தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

 • துர்க்கை

  முனைவர் கி.கந்தன்,
  துறைத்தலைவர்,
  சிற்பத்துறை.
  துர்க்கை

  தோற்றம்:

  தமிழகத் தாய் தெய்வ வழிபாட்டின் மைய்யமாக அமைந்திருப்பது துர்க்கையின் வழிபாடு ஆகும். பொதுவான நிலையில் துர்க்கை என்பது மகிஷன் என்ற அரக்கனை வதம் செய்த மகிஷாசுரமரத்தினி என்ற ஓர் கோபத்திருக்கோலத்தின் தொடர்ச்சியாகவோ அல்லது அதனுடன் தொடர்புடைய ஒன்றாக்க் கருதப்படுகிறது. ஆனால், வடமொழிச் சான்றுகள் அடிப்படையில் துர்க்கை என்ற பெண் தெய்வம் பிற்கால வேதகால இந்து மதத்தின் ஓர் சிறப்புப் பெற்ற இறையாக இடம்பெற்றுள்ளதை அறியமுடிகிறது. அடிப்படையில் துர்க்கை என்பவள் கோட்டையினைக் (துர்க்)காத்திடும் காவல் தெய்வம் என்ற நிலையில் தனது வழிப்பாட்டை பெற்றதாக கருதப்படுகிறது. இருப்பினும் கந்தபுராணம், துர்க்கையின் தோற்றம் தொடர்பாக அப்பெயருக்கு ஏற்றவகையில் பின்னணியைத் தந்துள்ளது. துர்க்கா என்ற பெயருடைய அரக்கன் ஒருவன் தேவர் உள்ளீட்ட அனைவரையும் துன்புறுத்தி வந்தான். நெடிய போருக்குப் பின்னர் பார்வதி அவ்வரக்கனை அழித்தாள். இதன் தொடர்ச்சியாகப் பார்வதி துர்க்கை என்ற பெயரினைப் பெற்றாள் என்று இந்நிகழ்வின் வாயிலாக அறியமுடிகிறது.

  கலை:

  தமிழ் இலக்கியங்களில் துர்க்கை, கொற்றவை, பழையோள், காடுகாள் மற்றும் வடவாயிற்செல்வி (வடத்திசை காப்பவள்) என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறாள். குறுந்தொகை துர்க்கையினைக் ‘சூலி’ என்று குறிப்பிட்டுள்ளது. கலை என்ற நிலையில் கி.பி 7, 8-ஆம் நூற்றாண்டுகளில் துர்க்கையின் படிமம் சிங்காவரம் ரெங்கநாதர் குடைவரையிலும், மாமல்லபுரம் திரௌபதிரதத்திலும் வராக மண்டபம் உள்ளீட்ட குடவரைகளில் காணப்படுகிறது. இதற்கு அடுத்து கி.பி.8-ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரம் மதங்கேஸ்வரர் மற்றும் முத்தேஸ்வரர் கோயில்களில் சோழர்களின் பல்வேறு கட்டுமானக்கோயில்களில் துர்க்கையின்படிமம் காணப்படுகிறது. துர்க்கையின் படிமம் பொதுவாக நின்ற நிலையில் காணப்படும். நான்கு கரங்களுடன் அமைக்கப்படும் இப்படிமத்தின் பின் வலது மற்றும் இடது கரங்களில் விஷணுவின் கைகளில் காணப்படும் சங்கு, மற்றும் சக்கரம் அமைக்கப்பட்டிருந்தால் அப்படிமம் விஷ்ணு துர்க்கை என்று அழைக்கப்படும். அதுபோன்று பின் கரங்களில் சிவனின் கைகளில் காணப்படும் மான் மற்றும் மழு காணப்பட்டால் அத்தகைய துர்க்கை படிமம் சிவதுர்க்கை என்று அழைக்கப்படும். இப்படிமத்தின் முன் வலக் கரம் அபய முத்திரையும், மற்றொரு கை ஏதேனும் ஆயுதங்களைத் தாங்கி அல்லது தொங்கவிடப்பட்ட நிலையிலோ அமைக்கப்படுவது மரபு ஆகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:01:05(இந்திய நேரம்)