தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சிவன்

 • சிவன்

  முனைவர் கி.கந்தன்,
  துறைத்தலைவர்,
  சிற்பத்துறை.

  இந்து மதத்தில் மும்மூர்த்திகளில் ஒருவராகச் சிவன் கருதப்படுகிறார். மும்மூர்த்திகளில் பிரம்மன் படைத்தல் தொழிலுடனும் விஷ்ணு காத்தல் தொழிலுடனும் சிவன் அழித்தல் தொழிலுடனும் தொடர்புபடுத்தப்படுகின்றனர். பொதுவாக சிவன் என்ற சொல்லுக்குத் தூய்மையானவன் அல்லது தூய்மைபடுத்துபவன் என்ற வகையில் பொருள் கொள்ளப்படுகிறது. வேத காலத்தில் சிவன் இல்லை என்பதை வேத இலக்கியங்களின் வாயிலாக அறியமுடிகிறது. இருப்பினும் வேத காலத்தில் ருத்ரன் என்பவன் வழிபடப்பட்டான். பிற்காலத்தில் வேதகால ருத்ரன் சிவனுடன் இணைப்படுத்தப்பட்டான். இருப்பினும் சிவன் என்ற சொல் வேத இலக்கியங்களில் புனிதம் என்ற பொருளின் அடிப்படையில் எட்டுக்கும் மேற்பட்ட கடவுளர்கள் விளித்திடும் சொல்லாக அமைந்துள்ளது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும் இந்தியா முழுமையும் ஏற்புடைய இறைவுருவமாகக் கருதப்படும் சிவனின் தொன்மை என்பதை வேத காலத்திற்கு முன்னரே இருந்து வந்த ஒன்றாகும். சிந்து சமவெளி நாகரிகத்தின் அகழ்வாய்விலிருந்து வெளிக்கொணரப்பட்ட பல்வேறு பொருள்களில் பசுபதி என்ற ஓர் இறை உருவம் நோக்கத்தக்க ஒன்றாகும். மூன்று தலைகளுடன் காணப்படும் இவ்வுருவம் தொடர்பாக ஆய்வாளர்கள் குறிப்பிடும் போது ‘பசு’க்களின் (ஆன்மாக்களின்) அதிபதி என்றும் சிவனின் வடிவம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இது Prototype of Siva என்று அகழ்வாய்வு அறிஞர் சர் ஜான் மார்சல் குறிப்பிட்டுள்ளார்.

  சிவன்-(ரிஷப வாகனர்)

  விஷ்ணு சகஸ்ர நாமத்தில் ஆதிசங்கரர் குறிப்பிட்டுள்ள பல்வேறு பெயர்களில் சிவனின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

  சத்துவம், ரஜஸ், தமஸ் ஆகிய மூவேறுபட்ட குணங்களால் எவ்வித பாதிப்பும் பெறாதவன் சிவன் என்று கருதப்படுகிறது. கி.பி. 7-8 ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் சைவம், வைணம் சாக்தம், கௌமாரம் மற்றும் சௌரம் எனப்படும் அறுவகைச் சமயங்களைத் தோற்றி வைப்பதற்கு முன்னரே சிவனை வழிபட்டவர்கள் சைவர்கள் என்ற பெயருடன் தனிப்பெரும் பிரிவாகச் செயல்பட்டு வந்தனர். சிவனின் வழிபாடு இந்தியா முழுவதும் ஒவ்வொரு மண்டலங்களில் வாழ்ந்திடும் மக்களின் வழிபாட்டு இயல்புகேற்ப பல்வேறு பெயர்களைப் பெற்று வளர்ந்து வந்துள்ளது. சிந்து சமவெளியில் பசுபதி என்ற பெயரில் சிவனின் உருவம் கிடைக்கப்பெற்ற போது இவரின் வழிபாடு பெரும்பாலும் லிங்க வழிபாடாகவும் இருந்து வருகிறது. இதற்குரிய சான்றுகள் அகழ்வாய்வில் வெளிக்கொணரப்பட்டுள்ளன. ருத்ரருனுடன் சிவனை இணைத்துக் கூறிடும் நிலை என்பது சில ஆய்வாளர்களால் மறுக்கப்படுகின்றது. சிவனின் இயல்பு நிலை என்பது ருத்ரனின் இயல்பு நிலை என்பதும் முற்றிலும் மாறானது என்றும் ருத்ரன் என்பவர். வில்லாலி (Archer) என்றும் இது சிவனுடன் இணைப்படுத்த இயலாது என்றும் கூறுகிறார்.

  கி.மு. 2500-1500 கால இடைவெளியில் சிந்துசமவெளி அகழ்வாய்வில் கிடைத்த பசுபதி படிமத்தைத் தொடர்ந்து முழுமையான ஓர் சிவனின் படிமம் என்பதை ஆந்திர மாநிலம் குடிமல்லம் என்ற இடத்தில் காணப்படுகிறது. பரசுராமேஸ்வரர் என்று அழைக்கப்படும் இப்படிமம் கி.மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

  தமிழகம் சங்க இலக்கியத்தில் சிவன் என்ற சொல் எந்த இடத்திலும் காணப்படவில்லை. இருப்பினும் சிவனின் இயல்பினைக் குறிக்கும் வகையில் ஆலமர் கடவுள், முக்கண்ணன் போன்ற பெயர்களில் காணப்படுகின்றன. ஆனால் கி.பி. 6 ஆம் நூற்றாண்டிற்கும், 9 ஆம் நூற்றாண்டிற்கும் இடையே எழுதப்பட்ட தேவாரப் பதிகங்களில் சிவன் என்ற சொல் பல்வேறு இடங்களில் இடம் பெற்றுள்ளது.

  தமிழகத்தில் பல்லவர் காலக் குடவரைகளில் தொடக்க நிலை குடவரையில் சிவலிங்கங்கள் வைக்கப்படுவதில்லை. கருவறையின் உட்புறச்சுவர் பகுதியில் சோமாஸ்கந்தர் என்ற பெயரில் சிவனின் படிமம் உமையுடன் இணைந்த படிமமாகத் தோற்றம் பெறத்தொடங்கியது. இருப்பினும் தொடர்ந்து வந்த காலத்தில் சிவன் அருவுருவானவன் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் உருவங்கள் வைத்து வழிபடும் மரபு மறைந்து லிங்கங்கள் சிவன் கோயில்களில் கருவறைப் படிமமாக அமைக்கப்பட்டன.

  சிவனின் வடிவம் பொதுவாக ஜடாமகுடம் சூடி தலையில் கங்கை மற்றும் பிறை நிலவுடன் அமைக்கப்படும். நெற்றிக்கண்ணுடன் அமைக்கப்படும் இப்படிமம் கழுத்தில் பாம்பிலான மாலைகளை அணிந்து காணப்படும். சாம்பல் பூசப்பட்ட திருமேனியைக் கொண்ட சிவனின் நான்கு கரங்களில் முன் கரம் அயபமுத்திரையுடன் சூலத்தினைத் தாங்கி அமைக்கப்படும். பின் கரங்களில் டமரு மற்றும் அக்னி இடம் பெற்று இருக்கும் அமர்ந்த நிலையில் அமைக்கப்படும் இப்படிமத்தின் இடது கால் அபஸ்மாறன் என்ற அரக்கனின் மீது ஊன்றப்பட்டவாறு காட்டப்பட்டிருக்கும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:05:26(இந்திய நேரம்)