தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

திருஞானசம்பந்தரின் தனிச்சிறப்புப் பதிகங்கள்

  • சங்கரதாசு சுவாமிகள்

    முனைவர் இரா.மாதவி
    உதவிப் பேராசிரியர்
    இசைத்துறை

    இருபதாம் நூற்றாண்டில் கலை வளர்த்த பெரியோர்களுள் நாடகங்களுக்கு பயன்படக்கூடிய வசனங்களோடு நல்ல பல தமிழ்ப் பாடல்களையும் , இயற்றி அவற்றைப் பல இனிய இராகங்களில் இசையமைத்து, இளம் நடிகர்களுக்குப் பாடல் பயிற்சி அளித்து, முத்தமிழுக்கும் அருந்தொண்டாற்றியவர் தவத்திரு சங்கரதாசு சுவாமிகள் ஆவார்கள். சென்ற அறுபது ஆண்டுகளுக்கிடையே சுவாமிகளின் நாடகப் பாடல்களை மேடை நாடகங்களில் பயன்படுத்தாத நாடக நடிகையர் தமிழ் நாடக உலகில் பெரும்பாலும் இல்லை என்றே கூறலாம்.

    பிறப்பு

    “தமிழ் நாடகத் தந்தை” எனப் போற்றப்படும் தவத்திரு சங்கரதாசு சுவாமிகள் தூத்துக்குடியில் வாழ்ந்த தாமோதரக் கணக்குப்பிள்ளை என்னும் தமிழ்ப் புலவரின் மகனாக 1897 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் ஏழாம் நாள் பிறந்தார். தந்தையிடமே ஆரம்பக் கல்வியைக் கற்றார். அக்காலத்தில் “புலவரேறு” என்று போற்றப்பட்ட பழனி தண்டபாணி சுவாமிகளிடம் சங்கரதாசு சுவாமிகள் பாடம் கேட்டுத் தமது தமிழ் அறிவை வளர்த்துக் கொண்டார். சுவாமிகள் இலயமேதை புதுக்கோட்டை மான்பூண்டிப் பிள்ளையிடம் இசை பயின்றார். அவருடைய பாடல்களுக்கு அவரே இசை அமைத்துள்ளார். இப்பாடல்கள் எடுத்த எடுப்பிலேயே இராகத்தின் வடிவத்தை விளக்குகின்றன.

    தூத்துக்குடி உப்பு பண்டகச் சாலையில் சுவாமிகள் சில காலம் கணக்கராகப் பணியாற்றினார். கலை உள்ளம் கொண்ட அவருக்கு அப்பணி மனநிறைவைத் தரவில்லை. அவர் 1891 ஆம் ஆண்டு தமது 24வது வயதில் நாடகத்துறையில் தம்மை முழுமையாக பக்குவப்படுத்திக்கொண்டார். நாடகச் சபைகளில் சுவாமிகள் தொடக்கத்தில் நடிகராகவும், பின்னர் ஆசிரியராகவும் பணியாற்றினார். அப்பொழுது புதுப்புது நாடகங்களையும் அவற்றுக்கான பாடல்களையும் எழுதி வந்தார்.

    1910 ஆம் ஆண்டில் “சமரச சன்மார்க்க நாடக சபை ” என்ற பெயரில் ஒரு நாடக சபையை நடத்தினார். இந்த நாடகக் குழுவில்தான் எஸ்.ஜி.கிட்டப்பாவும், அவரது சகோதரர் எஸ்.ஜி.காசி அய்யரும் பயிற்சி பெற்றனர். இசைப்புலவராக விளங்கிய மதுரை மாரியப்ப சுவாமிகளும் இந்த நாடகக் குழுவில் பணியாற்றியவரே.

    நாடக மேடை இளம் சிறுவர்களை அறிமுகப்படுத்தி நாடக ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் கொண்டு வந்தவர் சங்கரதாசு சுவாமிகள். சிறுவர்களுக்குப் பயன்படும் வகையில் எல்லா நாடகங்களுக்கும் உரிய பாடல்களையும், உரையாடல்களையும் சுவாமிகள் முறையாக எழுதினார். புராண இதிகாச நடைபெற்ற கதைகளையே நாடகங்களுக்குத் தேர்ந்தெடுத்தார்.

