தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பரசுராம அவதாரம்

 • பரசுராம அவதாரம்

  முனைவர் கி.கந்தன்,
  துறைத்தலைவர்,
  சிற்பத்துறை.

  தொன்மைப் பின்ணணி:

  விஷ்ணு, கையில் பரசு என்ற ஆயுதத்தை ஏந்திய நிலையில் தோற்றம் பெற்ற அவதாரத் திருக்கோலம் பரசுராமன் அவதாரமாகும். ஜமத்கனி மற்றும் ரேணுகாதேவியின் மகனாகப் பரசுராமர் தோன்றினார். அர்ஜூனனின் மகனான கர்த்தவீரியன் என்பவர் ஜமத்கனி முனிவரின் காமதேனுவைக் கவர்ந்து சென்றான். இதனால் கோபமுற்ற பரசுராமர் கர்த்தவீரியனை அழித்திட முற்பட்டார். அத்துடன் மட்டுமின்றி கர்த்த வீரியன் சத்ரியர் (அரசர்குலம்) என்பதால், சத்திரிய குலத்தினையே அழிப்பதற்கு முயன்றார். இந்நிகழ்வு தொடர்பான புராணப் பின்னணி விஷ்ணு புராணத்திலும் மற்றும் சில புராணங்களிலும் விளக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ் இலக்கியங்களில் மணிமேகலையில் இவரின் தோற்றம் தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, ஆழ்வார்களின் பாசுரமான பெரிய திருமொழியில் பரசுராமர் தொடர்பான சான்றுகள் இடம்பெற்றுள்ளன.

  படிமக்கலை:

  பரசுராமர் படிமம் பொதுவாக இரண்டு கைகளுடன் அமைக்கப்பட வேண்டும். வலது கை பரசு என்ற ஆயுதத்தை ஏந்திய நிலையில் இடது கை சூசி முத்திரையுடன் அமைந்திட வேண்டும். தலையில் ஜடாமகுடமும், மார்பில் முப்புரி நூலும் அமைக்கப்பட வேண்டும். கலை என்ற நிலையில் பிற அவதாரச் சிற்பங்களுடன் ஒப்பிடும் நிலையில் பரசுராமர் வடிவம் மிகக் குறைவாக உள்ளது. சோழர் காலத்தில் ஓரளவிற்கு இவர் வழிபாடு முதன்மை பெற்றதற்குச் சான்றாக கி.பி. 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட குடிமல்லத்தில் உள்ள பரமேஸ்வரர் கோயிலின் பெயரின் அடிப்படையில் கூறலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:03:54(இந்திய நேரம்)