தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மகிஷாசுரமர்த்தினி

  • மகிஷாசுரமர்த்தினி

    முனைவர் வே.லதா,
    உதவிப்பேராசிரியர்,
    சிற்பத்துறை.

    புராணப் பின்னணி :

    முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் உண்டானது. தேவர்களின் பதவிகள் அனைத்தையும் அசுரர்கள் பெற்றுக்கொண்டு தேவர்களைத் துன்புறுத்தினர். அவர்கள் பூலோகத்திற்கு விரட்டியடிக்கப்பட்டு அலைந்து திரிந்தனர். தேவர்கள் அசுரர்களால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர். இதனை தேவர்கள் அனைவரும் பிரம்மனிடம் சென்று முறையிட்டனர். பிரம்மனின் ஆலோசனைபடி சிவனிடம் சென்று கூறினர். தேவர்களின் நிலையினைக் கேட்டறிந்த சிவன், தேவர்களின் துன்பத்தைப் போக்க என்ன வழி என்று யோசித்தார். மகிஷனின் அழிவு ஒரு பெண்ணால் தான் என்பதை வரமளித்த பிரம்மனிடம் கேட்டு அறிந்தனர். ஆகவே அவ்வரத்திற்கேற்ப ஒரு பெண் சக்தியின் அவசியத்தை அறிந்து, சிவன் தமது சக்தியை வெளிக்கொணர்ந்து ஒரு ஒளியை உருவாக்கினார். இதனைப் போன்றே பிரம்மன், விஷ்ணு, இந்திரன், வருணன், வாயு, குபேரன் போன்ற எண்ணற்ற தேவர்கள் தங்களது உடலிலிருந்து சக்தியினை வெளிக்கொணர்ந்து ஒரே வடிவில், ஒளிவடிவில் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் சேர்ந்து பிரகாசிப்பது போல ஒரு பெண் வடிவை உருவாக்கினர். அந்தச் சக்தியைத் தேவர்களும், கடவுளர்களும் கைகூப்பி வணங்கி நின்றனர். அப்பெண் சக்திக்கு ஒவ்வொரு கடவுளர்களும் தமது ஆயுதங்களை அளித்தனர்.

    மகிடாசுர மர்தினி

    மகிஷாசுரனை வதம் செய்ய உருவாக்கப்பட்ட மகிஷாசுரமர்த்தினி அனைத்து கடவுளர்களின் சக்தியையும், ஆயுதங்களையும் பெற்று மகிஷாசுரமர்த்தினியாகப் போற்றி வணங்கப்பட்டாள். இவள் நான்கு திசைகளைத் திரும்பி பார்க்கும் போது வெள்ளம் கரைபுரண்டது. பிரபஞ்சம் நடுங்கியது. வானுக்கும் பூமிக்கு இடையே உயர்ந்த வடிவுடையவளாக வீற்றிருந்தாள். பிரளயம் உருவானது போல காட்சியளித்தது. பூமித்தாய் அந்தப் பெண் சக்தியின் பாரத்தைத் தாங்க முடியாமல் சலித்துக் கொண்டாள். மர்த்தினியின் சிம்மாசனமான சிங்கம் கர்சனை செய்தது. மகிசனின் அசுரப் படைகளை தேவி லாவகமாக முறியடித்து அசுரர்களைக் கொய்து, அழித்தாள். அசுரன் மாய வேலைகளினால் உடலினை மாற்றி பல்வேறு வடிவில் தேவியை எதிர்த்தான். இறுதியில் எருமைக் கடாவின் உருவத்தில் இருந்த போது தேவி தமது திரிசூலத்தால் அவனது தலையினைத் துண்டித்தாள். மகிஷன் தேவியால் அழிக்கப்பட்டான். தேவர்கள் மற்றும் கடவுளர்கள் அதனைக் கண்டு ஆனந்தமடைந்து தேவியை வணங்கினர்.

