தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

திருஞானசம்பந்தரின் தனிச்சிறப்புப் பதிகங்கள்

 • வீ.ப.கா.சுந்தரனாரின் வாழ்க்கை

  முனைவர் இரா.மாதவி
  உதவிப் பேராசிரியர்
  இசைத்துறை

  வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் இராஜபாளையம் அருகிலுள்ள கோம்பை என்னும் கிராமத்தில் மறவர் குடியில் தோன்றியவர். இவர் 1915 செப்டம்பர் 5 ஆம் நாள் பிறந்தார். இவர் 15 வது வயதிலிருந்தே குறட்பா எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். மேலும் இவர் வெண்பாக்கள், கவிதைகள் போன்றவற்றை எழுதுவதில் திறமை மிக்கவராகத் திகழ்ந்தார். இவர் இளமையிலேயே தமிழில் ஆர்வம் கொண்டவர். சுந்தரம் என்ற தம் பெயருக்கு முன்னால் தம் தந்தை வழிப்பாட்டனார், தாய் ஆகியோர்களின் பெயர்களை வைத்துக்கொண்டார்.

  வீ - தந்தை வழிப்பாட்டனார் - வீரணன்
  ப - தந்தை - பரமசிவம்
  கா - தாய் - காமாட்சி

  இவர் மறவர் குடியில் பிறந்தாலும் தமது தந்தையாரின் விருப்பத்துக்கிணங்கி கிறிஸ்தவ மதத்துக்கு மதம் மாறினார். அவ்வினத்தில் பிறந்த ‘கிரேஸி’ என்னும் இல்ல நல்லாளை மணம் முடித்துக்கொண்டார். இவருக்கு நான்கு மக்கள். அனைவருமே ஆடவர்கள்.

  வீ.ப.கா.சுந்தரனார் “புரட்சிக்கவி பாரதிதாசன்” போன்ற தோற்றத்தை உடையவர். உடல் உருவத்தால் மட்டுமின்றி கருத்துக்களாலும் புரட்சிச் சிந்தனை படைத்தவர். இவர் எங்கும் தமிழிசை, எதிலும் தமிழிசை வளர வேண்டுமெனப் பாடுபட்டார். அயராத உழைப்பும் எட்டுத்தொகை பத்துப்பாட்டு ஆய்வும், குறிப்பாக தொல்காப்பியம், சிலப்பதிகாரம் குறித்து நெடிய ஆய்வு செய்தவர்.

  இவர் தமிழிசைக்காகப் பல்வேறு இடங்களுக்குச் சென்று சொற்பொழிவுகள் செய்து தமிழிசையை வளர்த்தவர். சங்ககால நூல்கள் மற்றும் பழம்பெரும் நூல்களையும் ஆய்ந்து பல நூல்களை இவ்வுலகத்திற்கு அளித்தவர்.

  இவர் தம் தொடக்கக் கல்வியைப் பசுமையில் உள்ள அரசினர் பள்ளியில் தொடங்கினார். இவர் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் புலமை பெற்றவராகத் திகழ்ந்தார். இவருக்கு அவ்வப்போது தமிழ்ப்பற்றை ஊட்டி இசை வல்லுனராகத் திகழ வைத்த பெருமை நாவலர் ச.சோம சுந்தர பாரதியைச் சாரும். மேலும் இவருக்குச் சமயகுருவாக அருள் பெருந்தொண்டர் எல்.எல்.லார்பீர் அவர்களும் நல்லாசானாக விளங்கினார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்வான் பட்டமும். முதுகலைஞர் பட்டமும் பெற்றவர். மதுரைப் பல்கலைக்கழகத்தில் எஸ்.இராமநாதன் அவர்களை வழிகாட்டியாகக் கொண்டு “பழந்தமிழ் இலக்கியத்தில் இசையியல்” என்ற ஆய்வு ஏட்டினை உருவாக்கி முனைவர் பட்டம் பெற்றவர். இவர் இசையில் இருபத்தி நான்கு நூற்களைப் படைத்துள்ளார்.

