தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஹரிஹரர் அல்லது ஹரியர்த்தமூர்த்தி (சங்கரநாராயணர்)

 • ஹரிஹரர் அல்லது ஹரியர்த்தமூர்த்தி
  (சங்கரநாராயணர்)

  முனைவர் வே.லதா,
  உதவிப்பேராசிரியர்,
  சிற்பத்துறை.

  தோற்றம் :

  சிவனும், விஷ்ணுவும் ஒன்றிணைந்து பிரபஞ்ச உயிர்களையும், நிகழ்வுகளையும் காப்பதற்காக உருவெடுத்த படிமம். இப்படிமம் அர்த்தநாரீஸ்வரரைப் போல் ஒன்றிணைந்த உருவ அமைதியை உடையது. ஹரி என்பது விஷ்ணுவையும், ஹரண் என்பது சிவனையும் குறிப்பதாகும். அர்த்தநாரீசுவரர் படிமத்தில் இடது பாதி தேவியும் (பிரக்ருதி) வலது பாதி சிவனும் (புருஷ) ஒன்றிணைந்த படிமமாக இணைந்து பிரபஞ்ச உயிர்களின் உற்பத்தியினை ஏற்படுத்தியது. இதன் வடிவைச் சைவ சமயம் லிங்கமாகவும், யோனியாகவும் (ஆவுடை) கருதியது. இப்பகுதி உமை, துர்க்கை மற்றும் தேவியின் பாகமாகக் கூறப்படுகிறது. ஆவுடைப் பகுதியான பிரக்ருதி வடிவில் (விஷ்ணுபாகம்) மங்கை பாகத்தில் விஷ்ணு இடம் பெற்றிருப்பார். அதாவது சிவ மற்றும் சக்தி வடிவில் சக்தியின் பகுதியில் விஷ்ணு தோன்றியிருப்பார். இவரைப் பற்றி வாமன புராணத்தில் குறிப்புகள் காணப்படுகின்றன.

  ஸ்தானக (நின்ற) நிலையில் தேவ கோஷ்டத்தில் ஹரிஹரர்

  இந்து சமயம் தழைக்கப் பக்தி இயக்கம் உருவானது. அதன் கிளைகளான சைவமும், வைணவமும் ஒன்றையொன்று மிஞ்சுமளவில் பக்தியினையும் சமயப் பற்றினையும் பதிகங்களாகவும், பாசுரங்களாகவும் துதித்துப் போற்றியது. இவ்வேளையில் இரு சமயத்தாரிடமும் காழ்ப்புணர்வு ஏற்படும் நிலை உருவாவதைத் தடுக்க மற்றும் தவிர்க்க சைவ – வைணவ ஒற்றுமையினை நிலை நிறுத்த உருவாக்கப்பட்ட படிமக்கலைப் படைப்பாகும். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் ஹரிஹரர் வடிவம் தாங்கி உலகினைக் காப்பதாகச் சைவ சமயத்தினராலும், வைணவ சமயத்தினராலும் போற்றப்படுகிறது. இச்சிற்பத்தின் முக்கிய நோக்கம் உலக உய்தியையும் சமயம் ஒற்றுமையினையும் நிலை நிறுத்துவதாகும்.

  படிமக்கலை:

  ஹரிஹரர் தமிழில் சங்கரநாராயணர் என்றழைக்கப்படுகிறார். இவருக்கு நெல்லை மாவட்டம், சங்கர நாராயணர் கோயில் என்னும் ஊர், இவரது பெயரிலேயே ஊரும், தலமும் அமையப்பெற்றுள்ளது. இது அமைந்துள்ள இடம் பாண்டி நாடு. இவரது வலது பாதி அர்த்தநாரீஸ்வரரைப் போல் சிவனின் பகுதியாக அமைந்திருக்கும். இடது பாதி விஷ்ணுவின் பாதியாகும். இடது பாதி இரண்டு கரங்கள் பெற்று அதில் சக்கரம், சங்கு அல்லது கதை மற்றும் ஊரு ஹஸ்தம், அல்லது கடக முத்திரை தரித்திருக்கும். விஷ்ணுவின் தலை பாகத்தில் இரத்தினங்கள் பதிக்கப்பட்ட கிரீட மகுடம் தரித்திருக்கும். இடது காதில் மகரகுண்டலம் அணிந்திருக்கும். கைகளில் கேயூரம், கங்கணம் அணிந்திருக்கும். மஞ்சள் நிற பட்டுபீதாம்பரம் அணியப்பட்டிருக்கும். நீலநிற மேனியராய் சௌமிய (சாந்தமான) தோற்றப்பொழிவுடன் அமைந்திருக்கும். வலது பாதி சிவனின் உடலில் நாகவடிவிலான அணிகலன்கள் அணிந்து வெள்ளை நிற (திருநூற்றுச்சாந்து) மேனியராய் அமைந்திருப்பார். கோரமான தோற்றமும், நெற்றியில் அரைக்கண் கொண்டவராய் (அர்த்தநேத்திரன்) தலையின் பின்புறம் சிரசக்கரம் அல்லது ஒளிவட்டம் அமையப்பெற்றிருப்பார். தலையில் சடாமுடி தரித்து காதில் சர்ப்ப குண்டலம் அணிந்திருப்பார். கைகளில் பரசு மற்றும் நாகத்தினைப் பிடித்திருப்பார். விஷ்ணுவின் இடது புறம் கருடனும், சிவனின் வலது புறம் நந்தியும் நின்றவாறு தோன்றுவர்.

  வரலாற்றுச் சிறப்பு:

  ஹரிஹரர் சிற்பம் பழமையானது. பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்களால் சிறப்படைந்தது. இராஷ்டிரகூடர்கள், சாளுக்கியர்களாலும் இச்சிற்பம் படைக்கப்பட்டது. பல்லவ, சோழ, பாண்டிய மண்டலங்களில் பரவலாக இடம்பெற்றது. சோழர்கள் காலத்தில் தேவகோட்டங்களில் அமைக்கப்பட்டது. தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம், சிதம்பரம் ஆகிய இடங்களில் காணலாம். மூலவரே சங்கர நாராயணராக, சங்கரன் கோயிலில், பாண்டிய நாட்டில் வீற்றிருக்கிறார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:03:23(இந்திய நேரம்)