தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விஷ்ணு

 • விஷ்ணு்

  முனைவர் கி.கந்தன்,
  துறைத்தலைவர்,
  சிற்பத்துறை.

  இந்து மதத்தில் முப்பெரும் கடவுள்கள் மும்மூர்த்திகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் முறையே பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆவார். இவர்களின் செயல்கள் படைத்தல், காத்தல், அழித்தல் என்று பிரிக்கப்பட்டுள்ளன. இம்மூவரில் காத்தல் தொழிலோடு தொடர்புடையவர் விஷ்ணு எனப்படுகிறார். விஷ்ணு தொடர்புடைய இலக்கியச் சான்றுகள் ரிக்வேதம் தொடங்கி பல்வேறு உபநிஷத்துகளிலும், ஆகமங்களிலும் விளக்கப்பட்டுள்ளன. விஷ்ணு என்ற சொல்லுக்கு எங்கும் வியாபித்திருப்பர். (The Pervader) என்று பொருள் கொள்ளப்படுகிறது. விஷ்ணு சகஸ்ரநாமம் விளக்கவுரை எழுதிய ஆதிசங்கரர் எங்கும் நிறைந்திருப்பவர் என்ற வகையில் விளக்கியுள்ளார். ரிக்வேதம் இவர்கனைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது இவர் தமது மூன்று அடிகளால் உலகினை அளந்தவர் என்று குறிப்பிட்டுள்ளது. விஷ்ணுவின் நிலைப்பாடு என்பது பிரபஞ்சத்தின் மூன்று நிலைகளோடு தொடர்புபடுத்தப்படுகிறது. பூமியில் அக்னியாகவும், பெருவெளியில் இந்திரன் அல்லது வாயுவாகவும், வானத்தில் சூரியனாகவும் இருப்பவர் என்று விளக்கப்பட்டுள்ளது. வேத காலத்திற்குப் பின்னர் இவர் வழிபாடு மூன்று பெயர்களின் செயல்பாட்டில் இருந்தது. மனிதர் கடவுள் என்ற நிலையில் வாசுதேவனாகவும், சூரியக்கடவுள் என்ற நிலையில் விஷ்ணுவாகவும், பிரபஞ்சக்கடவுள் என்ற நிலையில் நாராயணனாகவும் இவர் வழிபடப்பட்டுள்ளார் போன்ற நாபிக்கமலத்தைப் பெற்றவன் என்ற பெயரில் பத்மநாபன் என்றும், ஸ்ரீ என்று கூறப்படும் திருமகளின் உள்ளம் நிறைபவன் என்ற நிலையில் ஸ்ரீனிவாசன் என்றும் பல்வேறு பெயர்களில் விஷ்ணு அழைக்கப்படுகிறார். விஷ்ணுவின் படிமம் பொதுவாக நான்கு கைகளுடன் அமைக்கப்படுவது மரபாக இருந்து வருகிறது. முன் கைகளில் அபய, வரத முத்திரையுடன், பின் கைகளில் சங்கு, சக்கரம் கொண்டு காணப்படும். இதன் வண்ணம் மேகம் போன்ற நீல வண்ணம் ஆகும். நீல வண்ணம் என்பது வானம் முழுவதும் நிறைந்து முடிவில்லாது காணப்படுபவர் என்பதைக் குறிக்கிறது. இவரின் மார்பில் தமது துணைவியான லட்சுமியைக் குறித்திடும் வகையில் ஸ்ரீவத்ச முத்திரை காணப்படுகிறது. கழுத்தைச் சுற்றிலும் கௌஸ்தூபம் என்ற ஆபரணமும் வனமாலா என்ற மாலையும் தலையில் கீரிட மகுடமும் அமைக்கப்பட்டு காணப்படும். காதுகளில் காணப்படும். காதணிகள் என்பது தானம் மற்றும் அறியாமை, மகிழ்ச்சி மற்றும் துன்பம், ஆனந்தம் மற்றும் வலி ஆகியவற்றின் குறியீடாக அமைகிறது. இதன் மேல் இடது கையில் காணப்படும். சங்கு பஞ்சஜன்யம் என்று அழைக்கப்படுகிறது. இதில் விஷ்ணு பிரபஞ்சத்தினைத் தோற்றுவித்து இயக்கும் ஆற்றலின் குறியீடாக அமைக்கப்பட்டுள்ளது. பஞ்சபூதங்கள் ஆகியவை இச்சங்கின் மூலம் உணர்த்தப்படுகிறது. வலது கையில் காணப்படும் சக்கரம் சுதர்சனா என்று அழைக்கப்படுகிறது. இது தூய்மையான மனத்தின் அடையாளமாகும். இதன் செயல்பாடு என்பது ஆணவத்தை அழித்து ஆன்மாக்களின் உட்பொருளை உணர்த்துவதாகும்.

