தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வீரபத்திரர்

 • வீரபத்திரர்

  முனைவர் கி.கந்தன்,
  துறைத்தலைவர்,
  சிற்பத்துறை.

  தொன்பப் பின்னணி :

  வீரபத்திரர், சிவனினின் சம்ஹார திருக்கோலம் அல்லது அழிவு திருக்கோலங்களில் ஒன்றாகும். சிவபுராணம், மகாபாரதம், வாயு புராணம் போன்ற புராணங்கள், வீரபத்திரர் சிவனிடமிருந்து எவ்வகையில் தோன்றியது என்பதை விளக்கியுள்ளன. சிவனின் சதியான தாட்சியாயிணியின் தந்தை தட்சன் ஆவார். தட்சன் சில வரங்களைப் பெறுவதற்காக வேள்வி ஒன்றினை மேற்கொண்டான். இவ்வேள்விக்குச் சிவனைத் தவிர அனைத்து கடவுளர்களும் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இதனை அறிந்த தாட்சியாயினி தனது தந்தை தட்சனால் சென்று நீதி கேட்க முற்படுகையில் தட்சனால் அழிக்கப்படுகிறான். இதனால் சிவன் சினம் கொண்டு வேள்வி நடைபெறும் இடத்திற்கு சென்றார். கோபத்தில் தட்சனை அழிப்பதற்காகத் தமது சடாமுடியை விரித்துச் சுழற்றிய நிலையில் அம்முடி இரு பகுதிகளாகப் பிரிந்து, ஒரு பகுதியிலிருந்து வீரபத்திரரும், மற்றொரு பகுதியிலிருந்து மகா காளியும் தோன்றினர். ‘பத்ரா’ என்ற சொல்லுக்கு ஆசிர்வதிக்கப்பட்டவன் அல்லது மேன்மை பெற்றவன் என்று பொருளாகும். சிவனின் வியர்வைத் துளியிலிருந்து தோன்றியதால் வியர்வைப் புத்திரன் என்று பெயர் பெற்று, பின்பு வீரபத்திரன் ஆனான் என்றும் கூறப்படுகிறது.

  வீரபத்ரர்

  புராணங்களில் கி.பி 5 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரபத்திரர் தொடர்பான செய்திகள் இடம்பெற்றுள்ளன. கி.பி. 6 ஆம் நூற்றாண்டு மற்றும் கி.பி 9 ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய பக்தி இலக்கியங்களில் 1, 2, 4 மற்றும் 6 ஆம் திருமுறைகளில் வீரபத்திரர் செய்திகள் இடம்பெற்றுள்ளன.

  படிமக்கலை :

  ஸ்ரீ தத்துவ நிதி, வீரபத்திரர் படிமம் தொடர்பாக விளக்கங்கள் தந்துள்ளது. இப்படிமம் நான்கு கைகள் பெற்றதாக அமைக்கப்பட வேண்டும். முன், பின் வலது கைகளில் கத்தி மற்றும் அம்பு காணப்பட வேண்டும். முன், பின் இடது கைகளில் கதை மற்றும் வில் இடம் பெறவேண்டும். இப்படிமத்தின் முகத்தோற்றம் தெற்றுப் பல்லுடன் அச்சம் தரும் வகையில் காணப்பட வேண்டும். கழுத்தில் முண்ட மாலை காணப்பட வேண்டும். வீரபத்திரர் படிமத்திற்கு அருகில் இடது பக்கத்தில் காளியின் படிமமும், வலது பக்கத்தில் தட்சனின் படிமமும், ஆட்டின் தலைப் பகுதியுடன் மனித உடலுடன் இணைந்தவாறு அஞ்சலி முத்திரையுடன் காட்டப்பட வேண்டும் என ஸ்ரீ தத்துவ நிதி எனும் சில்பசாத்திரம் விளக்கியுள்ளது.

  ‘சில்ப ரத்தினம்’ என்ற நூல் வீரபத்திரரின் படிமம் எட்டுக் கைகளுடன் அமைக்கப்பட்டு, கணங்களால் சூழப்பட்டு, வேதாளத்தின் மீது அமர்ந்த நிலையில் அமைக்கப்பட வேண்டும் என்று விளக்கியுள்ளது. ‘சில்ப சங்கீரா’ என்ற மற்றொரு சிற்ப சாத்திர நூல் வீரபத்திரர் படிமம், சாத்வீகம், தமஸ், ரஜஸ் என்ற மூன்று குணங்களின் வெளிப்பாடாக அமைக்கப்பட வேண்டும் என்று விளக்கியுள்ளது.

  கல்லில் வீரபத்திரர் :

  பொதுவாக, இந்துக் குழுப் படிமங்கள் அமைக்கப்படும் போது சப்தமாதர் படிமங்களுடன் வீரபத்திரர் படிமம் அமைக்கப்படுவது மரபாகும். இந்திய கலை வரலாற்றில் இப்படிமம் கி.பி 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சாளுக்கியர் காலத்தில் வெட்டப்பட்ட எல்லோரா குகை எண்–14 மற்றும் எண்–21 இல் இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் கி.பி 7ஆம் நூற்றாண்டில் மலையடிக்குறிச்சியில் இப்படிமம் அமைக்கப்பட்டது. விஜயநகர ஆட்சியாளர்கள் காலத்தில், வீரபத்திரர் அவர்களின் குல தெய்வமாக வழிபடப்பட்டதால் இப்படிமம் கி.பி. 16ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிறப்பான வளர்ச்சி பெற்றது. குறிப்பாகத் தமிழகத்தில் விரிஞ்சிபுரம், தேவிகாபுரம், மதுரை, தாடிக்கொம்பு, தாரமங்கலம் மற்றும் கிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களில் இப்படிமம் காணப்படுகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:08:06(இந்திய நேரம்)