தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

திருஞானசம்பந்தரின் தனிச்சிறப்புப் பதிகங்கள்

  • கஞ்சீரா வித்துவான் மாயவரம் ஜி.சோமசுந்தரம்

    முனைவர் இரா.மாதவி
    உதவிப் பேராசிரியர்
    இசைத்துறை

    இசை உலகில் புகழுடன் விளங்கிய பல பெரிய மேதைகளுள் மாயவரம் ஜி.சோமசுந்தரம் அவர்களும் ஒருவர் ஆவார். திரு சோமசந்தரம் அவர்கள் மாயவரம் எனப்படும் மயிலாடுதுறையில் 1928ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 10 ஆம் தேதி பிறந்தார். தாய் திரவோணத்தம்மாள், தந்தை கோவிந்தசாமி ஆவார்.

    குருவிடம் பயிற்சி

    திரு சோமு அவர்கள் இளம் வயதுமுதல் இசையில் குறிப்பாக தாள இசைக்கருவியில் ஆர்வம் மிகுந்தவராகக் காணப்பட்டார். தமது பத்தாவது வயதில் தவில் வித்துவான் திருமுல்லைவாயில் முத்துவீரப்பிள்ளையிடம் தவில் பயின்றார். தமது 15 வயதில் கச்சேரி வாசிக்க ஆரம்பித்தார். அக்காலத்தில் தவில் வித்வான்களோடு உரித்தான மரியாதை அளிக்கப்படுவதில்லை என்பது அறிந்து வசதி மிகுந்த குடும்பத்தில் பிறந்த சோமு சிறிய பெட்டிகடை வைத்து நடத்தினார். பின்னர் திரு சிவக்கொழுந்து கஞ்சிரா கலைஞரிடம் கஞ்சிரா கற்றுக்கொண்டார். அவருடன் கச்சேரிகளுக்குச் சோமு சென்றுவந்தார். பின் குத்தாலம் சிவ வடிவேல் பிள்ளையிடம் கஞ்சிரா பயின்றார்.

    திருமணம்

    திரு சோமு அவர்கள் தமது 16 ஆம் வயதில் வைகாசி மாதம் 14 ஆம் தேதி 1945 ஆம் ஆண்டு ராமாமிர்தம் அம்மையாரை மணம் முடித்தார். திருமண ஊர்வலத்தில் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களுடைய நாதஸ்வர நிகழ்ச்சியும், திரு வி.சடகோபன் அவர்களின் நிகழ்ச்சியும் நடந்தேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

    கலைப்பணிகள் மற்றும் வாசித்த கச்சேரிகள்

    1950 ஆம் ஆண்டு திருப்பாம்புரம் திரு சுவாமிநாதபிள்ளை அவர்கள் உதவியால் சென்னையில் வந்து குடியேறினார். பிறகு சோமு அவர்களுக்குச் சீர்காழி கோவிந்தராசன் அவர்களுடன் இணைந்து வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எட்டு ஆண்டுகள் சீர்காழி கோவிந்தராசன் அவர்களுடன் இணைந்து பல்வேறு ஊர்களில் கச்சேரி வாசித்துள்ளார்.

    மதுரை சோமுவுடன் அனுபவங்கள்

    மதுரை சோமு அவர்களுடன் இணைந்து மாயவரம் சோமு பல நிகழ்ச்சிகள் வாசித்துள்ளார். மதுரை சோமு அவர்களுக்குச் கச்சேரி இல்லாத நாட்களே இருக்காது. தினமும் கச்சேரி இருக்கும். சில நேரங்களில் வேறு ஒரு கஞ்சிரா கலைஞர் வாசிக்குமாறு அழைத்துவிட்டால் அந்தக் குறிப்பிட்ட தினத்திற்கு உண்டான சன்மானத்தை மாயவரம் சோமுவுக்கு மதுரை சோமு அவர்கள் அளித்து விடுவார். அந்த அளவிற்கு இருவரும் நெருங்கிப் பழகி இருந்தனர்.

    மதுரை சோமுவின் எல்லா நிகழ்ச்சிகளிலும் கஞ்சிரா நிரந்தரமானது. வயலினும் மிருதங்கமும் ஒவ்வொரு கச்சேரிக்கும் மாறும். இவ்வாறு 30 ஆண்டுகள் மாயவரம் சோமு மதுரை சோமுவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். பாம்பே, டெல்லி போன்ற இடங்களிலும் நிகழ்ச்சிகளுக்குச் சென்று வந்திருக்கின்றனர்.

