தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

திருநாவுக்கரசர்

 • ராஜா சர். அண்ணாமலை செட்டியார்

  முனைவர் இரா.மாதவி
  உதவிப் பேராசிரியர்
  இசைத்துறை

  பிறப்பு

  சமூக நோக்கும் மனித நேயப் பண்பாடும் வளர்ந்தோங்கிய நகரத்தார் சமுதாயத்திலே பெருஞ்செல்வமும் செல்வாக்கும் பெற்றிருந்த இளையாத்தங்குடி பட்டணசாமி பிரிவைச் சேர்ந்த சா.ராம.முத்தையாச் செட்டியாரும் ஒருவர். இவரின் நான்கு புதல்வர்களில் நான்காமவராக 1881 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 3ஆம் நாள் இராமநாதபுரம் மாவட்டம் கானாடுகாத்தான் என்கிற ஊரில் பிறந்தவரே அரசர் அண்ணாமலைச் செட்டியார். தெய்வபக்தி, அறச்சிந்தனை, தொழில் அர்ப்பணிப்பு ஆகியன மேலோங்கிய குடும்பத்தில் பிறந்ததினால் “கருவில் அமைந்த திருவே” இவரின் பிற்காலத்திய சாதனைகள் அனைத்திற்கும் அடிப்படையாக அமைந்தது எனலாம்.

  கல்வி

  தொடக்கக் கல்வியினைச் சொந்த ஊரான கானாடு காத்தானிலேயே பயின்ற அரசர் அண்ணாமலைச் செட்டியார் ஆங்கில அறிவினை அபிவிருத்தி செய்வதற்காக உள்ளூர் அஞ்சலக அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டார். வணிகக் குடும்பத்தில் உதித்தவர் என்ற போதிலும் தன்னைச்சுற்றி எப்போதும் வியாபார ரீதியிலான சூழல் அமைந்தாலும் அண்ணாமலையாரைக் கவர்ந்தது நூல்களும் ஏடுகளுமே. கரூரில் உயர் கல்வியினைப் பெற்ற அரசருக்குத் தான் கற்ற நூல்களில் மிகவும் கவர்ந்தது திருக்குறள்.

  இளைஞரான அண்ணாமலையார் வியாபார நுணுக்கங்களை நன்கு அறிந்தார். இது தொடர்பாக பர்மா, மலேசியா மற்றும் கிழக்கிந்தியத் தீவுகள் வரை சென்று தம் நிறுவனங்களின் செயல்பாட்டினைச் செயல்பட வைத்தார். புதிய யுக்திகளைப் புகுத்தியதால் வருமானம் பன்மடங்காகியது. இச்சாதனையை அண்ணாமலைச் செட்டியார் நிகழ்த்தியபோது அவரின் வயது முப்பது.

  அண்ணாமலைச் செட்டியாருக்குப் பணம் ஈட்டுவது மட்டுமே நோக்கமாக இருக்கவில்லை. உலகின் அன்றாட வளர்ச்சிகளை நேரில் கண்டு பூரிப்பதிலும் மகிழ்வு கொண்டார். காசி முதல் இராமேசுவரம் வரை புனிதத் தலங்களைத் தரிசித்தார். இது தவிர பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் இங்கிலாந்து உள்ளிட்ட பல வெளிநாடுகளையும் வலம்வந்து வங்கித் தொழில் வளர்ச்சியை ஆய்வு செய்தார்.

  இவரின் அனுபவ செறிவினைக் கண்ட செட்டிநாடு வாழ் மக்கள் அரசரை காரைக்குடி நகராட்சித் தலைவராக்கி மகிழ்ந்தனர். இதுதான் அவர் ஏற்றுக் கொண்ட முதல் மக்கள் சேவைப்பணி, அரசரின் சேவையினைக் கருத்தில் கொண்டு அன்றைய அரச நிர்வாகத்தார் அண்ணாமலைச் செட்டியாருக்க இராவ் பகதூர் திவான் பகதூர் ஆகிய பட்டங்களை வழங்கிக் கௌரவித்தனர்.

  1916ஆம் ஆண்டு சென்னை ராஜதானியின் சட்டமன்ற உறுப்பினரானார். 1921 ஆம் ஆண்டு தில்லியில் பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். இப்பொறுப்பில் மூன்ற முறை அங்கம் வகித்தார். அன்றைக்கு சமூகத்தின் உயர்நிலையில் இருப்பவர்கள் இடம் பெற்றிருந்த “லிபரல் கட்சி” இவரையும் அழைத்தது. அழைப்பினை ஏற்றார்.

  சிதம்பரத்தில் உறையும் ஆனந்த நடராஜர்தான் அண்ணாமலைச் செட்டியாரின் குலதெய்வம். இதன் காரணமாக இவ்வூரில் உயர்பள்ளி ஒன்றினையும் நிர்வகித்து வந்தார். பின்பு, மதுரையில் 1920ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் நாள் தம் தாயார் பெயரில் “ஸ்ரீ மீனாட்சி கல்லூரி” யினை அமைத்தார்.

