தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நரசிம்ம அவதாரம்

 • நரசிம்ம அவதாரம்

  முனைவர் கி.கந்தன்,
  துறைத்தலைவர்,
  சிற்பத்துறை.

  தொன்மப் பின்ணணி:

  நரசிம்ம அவதாரம்

  விஷ்ணுவின் ஐந்தாவது அவதாரமாக அமைந்தது நரசிம்ம அவதாரமாகும். இதில், விஷ்ணு சிங்கமுகத்துடன் தோற்றம் கொண்டு காணப்படுகிறார். இவ் அவதாரத்தின் தோற்றப் பின்னணி, கூர்மபுராணம், பத்மபுராணம் உள்ளிட்ட புராணங்களில் விளக்கப்பட்டுள்ளது. காசியபமுனிவர் மற்றும் திதியின் மகனான இரண்யகசிபு தொடக்க நாள் முதலாகவே விஷ்ணுவிற்கும், விஷ்ணுவின் வழிபாட்டிற்கும் முரணாக இருந்து வந்தான். இவனின் மகனான பிரகலாதன் விஷ்ணுவின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவனாக இருந்து வந்தான். இதனை ஏற்க இயலாத இரண்யகசிபு பிரகலாதனிடம் விஷ்ணு இருக்குமிடத்தை வினவி நீக்கமற நிறைந்திருப்பவர் என்றால் அரண்மனைத் தூணில் இருப்பாரா என்று வினவி, விஷ்ணு தூணை உதைத்தார். இந்நிலையில் விஷ்ணு கோபமுற்றார். இரண்யகசிபு இவ்வுலகில் மனிதராலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களினாலோ, காலையிலோ, மாலையிலோ, இரவிலோ தன்னையாரும் கொல்லக்கூடாது என்று வரம் பெற்றிருந்தான். இதனை அறிந்த விஷ்ணு மனிதன் அல்லது விலங்கு என்று தோன்றாமல் இரண்டும் ஒன்று சேர்ந்த நரசிம்மராகத் தூணில் இருந்து தோன்றினார். காலை, மாலை என்ற இரண்டும் இல்லாத அந்தி வேளையில் நீரும், நிலமும் இல்லாத அரண்மனையின் வாயிற்படிக்கட்டில் இரண்யகசிபுவை நரசிம்மரான விஷ்ணு வதம் செய்தார். இந்நிகழ்வே நரசிம்ம அவதாரத்தின் தோற்றப் பின்னணி ஆகும்.

  படிமக்கலை:

  இப்படிமம் தொடர்பான குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்பட்ட போதிலும், கி.பி. 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பூதத்தாழ்வார், பேயாழ்வர், திருமங்கையாழ்வார் பாசுரங்களில் இடம் பெற்றுள்ளன. நரசிம்மரின் படிமம் பொதுவாக இடதுகால் பீடத்தின் மீதும் கிடத்தப்பட்ட நிலையில் வலதுகால் தொங்கவிடப்பட்டு சிம்மாசனத்தில் அமர்ந்தவாறு அமைக்கப்பட்டிருக்கும். பின் வலது மற்றும் இடது கைகளில் சக்கரம் மற்றும் சங்கு காட்டப் பெற்றிருக்கும். முன் கைகளில் வலது கரம் அபயமுத்திரையுடனும், இடது கரம் கட்டிய வலம்பித முத்திரையுடனும் காணப்படும்.

  தமிழக்கலையில் இராமர்:

  தமிழகத்தில் இப்படிமம் கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலில் முதன் முதலாக அமைக்கப்பட்டது. அதன் பின்னர் பல்லவ மன்னன் இராஜசிம்மனால் கட்டப்பட்ட காஞ்சி கைலாசநாதர் கோயிலிலும், இரண்டாம் நந்திவர்மனின் காஞ்சிபுரம் வைகுந்த பெருமாள் கோயிலிலும் இப்படிமம் காணப்படுகிறது. நாமக்கல் குடவரையில் காணப்படும் படிமம் எட்டு கைகளுடன் காட்டப்பட்டிருக்கும். இப்படிமத்தில் இரணியனை நரசிம்மர் வதம் செய்யும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. கட்டுமானக் கோயில்களில் திருவெள்ளறை, பழையறை கோயிலில் இச்சிற்பம் இடம்பெற்றுள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:03:43(இந்திய நேரம்)