். சாகாவரம் பெற்றதால் உயிர்ப்பிக்கிறான். அம்புபட்ட இடத்திலிருந்து விழும் ஒவ்வொரு துளி இரத்தமும் பல அந்தகாசுரன்களாகியது. சிவன் அவர்களை அழைக்க தமது வாயிலிருந்து யோகேசுவரியை உருவாக்கினார். இதனைப் போலவே பிரம்மி, மகேசுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டா இவர்களை பிரம்மன், மகேசுவரன், குமரன், விஷ்ணு, வராகர், இந்திரன், எமன் ஆகியோரின் சக்திகளாக உருவாக்கினார். வராகபுராணம் சப்தமாதர்கள் எட்டு பேர் என்றும் எட்டு விதமான குணங்களை உடையவர்கள் என்றும் குறிப்பிடுகிறது. கூர்மபுராணம் சப்தமாதர்கள் தன்னிலை மீளும் வரை பைரவரைப் பாதுகாவலராகப் பாதாளலோகத்திற்கு அனுப்பப்பட்டார் என்றும், விஷ்ணுதர்மோத்திரம் இறந்த உடலை ஆசனமாகக் கொண்டவர் என்று கூறுகிறது. மேலும் இவரைப் பற்றி தேவிப்புராணம், பூர்வகாரணாகமம், அம்சுமத்பேதாகமம், சுப்ரபேதாகமங்களில் கூறப்பட்டுள்ளது.

  சப்தமாதர்கள் புலவன்காடு


  வரலாறு:

  தமிழகத்தில் சப்தமாதர்கள் வழிபாடு பல்லவர் காலத்தில் தோன்றியது. பிற்கால பல்லவர் காலத்தில் காஞ்சி கைலாசநாதர் கோயிலில் அமைக்கப்பட்டது. பாண்டியர் குடவரைக்கு வெளியிலும் அமைக்கப்பட்டது. சோழர் காலத்தில் தனி இடம் வழங்கப்பட்டு விழாக்கள் பூஜைகள் நடத்தப்பட்டது. முற்கால சோழர்கால சப்தமாதர்கள் சிற்பம் மேலப்பழுவூரில் அமைந்துள்ளது. பிற்கால சோழர்கள் பரிவாராலயங்களில் சப்தமாதர்களை இடம் பெறச்செய்தனர்.

  சிற்பக்கலை:

  பிரம்மி:

  நான்கு முகங்களைக் கொண்டவர். பொன்னிற மேனியையுடையவரான இவர் பின் வலது கையில் சூலமும், பின் இடது கையில் அக்கமாலையும், முன்வலது கையில் அபயமும், முன் இடது கையில் வரத முத்திரையும் தரித்திருப்பார். செந்தாமரையின் மீது அமர்ந்து தமது வாகனமாகிய ஹம்சம் (அன்னம்) பொறிக்கப்பட்ட கொடியினை ஏந்தியிருப்பார். மஞ்சள் நிற பீதாம்பரம் (பட்டாடை), தலையில் கரண்ட மகுடம் அணிந்திருப்பதாக அம்சுமத்பேதாகமம் குறிப்பிடுகிறது.

  விஷ்ணுதர்மோத்திரம் குறிப்பிடுகையில் ஆறு கரங்கள் உடையவர் என்கிறது. இடது கரங்களில் அபயம், புஸ்தகம் (சுவடி) கமண்டலம், வலது கரங்களில் வரதம், சூத்திரம், சுருவம் தரித்து மான்தோலாடை அணிந்திருப்பார் என்று குறிப்பிடுகிறது. பூர்வகாரணாகமம் நான்கு கரங்கள் கொண்டவர் என்றும் கைகளில் கமண்டலம், அக்கமாலை அபயம் வரதம் தரித்திருப்பார் என்றும் கூறுகிறது.

  வைஷ்ணவி:

  நான்கு கரங்களை உடையவர். பின் வலது கரத்தில் சக்கரமும், பின் இடது கரத்தில் சங்கும் முன் வலது கரத்தில் வரதமும் தரித்திருப்பார். அழகான முகமும், அடர்ந்த நிறமும் பெற்றவர். எடுப்பான கண்களை உடையவர் மஞ்சள் நிற ஆடையும், கிரீட மகுடமும் தரித்திருப்பார். விஷ்ணுவிற்குரிய அனைத்து அணிகலன்களையும் அணிந்திருப்பார். விஷ்ணுவின் வாகனமாகிய கருடனின் இலச்சினைப் பொறிக்கப்பட்ட கொடியினை ஏந்தியிருப்பார். இவர் இராஜவிருட்சத்தின் கீழ் அமர்ந்திருப்பார் என்று பூர்வகாரணாகமம் குறிப்பிடுகிறது. இவரைப் பற்றி விஷ்ணு தர்மோத்திரம், தேவி புராணம் ஆகியவற்றிலும் கூறப்பட்டுள்ளது.

  இந்திராணி:

  மூன்று கண்கள், நான்கு கரங்களைக் கொண்டவர். இரண்டு கரங்களில் வஜ்ரமும், சக்தியும், இரண்டு கரங்களில் அபயமும் வரதமும் கொண்டவர். சிவந்த மேனியை உடையவர். கிரீட மகுடம் தரித்து அனைத்து வித அணிகலன்களும் அணியப் பெற்றவர். இந்திரனின் வாகனமாகிய ஐராவதம் (வெள்ளை யானை) இலச்சினை பொறிக்கப் பெற்ற கொடியுடன் கல்பக விருட்சத்தின் கீழ் அமர்ந்திருப்பார்.