  வீ.ப.கா.சுந்தனாரின் இசைக்கல்வியும், வழங்கப்பட்ட பட்டங்களும் :

  இவர் சேதுபதி மன்னரின் அவைக்களப் புலவர் மேன்மை மிகு “சங்கர சிவம்” அய்யா அவர்களிடம் சுமார் பத்தாண்டுகளாக இசையின் காலக் கணக்குகள் பற்றியும் முழவு முழக்கியங்கள் பற்றியும் பாடம் கேட்டார். அவற்றின் பயனாகவே சுந்தரனார். “மத்தள முழக்கியல்” (The Art of Drumming) என்ற பெரும் நூலுக்கு உரை எழுதியுள்ளார். மேலும் இவரிடமே தாள சொற்கட்டுக்களையும், மிருதங்கம் கஞ்சிரா போன்ற கருவிகளை வாசிக்கவும் கற்றுக்கொண்டார். மத்தளத்தையும், கஞ்சிராவையும் மாமேதையான மதுரை கிருஷ்ண அய்யங்காரிடம் பயிற்சி பெற்றவர்.

 • 1988 சென்னையில் இராமலிங்கர் பணி மன்றமும் இராஜாசர் அண்ணாமலை செட்டியார் அறக்கட்டளையும் இணைந்து நிறுவப் பெற்றப் பிறப்பு மங்கலப் பரிசு 50,000/= ரூபாய் முதன் முதலாக மு.அ.மு இராமசாமி செட்டியார் அவர்களால் வழங்கப்பட்டது.
 • இவ்விழாவில் “இசைக் கலைச்செல்வன்” என்ற பட்டம் அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்களால் வழங்கப்பட்டது
 • 14.03.1995 தமிழில் செவ்விய பணிகள் ஆற்றியமைக்காக திரு.வீ.ப.கா. சுந்தரனாருக்குப் “முத்தமிழ் பேரறிஞர்” என்ற பட்டத்தை வழங்கினார்கள்.
 • தாள இசைச் செல்வர், அருள்வள்ளல், எதுகை, மோனை சிங்கம் தன்மான தமிழ் பாணன், தமிழ் இசை ஆய்வு மூதறிஞர், துணிவின் சிகரம் என்ற பட்டங்களுக்கெல்லாம் உரியவர் திரு.வீ.ப.கா.சுந்தரனார்.
 • மதுரை தமிழ்ச் சங்கம் பாண்டித்துரை தேவர் மாண்பின் மா.இராமச்சந்திரன் அவர்களின் தலைமையில் “தமிழிசை ஆராய்ச்சி செல்வம்” என்ற பட்டமும் வழங்கப்பட்டது.
 • தனித் தமிழியக்க விழாவில் தஞ்சை சரபோஜி மஹாலில் ஜி.டி.நாயுடு தலைமையில் தேவநேயப் பாவாணாரால் “சொல்லழகர்” என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

  வீ.ப.கா.சுந்தரனாரின் இசைப்புலமை :

  மிருதங்கம் (முழவு), கஞ்சிரா (கைப்பறை), ஒத்து, புல்லாங்குழல் ஒத்திசைப்பெட்டி (ஆர்மோனியம்) போன்ற இசைக் கருவிகளை வாசிக்கும், திறமை பெற்றிருந்தார். இவர் புல்லாங்குழல் வாசிப்பதால் மிக்க பயிற்சியுடையவராகத் திகழ்ந்தார்.

  வீ.ப.கா.சுந்தனாரின் சான்றோர்களின் நட்பு :

  வீ.ப.கா.சுந்தரனார் கடிதத்தின் மூலம் “மொழி ஞாயிறு” என்ற பெயரைத் தேவநேய பாவாணாருக்கு சூட்டியவரும் இவரே ஆவார்.

  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் – இராசாசர் முத்தையா செட்டியார்
  அருட்செல்வர் பொள்ளாச்சி – நா.மகாலிங்கம்
  சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகத்தின் இயக்குனர் – இரா.முத்துக்குமரன்
  இந்து சமய முன்னாள் தமிழக அமைச்சர் – ஆர்.எம்.வீரப்பன்

  போன்றவர்களின் மீது மிகுந்த நட்பு கொண்டவர். “சிறுவர் இன்பம்” என்னும் நூலுக்கு அளித்த முகவுரையில் இவரை “தம் நண்பர்” என்றும் “அறிஞர்” என்றும் பாவேந்தர் பாரதிதாசன் போற்றியுள்ளார். இவர் 16 தமிழிசை நூல்களை இயற்றியுள்ளார்.

  தமிழிசை ஆய்வுகளை நிகழ்த்தி வந் சுந்தரனார், ஞானசம்பந்தம் மனையில் பாவாணர் கோட்டத்தில் 09.03.2033ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அவர்தம் தமிழுடல் பசுமையில் உள்ளது. கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.   

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:12:07(இந்திய நேரம்)