தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தஞ்சை நால்வர் – சின்னையா

  • தஞ்சை நால்வர் – சின்னையா


    முனைவர் செ.கற்பகம்
    உதவிப் பேராசிரியர்
    இசைத்துறை

    திருக்கோயில் வளர்த்த கலை மரபில் நாட்டியக்கலையும் ஒன்றாகும். ஆலயத்தில் இருந்த நாட்டியக் கலையை அரங்கக் கலையாக்கிய பெருமை தஞ்சை நால்வரைச்சாரும். தஞ்சை நால்வருள் சின்னையாவும் ஒருவராவார்.

    பிறப்பு :

    தஞ்சை நாட்டிய ஆசிரியர் சுப்பராயனின் மூத்த மகனான சின்னையா 1802 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய சகோதரர்களாகப் பொன்னையா, சிவானந்தம், வடிவேலுவும் விளங்கினார்.

    சின்னையாவின் முன்னோர்கள் :

    தஞ்சையில் மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா (1763-1787) காலம் முதல் தஞ்சை நால்வரின் மூதாதையர் அவைக் கலைஞர்களாக இருந்து இசை, நாட்டியப் பணியினை ஆற்றி வந்தார்.

    தஞ்சைநால்வர்

    தஞ்சை மாவட்டம் இராசமன்னார்குடிக்கு அருகிலுள்ள செங்கணார் கோயில் என்ற கிராமத்தில் வேளாளர் குடியில் பண்முறை ஓதுபவர்களாகவும், சிவத்தொண்டு புரிபவர்களாகவும் தஞ்சை நால்வரின் மூதாதையர் வாழ்ந்தனர். இவர்களின் பெயர்கள் மற்றும் இதர விவரங்களை அறியவில்லை. இவர்களின் பூர்வீக இருப்பிடமாகத் திருநெல்வேலி திகழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

    இக்குடும்பத்தில் தோன்றிய மகாதேவ அன்னாவி, கங்கமுத்து, இராமலிங்கம் என்ற மூன்று சகோதரர்களும் தஞ்சை மராட்டிய மன்னன் இரண்டாம் துளஜாவின் காலத்தவர்களாக விளங்கினர். இவர்களின் காலத்திற்குப் பின்பு தான் இக்குடும்பத்தாரின் வரலாற்றினை அறிய முடிகின்றது. துளஜா மன்னரின் ஆதரவால் இக்குடும்பத்தார் தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் நாட்டியப் பணியையும், தஞ்சை அரண்மனைப் பணியையும் மேற்கொண்டிருந்தனர்.

    இவர்களின் காலம் வரையில் கோவிலில் நடனக்கலை இன்றைய அரையர் நடனம் போல் இருந்தது. ஆலயங்களில் பிரபந்தம், சிம்மநந்தனம், குடக்கூத்து போன்ற நடனக்கலை வடிவ நிகழ்ச்சிகள் மட்டும் நடைபெற்றன.

    கங்கமுத்துவின் குமாரர்களான சுப்பராயன், சிதம்பரம் இருவரும் தஞ்சை மன்னர் துளஜாவின் அரண்மனையிலும், தஞ்சைப் பெரிய கோவிலும், நாட்டியப் பணி செய்து வந்தனர். நவசந்தி கவுத்துவங்களும், பஞ்சமூர்த்தி கவுத்துவங்களும் இவர்கள் காலத்தில் இயற்றப்பட்டதாகத் தெரிகிறது. இவர்களில் சுப்பராயன் அவர்களின் குமாரர்களாகத் தஞ்சை நால்வர் தோன்றினர்.