  விஷ்ணு

  சூரியனின் பண்புகளின் ஓர் வடிவமாக விஷ்ணு குறிப்பிடப்படுகிறார். சதபாத பிராமணம் விஷ்ணுவைக் குறிப்பிடும் பொழுது யாகமும், அவரும் ஒன்று என்று குறிப்பிடுகிறது. பௌத்த மதம் தோற்றம் பெறுவதற்கு முன்னர் சிறப்பு பெற்றிருந்த இந்திர வழிபாட்டின் முதன்மை குறையத் தொடங்கிய நிலையில் விஷ்ணுவின் வழிபாடு என்பது முதன்மைப்படுத்தப்பட்டது. விஷ்ணு வழிபாட்டாளர்களைக் குறிக்கும் சொல் முதன்முதலாக மகாபாரதத்தின் பின்பகுதியில் இடம்பெறத் தொடங்கியது.

  ஸ்ரீவைஷ்ணவம் விஷ்ணுவின் ஐந்து நிலைகளைக் குறிப்பிட்டுள்ளது. இவை பர, வியூகம், விபவம், அர்ச்ச மற்றும் அந்தர்யாமி. இதில் பர என்பது ஸ்ரீவைகுண்டத்தில் லெட்சுமி மற்றும் பூதேவியுடன் இணைந்து காணப்படும் உன்னத நிலையாகும். வியூகம் என்பது பிரபஞ்சத்தின் செயல்பாடுகளைச் செயலாக்குவதற்கும், உயிர் படைத்தல் முதலிய செயல்பாடுகளை நெறிப்படுத்தும் நிலையாகும். விபவம் என்பது விஷ்ணுவின் பத்து அவதாரங்களுடன் தொடர்புடைய ஒன்றாகும். அந்தர்யாமி என்பது உயிர் பொருத்தலும் ஆன்மா அல்லது உட்பொருளாக இருந்திடும் அற்புத நிலையாகும். அர்ச்சா என்பது சாதாரண மக்கள் திருக்கோயிலில் வைத்து வழிபடும் இறையுருவங்களுடன் தொடர்புடையதாகும். இவர் அச்சுதன் தொடங்கி ஆயிரம் நாமங்களைப் பெற்றவர். இப்பெயர்கள் மகாபாரதத்தின் ஒரு பகுதியாக அமைகின்றன. பாண்டவர்களுக்கும் துரியோதனுக்கும் இடையே நடைபெற்ற குருஷேத்திரப் போரில் பீஷ்மர் கிருஷ்ணனின் முன்னிலையில் இப்பெயர்களை உச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இப்பெயர்கள் நிரந்தரமாக அல்லது முடிவுற்றது என்பதைக் குறிக்க அனந்தன் என்ற பெயரில் பிரபஞ்சமுடையவன் என்ற நிலையில் ஜகன்நாதன் என்ற பெயரில், விஷ்ணு அழைக்கப்படுகிறார்.

  தமிழ்க் கலையில் விஷ்ணுவின் படிமம் முதன் முதலாக, கி.பி ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாமல்லபுரம் திரிமூர்த்தி குடவரையில் அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாமல்லபுரம் ஆதிவராக குடவரையிலும், திர்மராஜரத்திலும் இப்படிமம் அமைக்கப்பட்டது. பல்லவர்களின் குடவரைகளை தொடர்ந்து அவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கட்டுமானக் கோயில்களிலும் விஷ்ணுவின் படிமம் இடம் பெறலாயிற்று. சோழர்காலக் கட்டுமானக் கோயில்கள் குறிப்பாக முற்கால சோழக் கோயில்களில் விஷ்ணுவின் படிமம் கோட்டப்படிமமாக அமைக்கப்பட்டது. விஷ்ணுவின் படிமம் ஸ்தானகமூர்த்தி (நின்றநிலை) ஆசணமூர்த்தி (அமர்ந்தநிலை) மற்றும் சியனமூர்த்தி (இடந்தநிலை) என்ற மூவேறுப்பட்ட கலையமைதிகளில் கட்டுமானக் கோயில்களால் கருவறைப்படிமமாக இத்தகைய படிமங்கள் வைக்கப்பட்டன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:05:56(இந்திய நேரம்)