    மாயவரம் சோமு அவர்கள் வாசித்த கச்சேரிகள்

    இசை அரசு எம்.எம். தண்டபாணிதேசிகர், திருமதி கே.பி.சுந்தராம்பாள், எம்.கே.தியாகராஜ பாகவதர், ஆலத்தூர் சாகோதரர்கள், சித்தூர் சுப்பிரமணியம்பிள்ளை, திருவாரூர் நவச்சிவாயம், மதுரை சோமு, எம்.எல்.வசந்தகுமாரி, சீர்காழி கோவிந்தராஜன், லால்குடி. ஜி.ஜெயராமன், மதுரை டி.என்.சேஷகோபாலன், புல்லாங்குழல் என். ரமணி, பம்பாய் சகோதரிகள், குன்னக்குடி வைத்தியநாதன், டி.வி.சங்கர நாராயனன், ஓ.எஸ். தியாகராஜன், கே.ஜே. ஜேசுதாஸ், நெய்வேலி சந்தான கோபாலன் போன்ற புகழ்பெற்று விளங்கிய கலைஞர்களின் நிகழ்ச்சிகளில் கஞ்சிரா வாசித்த பெருமைக்குரியவர் ஆவார்.

    மாயவரம் சோமு அவர்களுடன் இணைந்து வாசித்த மிருதங்க வித்வான்கள்

    மாயவரம் சோமு முருகபூபதி அவர்களுடன் இணைந்து பதினைந்து வருடங்கள் வாசித்துள்ளனர், பழனி சுப்ரமணியம் பிள்ளை, இராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி, தஞ்சாவூர் டி.கே.மூர்த்தி, பாலக்காடு, வெங்கடேஸ்வரராவ், உமையாள்புரம் சிவராமன், காரைக்குடி மணி, கமலாகர்ராவ், குருவாயூர்துரை, திருச்சி சங்கரன், திருவாரூர் பக்தவச்சலம், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், டி.வி.கோபாலகிருஷ்ணன் போன்றோர் ஆவார்.

    மாயவரம் ஜீ.சோமு அவர்கள் பெற்ற விருதுகள்

    11.3.1993-இல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கலைமாமணி என்ற விருதினை அளித்து கௌரவித்தது.

    18.11.2000-இல் முத்தமிழ்ப் பேரவையில் சோமு அவர்களின் கலைத் தொண்டினைப் பாராட்டி பெரிய செல்வமும் பொற்பதக்கமும் வழங்கி கௌரவித்தது.

    2000-இல் ஸ்ரீ பஞ்சமுகந்வாரஸ ஆஞ்சநேயர் ஜெயந்தி மகோத்ஸவத்தில் பத்மபூஷன் ஸ்ரீ பி.எஸ் நாராய்ணஸ்வாமி அவர்களால் ‘லய வாத்ய சிரோன்மணி’ என்கிற பட்டத்தை வழங்கி கௌரவித்தது

    சபாவில் நாயகி விருதும் ரூ.10000 வழங்கி கௌரவித்தது.

    பாபநாசம் சிவன் விருது ஸ்ரீ சந்சங்கா பாபநாசம் சிவன் கர்நாடக சங்கீத சபாவால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

    2010 மதுரையில் சங்கரபூதி விருது சங்கரபூபதி டிரஸ்டில் வழங்கப்பட்டது.

    லயஞான யோகா விருதும் ரூ.5,000ம் 2010ல் (சென்னை வில்லிவாக்கமும்) ஓம் கார நாத பிரம்மகான மண்டல விருது வழங்கி கௌரவித்தது.

    1.1.2012-ல் சென்னை மியூசிக் அகாடமி டி.டி.கே. விருது 25,000ம் வழங்கி கௌரவித்தது.

    தாளசுரபி, லயவின்யாச விசாரதா, கஞ்சிரா செல்வம், இசைமாமுரசு போன்ற விருதுகளும் கிடைக்கப் பெற்றார்.

    மாயவரம் சோமு அவர்களின் வெளிநாட்டுப் பயணங்கள்

    ஸ்ரீலங்கா, சிங்கப்பூர், பினாங்கு, லண்டன் போன்ற வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டார். மாயவரம் சோமு அவர்கள் தலைமையில் லண்டனில் சிம்ம நந்தன் தாளத்தில் தாள வாத்யம் நடைபெற்றது. இதற்கு திரு சோமு அவர்களே லய சம்மந்தமான சோர்வைகள் வடிவமைத்து அதனை வெற்றி பெறச் செய்தார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:15:26(இந்திய நேரம்)