  1912ஆம் ஆண்டு தம் உறவினர்களையும், நண்பர்களையும் பங்கு தாரர்களாகக் கொண்டு “இந்தியன் வங்கி” என்ற ஸ்தாபினத்தைத் தொடங்கினார்.

  நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினர் கோவில் திருப்பணிகள், அன்னசத்திரங்கள், சமஸ்கிருதப் பாடசாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றை உருவாக்கிப் பராமரிப்பதை மனிதகுலச் சேவையாக, அறப்பணியாக செயல்படுத்தி வந்த்தார்கள். அண்ணாமலைச் செட்டியார் இதிலிருந்து சற்று மாறுபட்டு கல்வியும் மருத்துவமுமே நமது சமுதாயத்தின் அடிப்படை தேவை என்ற எண்ணங்கொண்டிருந்தார். எனவே ,இரண்டுக்கும் தாராள தானங்கள் செய்தார்.

  தமிழில் தொன்மையான நூல்களை வெளியிடவும், ஆய்வுகள் பல மேற்கொள்ளவும், அழிந்து போகவுள்ள அரியக் கலைச் செல்வங்களைத் திரட்டிப் பதிப்பிக்கவும், தனித்தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்றை அமைத்து அதில் தமிழர்களின் தமிழ் அறிவுடமைச் சார்ந்த சொத்துக்களுக்கும் முன்னுரிமைத் தர விரும்பினார். தமிழர் பண்பாடு பாதுகாக்கப்பட உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு 1927ஆம் ஆண்டு சிதம்பரத்தில் வடமொழிக் கல்லூரியும், தமிழ்க் கல்வியும் உருவாக்கப்பட்டன. தொடர்ந்து வித்வான் கல்லூரியும் இசைக் கல்லூரியும் தோற்றுவிக்கப்பட்டன. 1928ஆம் ஆண்டு ஒரு பல்கலைக்கழகத்தினை நிறுவுவதற்கான முறையான திட்ட அறிக்கையினை அரசிடம் பணித்தார் அரசர். இதற்கான மசோதா உடனடியாக நிறைவேற்றப்பட்டு 1929ஆம் ஆண்டு சனவரி 1 ஆம் தேதி அண்ணாமலைப் பல்கலைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அப்போதைய ஆளுநராக இருந்த எச்.ஜி.சர்.ஜார்ஜ் பிரடெரிக் ஸ்டான்லி அவர்களால் 1930 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் நாள் பல்கலைக்கழகம் முறைப்படி துவக்கப்பட்டது. முதல் துணைவேந்தராக சர் சாமுவேல் அரங்கநாதன் பொறுப்பேற்றார். 1929 இல் இங்கிலாந்து மன்னர் “ராஜா” என்ற பட்டத்தினை அண்ணாமலைச் செட்டியாருக்கு வழங்கிச் சிறப்பித்தார். அன்று முதல் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் என்றபெயர் நீடித்து நிலைத்தது.

  அண்ணாமலைச் செட்டியார் இசை மீது வைத்திருந்த பற்று அலாதியானது. குறிப்பாகத் தமிழிசை மேம்பாட்டில் அதிக அக்கறை கொண்டிருந்தார். இசைக்கான ஒரு கல்வி அமைப்பினை உருவாக்கியவரும் இவரே. தமது பல்கலைக்கழகத்தின் மற்ற முக்கியத் துறைகளுக்கு இணையான அந்தஸ்தினைத் தமிழிசை பிரிவிற்கும் தந்தார். இவ்விசை வடிவம் புத்துயிர் பெறுவதற்காக உரிய வழி வகைகளை ஆராய அண்ணாமலை நகரில் இரண்டு பெரிய மாநாடுகளை நடத்தினார்.

  தமிழிசைக்குத் தமது இறுதிக் காலம் வரை தம்மால் இயன்ற தொண்டுகளைச் செய்து வந்த ராஜா அண்ணாமலைச் செட்டியார் 1948ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் ஆடலரசனின் திருப்பாதங்களைச் சரண் அடைந்தார்.

  ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் தமிழிசைச்சங்கம்

  1943ஆம் ஆண்டு தமிழிசைச் சங்கம் நிறுவினார். ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார், புகழ்மிக்க இசைக் கலைஞர்களை ஒன்று திரட்டி அவர்களிடம் மறைந்திருந்த இசைப் பெருஞ் செல்வங்களை வெளிக் கொணர்ந்தார். தமிழிசை ஆராய்ச்சிகளை ஊக்குவித்தார். சுரதாளக் குறிப்புடன் (Notation) கூடிய இருபது தமிழிசைப்பாடல் தொகுதிகள் (916 பாடல்கள்) வெளிவரவும். உதவி புரிந்தார். இப்பெருமை மிக்க பணியில் அரசருடன் இணைந்து பாடுபட்டார். அரசரின் நெருங்கிய சகாவான சர். ஆர்.கே.சண்முகம் செட்டியார் தமிழகத்தில் தமிழிசை இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட முழுப் பெருமையும் இந்த பெருமகனார்கள் இருவரையுமே சாரும். இதற்காக தமிழர்களம், தமிழ் கூறும் நல்லுலகத்தின் இசை உலகத்தவரும் இவர்களுக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளனர். அரசரின் இந்தசேவை தமிழக வரலாற்றிலும், தமிழர் தம் இசை வரலாற்றிலும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தகுதியினை எட்டியுள்ளது. தமிழிசை இயக்கத்திற்கு இறுதிக்காலம் வரை தம்மால் இயன்ற தொண்டுகளை செய்து வந்தார். சென்னை மாநகரின் பிரதானப் பகுதியில் பிரம்மாண்டமாக்க் காட்சி தரும் ராஜா அண்ணாமலை மன்றம் இன்றைக்கும் அன்னாரது பெருமையினைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

  அண்ணாமலைச் செட்டியாரின் மூத்தப் புதல்வரான டாக்டர் ராசா சர் முத்தையாச் செட்டியாரது தமிழிசைப் பணிகள் மரபு வழி வந்த மாண்பாகும். ஒரு கட்டத்தில் பொது வாழ்விலிருந்து விலகிய இவர் பல்கலைக்கழக வளர்ச்சியையும், தமிழிசை மேம்பாட்டிற்கான பணிகளையுமே தமது இரு பெரும் நோக்கங்களாகக் கொண்டு செயல்பட்டு வந்தார்.

  ஏறக்குறைய அரை நூற்றாண்டாக மங்கிப் போய்விட்ட தமிழிசையை முன்பிருந்த நிலைக்கு உயர்த்த வேண்டும் எனப் பாடுபட்டார். சென்னையில் அண்ணாமலை மன்றத்தை நிறுவி இசை விழாக் காலத்தில் அங்கே தமிழிசை விழாக்கள் நடக்கக் காரணமாக இருந்தார்.

  தந்தையார் காலத்தில் சென்னையை மையப்படுத்தி இருந்த தமிழிசைப் பணிகளை தமிழகத்தின் இதர நகரங்களுக்கும் விரிவுபடுத்த திருச்சி-மதுரை போன்ற நகரங்களிலும் மன்ற அமைப்புகள் துவக்கப்பட்டன. மதுரையில் உள்ள எழில் நிறைந்த “முத்தையா மன்றம்” துவக்க விழாவில் அன்றைய முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் அரசர் அவர்களுக்கு “தமிழிசைக் காவலர்” என்ற பட்டத்தினை வழங்கிப் பாராட்டினார். நூற்றாண்டு விழா நிறைவுற்ற குமார ராஜா முத்தையா செட்டியார் அவர்கள் தம் தந்தையின் அடிச்சுவட்டைப் பின்பற்றித் தமிழிசை வளர்ச்சிக்குச் செய்துள்ள தொண்டு கல்லில் பொறித்த வாசகமாம் காலத்திற்கும் அழியாது.

  அண்ணாமலை என்றாலே திருவண்ணாமலை ஞாபகத்திற்கு வருகிறதோ இல்லையோ தமிழிசை நினைவிற்கு வராமல் போகாது. அந்த வகையில் முன்னோர்களின் செம்மையான இசை மேம்பாட்டுப் பணிகளில் எம்.ஏ.எம்.இராமசாமி அவர்களும், அக்கறை காட்டி வருகிறார்கள். தமிழிசைக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு அறக்கட்டளை நிதியிலிருந்து உதவித் தொகை வழங்கி இசையாலும் மாணவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். தம் தந்தையார் மதுரையில் நிறுவிய தமிழிசைச் சங்கத்தினைக் கொண்டு தென் தமிழகத்திலும் இசை வளர்த்து வருகிறார். இசைக்கலைக்கும் கலைஞர்களுக்கும் நல்லதொரு புரவலராகத் திகழ்கிறார். இவரின் வழிகாட்டலில் இயங்கி வரும் இராணி சீதை மன்றம் கலை நிகழ்ச்சிகளுக்கு சலுகைகள் அளித்து வருகிறது. இவர் தந்தையார் வழியில் தமது கல்விப் பணியினையும், அறப்பணிகளையும், தமிழிசைப் பணியினையும், பல்கலைக்கழக நிர்வாகத்தையும் திறம்படச் செயல்படுத்தி வரும் மாமனிதராவார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:15:16(இந்திய நேரம்)