    படிமக்கலை :

    துர்க்கையின் உருவான மகிஷாசுரமர்த்தினி பத்து கரங்களைக் கொண்டவர். மூன்று கண்களை உடையவர். தலையில் சடாமகுடம் தரித்தவர். சந்திரகலாவைத் தலையில் சூடியவர். கண்கள் நீலோத் பல மலரினை ஒத்ததாக அமைந்திருக்கும். பருத்த உடலினையும், மெலிந்த இடையினையும் பெற்றவர். அடசி மலரின் நிறத்தினை உடையவர். உடலில் மூன்று பங்கங்களை (திரிபங்கம்) கொண்டவர். வலது கரங்களில் திரிசூலம், கட்கம், சக்தி ஆயுதம், சக்கரம் அம்பு ஆகியவையும் இடது கரங்களில் பாசம் அங்குசம். கேடயம், பரசு, மணி ஆகியவற்றைத் தரித்திருப்பார். இவளின் காலடியில் துண்டிக்கப்பட்ட மகிஷனின் கழுத்திலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருப்பது போல் அமைந்திருக்கும். எருமைத் தலையின் மீது தமது இடது காலினையும், தமது வாகனமாகிய சிங்கத்தின் மீது காலை ஊன்றியவாறும் அமைந்திருப்பார் என்று சிற்பரத்தினம் குறிப்பிடுகின்றன.

    விஷ்ணுதர்மோத்திரபுராணம், மகிஷாசுரமர்த்தினியைச் சண்டிகா என்று அழைக்கின்றது. இவர் இருபது கரங்கள் பெற்றவளாகக் கூறுகிறது. பொன் நிறத்தில் ஒளிருபவளாகவும் சிங்கத்தின் மீது கோபத்துடன் அமர்ந்திருப்பவளாகவும் குறிப்பிடுகிறது. இவளது கைகளில் சூலம், கட்கம், சங்கு, சக்கரம், பாணம், சக்தி, வஜ்ரம், அபயம், டமரு, குடை ஆகியவைகளை வலது கரங்களில் தரித்தும், இடது கரங்களில் நாகபாசம், கேடயம், பரசு, அங்குசம், தனுஷ், கந்தம் (மணி) துவஜம் (கொடி) கதை, கண்ணாடி மற்றும் முத்காரம் (கள்ளி) ஆகியவைகளைத் தரித்திருப்பாள். வலது கையில் ஏந்திய திரிசூலம் மகிஷனின் கழுத்தில் பதித்திருப்பது போல அமைந்திருக்கும். மகிஷனின் விழி பிதுங்கி, புருவங்கள் இரத்தத்தில் நனைவது போலிருக்கும்.

    வரலாறு :

    மாமல்லபுரத்தில் இச்சிற்பம் அமைந்துள்ளது. காஞ்சி கைலாசநாதர் கோயிலில் இடம்பெற்றுள்ளது. பல்லவர்கள் காலத்தில் குடவரைகளில் தோன்றி பின் கட்டுமானக் கோயில்களில் சோழர்களின் தேவகோட்டங்களுக்கு வந்தது. தமிழகமெங்கும் பரவலாக இடம்பெற்றுள்ளது. பல்லவர்களின் குறுநில மன்னர்களான முத்திரையர்களின் குடவரையான மலையடிப்பட்டியில் மகிஷாசுரமர்த்தினி சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. கங்கை கொண்ட சோழபுரத்தில் கலை நயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. முற்கால சோழர் கோயில்களான கீழப்பழுவூர், புள்ளமங்கை, திருவாவடுதுறை, கிராமம், மாஞ்சேரி, ஆரூர் ஆகிய இடங்களிலும் அதற்குப் பின்னர் இடைக்காலத்தில் கங்கை கொண்ட சோழபுரம், திருச்செங்காட்டங்குடி, திருவாசி, நாகப்பட்டினம் கோயில்களிலும், பிற்கால சோழர் காலத்தில் சோழபுரம், மேலக்கடம்பூர், பட்டீசுவரம், துறையூர் ஆகிய கோயில்களில் அமைந்துள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:06:37(இந்திய நேரம்)