    சீமந்தனி, மணிமேகலை, லவகுசா, சத்தியவான் சாவித்திரி, அபிமன்யு சுந்தரி, வள்ளித் திருமணம், பவளக்கொடி, சுலோச்சனாகதி, பிரபுலிங்க லீலை, சிறுத்தொண்டர், பிரகலாதா, கோவலன், சதி அனுசுயா, அல்லி அர்ச்சுனா, பார்வதி கல்யாணம், போன்றவையாகும். சுலோச்சன சதி இரவில் புனையப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

    சுவாமிகள் கையாண்ட இராகங்கள்

    மக்கள் வழக்கில் இருந்த தோடி, மாயாமாளவ கௌளை, சங்கராபரணம், கல்யாணி, போன்ற பல மேளகர்த்தா இராகங்களையும், மோகனம், காபி, மத்யாமாவதி, போன்ற பல கிளை இராகங்களையும் சுவாமிகள் தமது நாடகப் பாடல்களில் பயன்படுத்தியுள்ளார். இராகமாலிகையிலும் பாடலை அமைத்துள்ளார்.

    இந்துஸ்தானி, இசையாலும், நாடகப் பாடல்களை இயற்றியுள்ளார். சான்றாக பியாக், ஜோண்புரி, யமுனாகல்யாணி, அமீர்கல்யாணி, காபி, மாண்ட், சிந்துபைரவி போன்ற இராகங்களாகும்.

    தாளம்

    இசையில் பெரும்பாலும் நாம் கையாளும் ஆதி, ரூபகம், மிச்ரசாபு, ஏகம், ஆகிய தாளங்களையே கையாண்டுள்ளார். தாள வேறுபாடுகளைத் தேவைப்படும் இடங்களில் கண்டசாபு, திச்ரநடை. சதுசர நடைகளையும், விளம்பம், மத்தியமம், துரிதம் போன்ற காலங்களையும் சுவாமிகள் பயன்படுத்தியுள்ளார்.

    தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருவருட்பா போன்ற பக்திபாடல்களின் மெட்டுக்களில் பல நாடகப் பாடல்களை அமைத்துள்ளார். அண்ணாமலை ரெட்டியாரால் இயற்றிய காவடிச்சிந்து மெட்டுக்களிலும் இயற்றியுள்ளனர்.

    சுவாமிகள் பங்கேற்ற நாடக சபைகள்

    ராமுடு ஐயர் நாடக சபை, சாமி நாயுடு நாடக சபை, வள்ளி வைத்திய நாத ஐயர் நாடக சபை, அல்லி பரமேருவர ஐயர் நாடக சபை, டி.எஸ்.வேணுநாயரின் சண்முகாநந்தசபை.

    1918 ஆம் ஆண்டில் மதுரையில் ‘தத்துவ மீனலோசனி வித்துவ சபை’ என்ற ஒரு புதிய நாடக சபையைச் சிறுவர்களை நடிகர்களாகக் கொண்டு அமைத்தார். இவ்வாறு நாடகத்துறையை மீட்டுத்தந்தார் தவத்திரு நாடகத்தந்தை.

    1922 நவம்பர் 13 திங்கட்கிழமை பாண்டிச்சேரி நகரில் இறையடி எய்தினார். மதுரையில் இவரது நினைவுச் சின்னமாகத் தி.க.சண்முகம் உடன்பிறந்தவர்கள் சங்கரதாசு நாடக மன்றம் அமைத்துள்ளனர்.

    சிறப்புச் செய்திகள்

    சங்கரதாசு சுவாமிகள் இயற்றியுள்ள பாடங்களில் 95 பாடல்கள் தேர்ந்தெடுக்கப்பெற்று அப்பாடல்களைச் சுரதாளக் குறிப்புகளோடு தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை ஒரு நூலாக 1989இல் வெளியிட்டுள்ளது. சங்கரதாசு சுவாமிகளின் நாடகங்களில் நடித்த கலைமாமணி நகைச்சுவை செல்வன் டி.என்.சிவதாணு தம் குழுவினருடன் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு வந்து சுவாமிகள் இயற்றிய பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை மரபு முறையில் பாடியளிப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துள்ளார்கள். இந்த மரபு பாதுகாக்கப்பட வேண்டும் என்னும் நோக்கோடு தமிழ்ப் பல்கலைக்கழகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:16:35(இந்திய நேரம்)