தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

 • ஐயனார்

  முனைவர் கி.கந்தன்,
  துறைத்தலைவர்,
  சிற்பத்துறை.

  தமிழக நாட்டுப்புற இறைவுருவங்களில் ஐயனார் என்பது இன்றளவும் சமுதாய நோக்கிலும் வழிபாட்டு நோக்கிலும் சிறப்பு பெற்ற ஒன்றாகும். ஐயனார் என்ற சொல் உயர்வு பெற்றவன். சிறப்பு பெற்றவன் என்ற பொருளினைத் தருவதாகும். இதன் அடிப்படையில் நாட்டுப்புறக் கடவுள்களில் ஐயனார் மேன்மை பெற்றவர் அல்லது சிறப்பு பெற்றவர் என்று கருதப்படுகிறார்.

  ஐயனார்

  தோற்றம் :

  ஐயனாரின் வழிபாடும் தோற்றப் பின்னணி என்பது நாட்டுப்புற வழக்காற்றின் அடிப்படையிலும், செவ்வியல் இந்து மதத்தின் புராணப் பின்னணியின் அடிப்படையிலும் இருவேறு பின்புலங்களைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் சங்ககாலத்தில் வழிபாட்டிலிருந்து வீரர்வழிபாடு அல்லது வீரக்கல் வழிபாடு என்பது ஐயனாரின் வழிபாட்டுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. போரில் ஈடுப்பட்டு வீரமரணம் எய்திய வீரர்கள் அவர்கள் போருக்குச் செல்லும் தோற்றத்திலேயே குதிரையின் மீது வைத்து வழிபட்டனர், அவ்வழிபாடு ஐயனார் வழிபாட்டின் முன்னோடி வழிபாடு அல்லது அடிப்படை என்ற கருத்து நிலவுகிறது.

  தொன்ம பின்புலம் :

  ஐயனார், ஐயப்பன், சாஸ்தா ஆகியவருடன் இணைப்படுத்தப்பட்டு வழிபடப்படும் மரபு இருந்து வருகிறது. தாருகாவனத்தில் பல்வேறு ரிஷிகள் சிவன் உள்ளிட்ட இக்கடவுளர்கள் மதியாமல் மிகுந்த தன் முனைப்பு பெற்றவர்களாகச் செயல்பட்டு வந்தனர். இவர்களின் தன்முனைப்பினை அழித்து வேள்விகளையும் அழித்திட சிவன் திட்டமிட்டார். வேள்வி செயல்பாடுகளிலிருந்து இவர்களைத் திசை திருப்பிட நினைத்த சிவன் மகாவிஷ்ணுவை மோகினி என்ற அழகிய பெண்ணாக வடிவெடுத்துச் சென்றார். மோகினி தாருகாவனத்தில் வேள்வி பகுதிகளை வளம் வந்த போது அவள் அழகில் மையலுற்ற ரிஷிகள் தங்களின் வேள்விகளைத் துறந்து மோகினியைப் பின்தொடர்ந்தனர், பின்னர் உண்மையை அறிந்த அகம்பாவத்தை, இவ்வறியாமையினால் துறந்தனார். இந்நிலையில் மோகினியினால் ஈர்க்கப்பட்ட சிவன் மோகினியுடன் இணைந்தால் தோற்றம் பெற்றவர் ஐயப்பன் ஆவர். இப்புராண நிகழ்வு நாட்டுப்புற வழக்காற்றில் ஐயனார் என்பவருடன் தொடர்புபடுத்தப்படுகிறார்.

  ஐயனார் என்பவர் பொதுவாகக் காவல் தெய்வம் என்ற நிலையில் வழிபடப்படுகிறார். இவ்வழிபாடு தொடர்பான சான்றுகள் என்பது கி.பி. 4 ஆம் நூற்றாண்டிலிருந்து கிடைக்கப்பட்டுள்ளன. இதில் ஐயப்பன் –அப்பன் என்ற நிலையில் வீரக்கல் வழிபாடு இதற்குச் சான்றாக அமைகிறது. ஐயனார் வழிபாடு என்பது புத்தமதத்தில் நிலவி வந்த தர்மசாஸ்தா வழிபாட்டிலிருந்து வளர்ச்சி பெற்றதாகும் என்றும் ஒரு சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

  படிமக்கலை :

  ஐயனார் கோயில்கள் பெரும்பாலும் கிராமங்களின் புறப்பகுதியில் அமைந்துள்ளது. இச்படிமம் சுதையினால் செய்யப்பட்ட குதிரையின் மீது அமர்ந்தவாறு அமைக்கப்படுவது பொதுவான மரபாகும். செவ்வியல் இந்து மதத்தில் தாக்கம், தொடர்பின் விளைவாக ஐயனார் படிமங்கள் சில இடங்களில் அமர்ந்த நிலையில் இரு புறங்களிலும் தனது தேவிகளான பூரணா மற்றும் புவிகலையுடன் அமைக்கப்படுவதும் உண்டு. மேலும் இப்படிமம் வடமொழியில் யோகப்பட்டா என்று வாகுபட்டாவுடன் காணப்படுவதுண்டு. ஐயனார் படிமம் அமைந்துள்ள கோயில்களில் ஐயனாரின் பணி தெய்வம் என்ற நிலையில் 21 நாட்டுப்புறத் தெய்வங்களுடன் அமைக்கப்படவேண்டும். இவ்வழிபாட்டு மரபுகளில் ஐயனாருக்கு இடப்படும் படையல்கள் சைவ உணவுகளாகவே இருக்கும் சில கிராமங்களில் வழிபடும் மக்களின் தன்மைக்கேற்ற மாமிச உணவும் படையலில் இடம்பெறுவதுண்டு.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:04:43(இந்திய நேரம்)