    சின்னையாவின் இசைப் பயிற்சி :

    தஞ்சை சின்னையாவும் அவரது சகோதரர்களும் முத்துசாமி தீட்சிதரிடம் இசை கற்றனர். இதனைக் கற்க தஞ்சை சரபோஜி மன்னரே ஏற்பாடு செய்தார். இசைப் பயிற்சியோடு தமிழ், தெலுங்கு, வடமொழிகளிலும் பயிற்சி பெற ஏற்பாடு செய்தார். நாட்டியக் கலையில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல இலயஞானமும், சுரஞானமும், சாகித்திய ஞானமும் தேவை. இவை அனைத்து முத்துசாமி தீட்சிதர் மூலமாக இவர்களுக்குக் கிடைத்தன. இச்சகோதரர்களின் இசை அரங்கேற்றம் மராட்டிய அரசவையில் சரபோஜி மன்னன் முன்பு நடைபெற்றது. இவர்களின் இசையைக் கேட்ட சரபோஜி மன்னன் மனமகிழ்ந்து இவர்களின் குருவான தீட்சிதருக்கு 5000 ரூபாய் பணமுடிப்பைப் பரிசாகக் கொடுத்தார்.

    மைசூர் அரசவைக் கலைஞர் :

    தஞ்சை நால்வர் தஞ்சை மன்னரிடம் ஏற்பட்ட மனவருத்தத்தால், தன் சகோதரர்களுடன் இணைந்து திருவாங்கூருக்குச் சென்றனர். பிறகு மைசூர் மன்னர் இவரை அழைத்ததன் பேரில் மைசூர் சென்று ஸ்ரீசாமராஜ உடையார் அரசவையில் அவைக் கலைஞராக விளங்கினார். இவர் அங்கு வாழ்ந்த காலத்தில் சாமுண்டீஸ்வரியின் மீதும், சாமராஜ உடையார் மீதும் கீர்த்தனைகள், தானவர்ணங்கள், சுவரஜதிகள், பதவர்ணங்கள், தில்லானாக்கள், ஜாவளிகள் ஆகியவற்றை இயற்றினார்.

    சகோதாரர்களுடன் இணைந்த பணி :

    சின்னையா தன் சகோதரர்களுடன் இணைந்து பரதநாட்டியத்திற்குரிய அடிப்படை பயிற்சி முறைகளை வகைப்படுத்திக் கொடுத்தார். அவை, தட்டு அடைவு, நாட்டு அடைவு, குதித்து மெட்டு அடைவு, மெட்டடைவு, நடை அடைவு, அருதி அடைவு, முடிவடைவு என பத்தாக வகுத்து, ஒவ்வொன்றும் 12 பேதங்கள் வீதம் 120 அடவுகளாக வகைப்படுத்தினர். அடைவிற்குப் பிறகு கற்கக்கூடிய அலாரிப்பு, ஜதீசுரம், சப்தம், பதவர்ணம், சுரஜதி, பதம், ஜாவளி போன்ற நாட்டிய வகைகளை உருவாக்கி அவற்றை இரு மாணவிகளுக்குக் கற்பித்து முத்துசாமி தீட்சிதர் முன்னிலையில் அரங்கேற்றினர். இவற்றைக் கண்ட தீட்சிதர் இவர்களுக்கு “சங்கீத சாகித்திய பரத சிரேஷ்டம்” என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தார்.

    ஜாவளிகள் :

    தஞ்சை சின்னையா இயற்றிய ஜாவளிகள் ஜாவளிஸ் ஆஃப் ஸ்ரீ சின்னையா (Javalis of Sir Chinnaiya) என்னும் தலைப்பில் 1979 ஆம் ஆண்டு பெங்களூர் பொன்னையா நாட்டிய சாலா என்கிற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நூலினைத் தஞ்சை நால்வரின் எட்டாம் தலைமுறையினரான தஞ்சை க.பொ.கிட்டப்பா பிள்ளை அவர்கள் சுவரதாளக் குறிப்புடன் வெளியிட்டார். இந்த ஜாவாளிகள் சுரடி, பைரவி, பெகாக், கானடா, கேதாரகௌளை, பரசு, கமாசு, பிலகரி போன்ற கர்நாடக, தேசிய இராகங்களிலும், ஆதி, மிச்ரசாபு, ரூபகம் போன்ற தாளங்களிலும் அமைந்துள்ளன.

    நாட்டிய உருப்படிகள் பல படைத்து நாட்டிய உலகிற்கு அருந்தொண்டாற்றிய சின்னையா அவர்கள் கி.பி 1856 ஆம் ஆண்டு இறைவனடிச் சேர்ந்தார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:12:17(இந்திய நேரம்)