  விஷ்ணுதர்மோத்திரம், இந்திராணி ஆயிரம் கண்களை உடையவர் என்று குறிப்பிடுகிறது. பொன்னிற மேனியையும், ஆறு கரங்களில் சூத்திரம், வஜ்ஜிரம், கலசம், பாத்திரம், அபயம், வரதம் தரித்திருப்பார் என்று குறிப்பிடுகிறது.

  தேவிபுராணம் கூறுகையில் அங்குசமும் வஜ்ஜிரமும் தரித்திருப்பதாகவும், பூர்வகாரணாகமம் இரண்டு கண்கள் மட்டுமே பெற்றவர் என்று குறிப்பிடுகிறது.

  சாமுண்டா:

  நான்கு கரங்கள், மூன்று கண்கள், சிவந்த மேனியைக் கொண்டவர். தடித்த பரட்டையான மேல்நோக்கிய கேசத்தினை உடையவர். இவரது கைகளில் கபாலம், சூலம், அபயம், வரதம் தரித்திருப்பார். கபால மாலையை யக்ஞோபவீதமாக அணிந்து பத்மாசனத்தில் அமர்ந்திருப்பார். புலித்தோலாடையை அணிந்திருப்பார்.

  விஷ்ணுதர்மோத்திரபுராணம், இவர் இறந்த உடலினை ஆசனமாகக் கொண்டிருப்பார். கொடூரமான தோற்றத்தினையும், கோரைப் பற்களையும் கொண்டவர் என்று குறிப்பிடுகிறது. பத்து கரங்களில் முசலம், கவசம், பாணம் (அம்பு) அங்குசம், கட்கம் (சிறிய கத்தி), கேடயம், பாசம் (கயிறு), தனுஷ்(வில்), தண்டம் (கம்பு), பரசு (கோடரி), தரித்து ஒட்டிய வயிறுடன் காணப்படுவார் என்று குறிப்பிடுகிறது. பூர்வகாரணாகமம் குறிப்பிடும் பொழுது இவர் திறந்த வாயினையும், சிவனைப் போல தலையில் பிறைச் சந்திரனைச் சூடியவராகவும், ஆந்தையை வாகனமாகக் கொண்டு கழுகு பொறித்த கொடியினைக் கையில் ஏந்தியவாறிருப்பார் என்றும், இடது கரத்தில் மாமிசம் நிறைந்த கபாலத்தையும், மற்றொரு இடது கரத்தில் அக்னியும் வலது கரத்தில் நாகத்தினையும் காதில் சங்கபத்ர குண்டலமணிந்து காணப்படுவார்.

  மகேஸ்வரி:

  பொதுவாக நான்கு கரங்களில் சூலம் அக்கமாலை, அபயம், வரதம் தரித்து இடப (காளை) வாகனத்துடன் காணப்படுவார். விஷ்ணுதர்மோத்திரம் கூறுகையில் மூன்று கண்களும், தலையில் பிறைச் சந்திரன் சூடியும், ஆறு கரங்கள் பெற்று அவைகளில் சூத்திரம் டமரு, சூலம், கந்தம், மீதமுள்ள கரங்களில் அபயமும், வரதமும் தலையில் ஜடா மகுடம் தரித்தும் காணப்படும். இவரின் வாகனமாகிய இடபத்தின் இலச்சினை பொறிக்கப்பட்ட கொடியினை ஏந்திருப்பார்.

  கௌமாரி:

  சுப்ரமணியரின் சக்தி வடிவமாகும். நான்கு கரங்கள் பெற்று இரண்டு கரங்களில் சக்தியும், குக்குடமும் மீதமுள்ள இரண்டிலும் அபயமும், வரதமும் தரித்திருக்கும் குமரனின் வாகனமாகிய மயிலின் இலச்சினைப் பொறிக்கப்பட்ட கொடியினைக் கையிலேந்திருக்கும். தலையில் விஷ்ணுதர்மோத்திரம், கௌமாரி ஆறுமுகங்கள் மற்றும் பனிரெண்டு கரங்கள் பெற்றவராகக் குறிப்பிடுகிறது. முன்னிரு கரங்களில் அபயம் மற்றும் வரதம் தரித்தும் மற்ற கைகளில் சக்தி துவஜம், தண்டம், தனுஷ், பாணம் (அம்பு), கந்தம், பத்மம், பாத்திரம், பரசு ஆகியவைகளைத் தரித்திருக்கும். மேலும் இதனைப் பற்றி தேவி புராணம் காரணாகமமும் குறிப்பிடுகின்றன.

  வராகி:

  வராகத்தைப் போன்ற (பன்றியுருவம்) முகத்தோற்றமும் மழை மேகத்தைப் போன்ற நிறத்தையுடையவர். கரண்ட மகுடந்தரித்து பவளத்தினால் ஆன ஆபரணங்கள் அணிந்திருப்பார். விஷ்ணுதர்மோத்திர புராணம் இவரைப் பற்றிக் குறிப்பிடுகையில் பெரிய வயிறு மற்றும் ஆறு கரங்களில், தண்டம், கட்கம், கேடகம், பாசம், அபயம், வரதம் தரித்திருக்கும்.

  பொதுவாக, சப்தமாதர்களின் இரண்டு பக்கங்களிலும் கணபதியும், வீரபத்திரரும் அமர்ந்திருப்பார்கள். வீரபத்திரர் மூன்று கண்களையும் சாந்தமான தோற்றத்தையும் பெற்றிருப்பார். வெள்ளை நிறம், சடாமுடி பின் இரு கைகளில் சூலமும் கதையும், முன் இரு கைகளில் அபயம் மற்றும் வரதம் தரித்துக் காணப்படுவார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:02:43(இந்திய நேரம்)